

விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் 'இஞ்சி வெல்லம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை மாலை வெளியாக உள்ளது. செக்கச் சிவந்த வானம் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மல்டி ஸ்டார் திரைப்படமான 'செக்கச் சிவந்த வானம்' அப்போதே பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றிருந்தது. அந்த திரைப்படத்தில் ஏராளமான கதாநாயகர்கள் நடித்து இருந்தாலும் , இறுதி காட்சியில் விஜய் சேதுபதி தான் கதாநாயகன் என்பது தெரிய வரும்.
ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் - விஜய் சேதுபதி கூட்டணி அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். வழக்கம்போல மணிரத்தினத்தின் இந்த திரைப்படத்திற்கும் இசைப்புயல் ஏஆர்.ரஹ்மானே இசை அமைக்கிறார். மணிரத்னம் லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து தனது சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் தயாரித்து உள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் 23 வது திரைப்படம் இது.
இந்த திரைப்படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய தகவல்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ காட்சிகளில் கொல்கத்தா நகரின் புகழ்பெற்ற பல்வேறு இடங்கள் மற்றும் வங்கக் கலாச்சாரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதை வைத்து இந்த திரைப்படம் கொல்கத்தா நகரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் சுவாரஸ்யம் கலந்த காதல் திரைப்படமாக இருக்கும், என்று ரசிகர்கள் தகவல்களை பகிர்ந்தனர்.
இது ஒரு காதல் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் , அடுத்தடுத்து வெளியான புகைப்படங்களில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவியுடன் இரட்டை சிறுமிகள் இடம்பெற்றது படத்தின் கதை எந்த எந்த வகையில் இருக்கும்? என்று யூகிக்க முடியாத அளவிற்கு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். படத்தின் தலைப்பை வைத்து பார்க்கும் போது ஒரு புறம் இஞ்சி போன்ற காரமும், மறுபுறம் வெல்லத்தின் இனிமையும் கொண்ட, காதல் மற்றும் குழந்தைகளின் குறும்புத் தனம் மிகுந்த ஒரு திரைக்கதையாக மணிரத்னம் உருவாக்கி இருக்கலாம்.
இதற்கு முன்னர் மணிரத்னம் 'அஞ்சலி' என்கிற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு இருப்பார். குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதைக்களம் கொண்ட , பெரிய வெற்றி பெற்ற அந்த திரைப்படத்தில் , முக்கிய கதாபாத்திரமாக குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். ஒரு அடுக்குமாடி வளாகத்தில் வசிக்கும் சிறுவர் மற்றும் சிறுவர்களின் மகிழ்ச்சி மற்றும் சோகங்களை வெளிப்படுத்தும் திரைப்படமாக அஞ்சலி அமைந்து இருந்தது.
அதன் பின்னர் மணிரத்னம் இயக்கியிருந்த பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற 'பம்பாய்' திரைப்படத்திலும் இரண்டு குழந்தை நட்சத்திரங்களுக்கு இரண்டாம் பாதியில் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருப்பார். அந்த திரைப்படம் மதக் கலவரத்தில் சிக்கிக் கொள்ளும் சிறுவர்களை பற்றியது. அதேபோல் மணிரத்னத்தின் இன்னொரு திரைப்படமான 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படம் , வளர்ப்பு பெற்றோரால் வளர்க்கப்படும் ஒரு சிறுமி தன் தாயைத் தேடி போரால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு செல்லும் கதையைக் கொண்டிருக்கும்.
இஞ்சி வெல்லம் திரைப்படம் ஜனவரி 29 , 2027 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ' ஆச்சி ஆச்சி ' நாளை(நவ. 25) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.