தமிழின் முதல் நாவல் எழுத்தாளரான வேதநாயகம் பிள்ளையின் கொள்ளு பேரன்தான் விஜய் ஆண்டனி என்று சொன்னால் நம்பமுடிகிறதா? வாருங்கள் அவர் தாத்தா செய்த நல்ல காரியங்கள் குறித்துப் பார்ப்போம்.
இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி கோலிவுட்டில் அனைவருக்குமே தெரியும். அவ்வளவு புகழ்பெற்ற நடிகரான இவரின் கொள்ளு தாத்தாவும் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமானவர்தான். விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தாவான வேதநாயகம் பிள்ளை, திருச்சியில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளின் மேல் மிகவும் பற்றாக இருந்தார்.
ஆகையால் சிறு வயதிலிருந்து கவிதை எழுதி வாசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆரம்பத்தில் நீதிமன்றத்தில் பதிவாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் வேலைகளை செய்து வந்தவர் வேதநாயகம் பிள்ளை.
இவர்தான் முதன்முதலில் தமிழில் நாவல் எழுதியவர். இவர் 1857ம் ஆண்டு எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்ற தமிழ் இலக்கியத்தின் முதல் நாவலை எழுதினார். இதனாலேயே இவர் தமிழ் நாவலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
1858ம் ஆண்டு சிப்பாய் கலகத்திற்கு பிறகு மதராஸ் மாகாணம் ஏறத்தாழ முழுமையாக கிழக்கிந்திய கம்பெனிக்கு கீழ் வந்தது. இதன் பிறகு, ஆங்கிலேயர்கள் சந்தையில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்தனர். இதனால் உள்ளூர்ச் சந்தைகள் மிகவும் மோசமான நிலை வந்தது. மேலும்1876ம் ஆண்டு எல் நீனோவால் மழை பெய்யாமல் போனது. ஆகையால் 1876 முதல் 1878ம் ஆண்டு பஞ்சம் தலைவிரித்தாடியது. பசி பட்டினியால் மட்டும் அப்போது 52 லட்சத்தில் இருந்து 1.02 கோடி மக்கள் உயிர் இழந்திருக்கலாம் என பல தரவுகள் கூறுகின்றன. இந்த பஞ்சத்தின்போது வேதநாயகம் பிள்ளை தனது மொத்த சொத்தையும் மக்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டார்.
நல்ல உள்ளம் கொண்டவராக இருந்த இவர், வீணை இசையிலும் கைத்தேர்ந்தவராக இருந்தார். மேலும் 16 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
என்னத்தான் தனது தாத்தா இத்தனை பெருமைகளையும் சேர்த்திருந்தாலும், விஜய் ஆண்டனி கஷ்டப்பட்டே இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனெனில், வேதநாயகம் பிள்ளைதான் அனைத்து சொத்துக்களையும் மக்களுக்கு வழங்கிவிட்டார் என்பதால் அவருக்கு அடுத்த தலைமுறையினர் ஒரு சாமான்ய மக்களாகவே இருந்து வந்தனர்.