மக்கள் தொகை கணக்கெடுப்பு: பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்!
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் பரவலால் 2021 இல் நடக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் தள்ளிப்போனது. மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு கடந்த ஜூன் 16 ஆம் தேதி அறிவித்தது.
இதன்படி வருகின்ற 2026 ஏப்ரல் 1 முதல் வீடுகளை கணக்கெடுக்கும் பணியும், அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் பனிப்பொழிவு நிறைந்த ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பும், 2027 மார்ச் 1 முதல் மற்ற மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடக்கவிருக்கிறது. இத்துடன் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பும் எடுக்கப்பட இருக்கிறது. இந்தத் தேதி மாறுதலுக்கு உரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் இம்முறை டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் சுமார் 34 இலட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். முற்றிலும் டிஜிட்டல் மயமான இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் பெயரை சேர்க்க முடியும் என்பது கூடுதல் அம்சமாக பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் இப்போதே மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இதற்காக தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த இணையதளம் இரண்டு கட்ட கணக்கெடுப்பிலும் செயல்படும்.
தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்பட பிராந்திய மொழிகளில் மொபைல் செயலிகளின் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. பணியாளர்கள் பொதுமக்களின் தரவுகளை சேகரித்து மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்வார்கள். இந்தத் தரவுகள் நேரடியாக மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணைய சர்வரில் சேமிக்கப்படும். டிஜிட்டல் முறை என்பதால் மக்கள் தொகை விவரங்களின் பாதுகாப்புக்கும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளது.
முன்பெல்லாம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதன் முடிவுகள் வெளியாக ஓராண்டு தேவைப்படும். ஆனால் தற்போது டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவிருப்பதால், மிக விரைவிலேயே முடிவுகள் தெரிந்து விடும். இது இந்தியாவில் எடுக்கவிருக்கும் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். சுதந்திரம் பெற்ற பிறகு எடுக்கப்படும் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.