மக்களைக் கவர மாறுபட்ட தலைப்பா?

Mazhai Pidikatha Manithan
Mazhai Pidikatha Manithan

பெரும் பொருட்செலவில், உடல் உழைப்பில் கூட ஒரு சினிமா படத்தை எடுத்துவிடலாம். ஆனால், ஒரு படத்திற்குப் பெயர் வைப்பது என்பது பெரிய கஷ்டம்தான். டைரக்டரும், தயாரிப்பாளரும் சேர்ந்து ஒரு படத்தின் டைட்டிலை வைத்த பிறகு, ‘அந்த டைட்டில் தங்களுடையது’ என்று உரிமை கொண்டாட பலர் வருவார்கள். பிரச்னை நீதிமன்றம் வரை செல்லும் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இந்த பிரச்னை எதுவுமே விஜய் ஆண்டனிக்குக் கிடையாது. ஏனெனில், விஜய் ஆண்டனி தனது படத்திற்கு வைக்கும் பெயர்களை வேறு எந்தத் தயாரிப்பாளரும் தனது படத்திற்கு வைப்பதை யோசிக்க கூட மாட்டார்கள் என்றே சொல்லலாம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு விஜய் ஆண்டனி தனது படத்திற்கு, ‘பிச்சைக்காரன்’ என்று பெயர் வைத்தார். பலர் இதுபோன்ற டைட்டிலை வைக்கக் கூடாது என்றார்கள். இருந்தாலும் துணிந்து இந்தப் பெயரை வைத்தார் விஜய் ஆண்டனி. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு சைத்தான், எமன், கொலை என்று நெகடிவ் தலைப்புகளையே தனது படத்திற்கு வைத்தார். தற்போது இம்மாதம் இதுபோன்ற ஒரு எதிர்மறை தலைப்பில், விஜய் ஆண்டனி நடிப்பில், 'மழை பிடிக்காத மனிதன்' என்ற படம் வெளியாக உள்ளது.

‘கோலி சோடா’ படத்தை இயக்கிய, ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் 'மழை பிடிக்காத மனிதன் 'படத்தை இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனி படங்கள் என்றாலே படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு எதிபார்ப்பு இருக்கும். இந்த படத்தில் விஜய் மில்டனும் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தின் ட்ரைலர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களில் அதை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து விட்டார்கள். டைரக்டர் விஜய் மில்டன் அடிப்படையில் ஒளிப்பதிவாளராக இருப்பதால் ஒளிப்பதிவின் ஆளுமை படத்தில் தெரிகிறது. “படத்தின் ட்ரைலர் காட்சியில் மழை வருகிறது. ஆனால், 'மழை பிடிக்காத மனிதன்' என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாகள். ஆடியன்ஸை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கவா?” என்று மில்டனிடம் கேட்டால், “இப்போது எதுவும் சொல்ல முடியாது. படம் வெளியான பின்பு படத்திற்கான தலைப்பின் காரணம் புரியும்” என்கிறார்.

இதையும் படியுங்கள்:
வைரலாகும் நடிகர் மம்மூட்டி எடுத்த புகைப்படம்! ஏலம் இவ்வளவு தொகையா?
Mazhai Pidikatha Manithan

இந்தப் படத்தின் ட்ரைலர் விழாவில் பேசிய, ‘பிச்சைக்காரன்’ பட டைரக்டர் சசி, "பிச்சைக்காரன் என்ற தலைப்பை எனக்கு பரிந்துரை செய்ததே விஜய் ஆண்டனிதான். எந்த ஒரு ஹீரோவும் தனது படத்திற்கு இப்படி ஒரு பெயரை வைக்க விரும்ப மாட்டார்கள். இந்தத் தலைப்பை சொன்னவுடன் சொல்வதறியாது திகைத்தேன். ஒரு பிரபல வார பத்திரிகைகூட, ‘தலைப்பை மாத்துங்க’ என்றார்கள். விஜய் ஆண்டனியும், ‘எனது உதவியாளர்களும் தந்த நம்பிக்கையால்தான் ‘பிச்சைக்காரன்’ என டைட்டிலை வைத்தேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பிச்சைக்காரன் போலவே, மழை பிடிக்காத மனிதனும் வெற்றி பெறும்" என்கிறார்.

எதிர்மறையான தலைப்புகள் மக்களை ஈர்க்க ஓரளவு உதவும். ஆனால், படத்தின் வெற்றி என்பது தலைப்பின் பின்னால் இருக்கும் கதையில்தான் இருக்கிறது. இந்த ‘மழை பிடிக்காத மனிதனை’ மக்களுக்குப் பிடிக்கும் என்கிறார் விஜய் ஆண்டனி. 'மழை பிடிக்காத மனிதன்’ மக்களைக் கவர வைக்கப்பட்ட தலைப்பா? அல்லது கதைக்காக வைத்த தலைப்பா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com