மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய பான் இந்தியா திரைப்படம், நேற்று ஹைதராபாத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் வகையில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம், இந்தியத் திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் சேதுபதி இறுதியாக நடித்த ஏஸ் படம் வெளியாகி ரசிகர்களின் மோசமான விமர்சனத்தை பெற்றது. விமர்சனங்கள் வந்ததைவிட வந்த வேகத்தில் படமே திரையரங்கில் இருந்து வெளியேறியது. இதற்கிடையே விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் தலைவன் தலைவி படத்தின் அப்டேட் வெளியாகி நல்ல வரவேற்பை பெறுவதுடன், பெரும் எதிர்பார்ப்புகளை தாங்கி நிற்கிறது. ‘டிரெயின்’ படத்தையும் தன் கைவசம் வைத்துள்ளார் விஜய் சேதுபதி.
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் இந்தப் படத்தை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இதுவரை ஏற்றிராத ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடிக்கிறார். மேலும், பாலிவுட் நடிகை தபு, கன்னட நடிகர் துனியா விஜய், மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த நிலையில், இந்தப் பான் இந்தியா திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் தலைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், படக்குழுவினர் படப்பிடிப்பை முழுவீச்சில் தொடங்கியுள்ளனர். இந்த திரைப்படம் இந்திய அளவில் அனைத்து மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ஒரு வெற்றிப் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.