மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தனது மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள 'ஃபீனிக்ஸ்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தனது மகனின் சமீபத்திய நடவடிக்கைகள் தொடர்பாக பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இது திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியின் மகன் நடித்த முதல் படம் வெளியாகியுள்ளது. சூர்யா சேதுபதி தனது முதல் பட அறிமுக விழாவில் பேசிய கருத்துகளும், அண்மையில் பபுள்கம் மென்றபடியே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதும், சில ரசிகர்களிடம் 'கெத்தாக' பேசியதாகக் கூறப்படும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாக ட்ரோல் செய்யப்பட்டன. மேலும், தனது மகனுக்கு எதிராக பரவும் வீடியோக்களை நீக்கக் கோரி, தங்கள் தரப்பில் இருந்து சில அழைப்புகள் சென்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
மேலும் இதற்கு படக்குழுவின் தரப்பில் இருந்து இந்த வீடியோ பதிவிட்ட சேனல்களுக்கு காபிரைட்ஸ் ஸ்ட்ரைக் தரப்பட்டுள்ளது. இது, ஊடகத்தினர் தரப்பில் சர்ச்சயை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில்தான், நேற்று (ஜூலை 2, 2025) நடைபெற்ற 'ஃபீனிக்ஸ்' பட பத்திரிகையாளர் சந்திப்பில், விஜய் சேதுபதி இந்த விவகாரம் குறித்துப் பேசினார். "தம்பிமாருங்க தெரியாமல் பண்ணிருப்பாங்க. எங்கள் தரப்பில் இருந்து யாருக்கேனும் அழைப்பு வந்து மிரட்டல் நடந்திருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்று மனம் திறந்து பேசினார். தனது மகன் மேடையில் இருந்தபோது, "மகனே பார்த்து பண்ணுடா" என்றும் அறிவுறுத்தினார்.
ஒரு நடிகரின் மகன் என்ற முறையில் சூர்யாவிற்கு ஏற்படும் அழுத்தங்கள் குறித்தும், அவர் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஏற்கெனவே பேசியுள்ளதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்தார். முதல் படம் வெளியாவதற்கு முன்னரே தனது மகனுக்காக மன்னிப்பு கேட்கும் நிலைக்கு விஜய் சேதுபதி ஆளானதை எண்ணி ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், தனது மகனின் செயல்களுக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட விஜய் சேதுபதியின் நேர்மையையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.