விரைவில் கட்சியாக விஜய் மக்கள் இயக்கம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்களுக்கு நலப்பணிகளை செய்து வருகிறார்.
அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பதற்கான அடுத்தடுத்த நகர்வுகளை கடந்தாண்டு முதலே விஜய் தீவிரமாக முன்னெடுத்து வந்தார். குறிப்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை நேரில் வரவழைத்து, அவரது கையால் பரிசு வழங்கி கவுரவித்தார். சுமார் 12 மணி நேரம் நீடித்த இந்த நிகழ்வில், மேடையில் நின்று மாணவர்களை கவுரவித்தார். அப்போது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தனது மேடைப் பேச்சில் அறிவுறுத்தினார்.
இப்படி அரசியல் நகர்வை ஸ்கெட்ச் போட்டு செய்யும் விஜய், சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவி தொகை வழங்கினார். இந்த நிலையில் அரசியலில் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார் விஜய்.
எப்போதும் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தான் விஜய் மக்கள் இயக்கம் கூட்டம் நடைபெறும் நிலையில், தற்போது விஜய்யின் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது கவனத்தை பெற்றுள்ளது.
பனையூரில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. குறிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடலாமா அல்லது ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மாவட்டம் தோறும் இருக்கக் கூடிய மக்கள் இயக்கத்தின் அடிமட்ட தொண்டர்களுக்கு பொறுப்பு வழங்கவும், விஜய் மக்கள் இயக்கத்திற்கான நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் என்றும் விஜய் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதன் மூலம் வரும் தேர்தலில் விஜய் கட்சி தொடங்கி தனியாக போட்டியிடுகிறாரா அல்லது கூட்டணியில் இணைகிறாரா என பேச்சுக்கள் கிளம்பியுள்ளது.