
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் உருவான ‘கிங்டம்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. விஜய் தேவரகொண்டாவின் 13-வது படமாக கிங்டம் திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.படத்தின் முன்னோட்ட பணிகளுக்காக (புரமோஷன்) படக்குழுவினர் முக்கிய நகரங்களில் முகாமிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் ஹைதரபாத்தில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது மிகப்பெரிய சர்ச்சையாகி அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்த கண்டனத்தை தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது, ‘காஷ்மீரில் நடக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு இருக்கிறது. அவர்கள் மூளைச்சலவை செய்யப்படாமல் தடுத்தாலே போதும். எந்த பிரச்னையும் இருக்காது. காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. காஷ்மீர் மக்களும் நம்முடையவர்கள் தான்.
இந்திய அரசு பாகிஸ்தானைத் தாக்க வேண்டிய அவசியமில்லை. மக்களே அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் மக்கள் போல அவர்கள் இப்போதும் நடந்துகொள்கிறார்கள். பொது அறிவு இல்லாமல் போராடுகிறார்கள்’, என்று குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தின் வீடியோ கிளிப் வைரலானதைத் தொடர்ந்து, பழங்குடியின மக்களை அவமதித்து விட்டதாக கூறி, விஜய் தேவரகொண்டா மீது தெலுங்கானா மாநிலம் எஸ்.ஆர்.நகர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திரைப்பட நிகழ்வில் நான் தெரிவித்த ஒரு கருத்து மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது. நான் உண்மையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்தவொரு சமூகத்தையும், குறிப்பாக நமது பழங்குடியினரை, நான் ஆழமாக மதிக்கிறேன் மற்றும் நமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதுகிறேன், அவர்களை காயப்படுத்தவோ அல்லது குறிவைக்கவோ எந்த நோக்கமும் இல்லை.
எனது செய்தியின் ஏதேனும் ஒரு பகுதி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டாலோ அல்லது புண்படுத்தப்பட்டிருந்தாலோ, அதற்கு நான் எனது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நான் பேசிய கருத்தில் எந்த உள்நோக்கமும், எந்த ஒரு சமூகத்தையும் குறி வைத்தும் நான் பேசவில்லை. எனது நோக்கம் அமைதி, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையை பற்றி பேசுவது மட்டுமே" என்றார்.
மேலும், முந்தைய காலத்தில் மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்து வந்ததை குறிக்கவே பழங்குடியினர் (டிரைப்) எனும் வார்த்தையை தான் பயன்படுத்தியதாக கூறியதுடன் ஆங்கிய அகராதியை மேற்கோள்காட்டி தனது பேச்சு குறித்து விஜய் தேவரகொண்டா விளக்கம் அளித்துள்ளார்.