
தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநரான சேகர் கம்முலா இயக்கிய உருவான 'குபேரா' திரைப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தனர். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை சுமார் 120 கோடி பட்ஜெட்டில் தயாரித்து இருந்தது. கடந்த மாதம் 20-ம்தேதி உலகளவில் வெளியான இந்த படம் தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி உலகளவில் இதுவரை ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் முத்திரையைப் பதித்துள்ளது. தமிழில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ‘குபேரா’, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
இந்த படத்தின் மூலம் நடிகர் தனுஷிற்கு தெலுங்கு மார்கெட் உயர்ந்ததுடன், தங்கள் படங்களில் நடிக்க வைக்க தனுஷின் கால்ஷீட்டிற்காக தயாரிப்பாளர்கள் காத்து கிடக்கின்றனர்.
இந்நிலையில், ‘குபேரா’ படத்தில் தேவாவாக பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா என்று முதலில் தனுஷிடம் கேட்கவில்லையாம், மாறாக பிரபல தெலுங்கு நடிகரிடம் தான் கேட்டாராம் இயக்குநர் சேகர் கம்முலா.
ஆனால் அவர் ‘நோ’ சொன்ன பிறகே அந்த வாய்ப்பு தனுஷுக்கு கிடைத்தாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல இயக்குனர் சேகர் கம்முலா படத்திலேயே நடிக்க முடியாதுனு சொன்னது வேற யாரும் இல்லீங்க. நம்ம விஜய் தேவரகொண்டா தான்.
தனது இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்த விஜய் தேவரகொண்டாவை, குபேரா படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கேட்டாராம் சேகர் கம்முலா.
ஆனால் சேகர் கம்முலா சொன்ன கதை விஜய் தேவரகொண்டாவுக்கு மிகவும் பிடித்திருந்திருந்தாலும், குபேராவில் பிச்சைக்காரனாக நடித்தால் தன் இமேஜ் பாதிக்கப்படும் என்று நினைத்து என்னால் உங்கள் படத்தில் நடிக்க முடியாது என கூறி விட்டாராம். ஏனெனில் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் தன்னை பிச்சைக்காரனாக நடித்தால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அஞ்சினாராம் நடிகர் விஜய் தேவரகொண்டா.
ஆனால் அதேநேரம் டாப் ஹீரோவாக வலம் வரும் தனுஷிடம் கேட்டபோது தனது இமேஜை பற்றி கவலைப்படாமல், பிச்சைக்காரன் கேரக்டரா, இதுவரைக்கும் நான் அந்த கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. அதனால் கண்டிப்பாக நடிக்கிறேன்னு சொல்லி குபேரா படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். இதை அறிந்த ரசிகர்கள் நல்ல சான்ஸை விஜய் தேவரகொண்டா மிஸ் பண்ணிவிட்டதாக கூறி வருகின்றனர்.
தன் புதுமுயற்சியை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்று நம்பிய தனுஷின் நம்பிக்கை வீண்போகவில்லை. படத்தில் அவர் பிச்சைக்காரனாகவே வாழ்ந்ததை பார்த்து அனைவரும் மிரண்டு போயிருக்கிறார்கள். தனுஷின் இமேஜ் இந்த படத்தின் மூலம் பலமடங்கு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
முன்னணி ஹீரோக்கள் செய்யத் தயங்கும் விஷயத்தை நடிகர் தனுஷ் அசால்டாக செய்துள்ளதாக ஏராளமானோர் கூறி வருகின்றனர். தமிழில் மட்டுமல்ல குபேரா படத்திற்கு பிறகு தெலுங்கிலும் தனுஷை ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டனர். இந்த படத்தில் தனுஷின் நடிப்புக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.