
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர், குறும்படங்களின் மூலம் தனது சினிமா வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தார் விஜய்சேதுபதி. பின்னர் படிப்படியாக சிறிய வேடங்களில் நடித்து வந்த அவருக்கு தென்மேற்கு பருக்காற்று திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒருஅடித்தளம் அமைத்து கொடுத்தது. அதன் பின்னர் வந்த படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததுடன் முன்னனி நடிகர்கள் வரிசையில் நிறுத்தியது.
கதாநாயகன், வில்லன் என எந்த வேடத்திற்கும் பொருந்து வகையில் தனது நடிப்பு திறமையால் மக்களின் மனதில் நீங்க இடம் பெற்றுள்ள விஜய்சேதுபதி தற்போது தனது மகன் சூர்யாவையும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறக்கி உள்ளார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், இந்த படங்களில் சூர்யா தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய போதும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், விஜய்சேதுபதியின் சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் மூலம் கதாநாயகனாக சூர்யா விஜய்சேதுபதி அறிமுகமாகவுள்ளார். இப்படத்திலிருந்து சூர்யா சேதுபதி என்கிற பெயரில் திரைத்துறைக்கு அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் ‘யாராண்ட’, ‘இந்தா வாங்கிக்கோ’ பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இதற்கு முன் வெளியான டீசரில், முதல் காட்சியே சிறுவர் சீர்த்திருத்த சிறையுடன் தொடங்கியது. கையில் விலங்குடன் குற்றவாளியாக சீர்த்திருத்த பள்ளியில் முகத்தை மூடிய நிலையில் சூர்யா விஜய்சேதுபதி காணப்பட்டார். பின்னர், ஒரு பாக்ஸிங் வீரரைப் போல சண்டைக் காட்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஆக்சன் கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்தாண்டு நவம்வர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த இப்படம், தணிக்கைச் சான்றிதழ் பிரச்சனைகளால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ‘பீனிக்ஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.