

விஜய் டிவியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் புகழ். இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சியில் காமெடியனாக அறிமுகமாகி இருந்தாலும், சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோ மூலம் தான் அவருக்கு பேரும், புகழும் கிடைத்ததுடன் மக்களின் அமோக ஆதரவும் அவருக்கு கிடைத்தது.
டிவி நிகழ்ச்சி மூலம் மக்களின் கவனம் ஈர்த்த புகழ் அதனை தொடர்ந்து சினிமாவிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத்தொடங்க அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு முன்னேறி வருவதுடன் பிஸியாகவும் நடித்து வருகிறார். சிக்ஸர், கைதி, காக்டெயில், யானை, சபாபதி, வலிமை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள புகழ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான Mr.Zoo Keeper என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகி உள்ளார். சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் தனக்கு வாழ்க்கை கொடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மறக்காத புகழ், தற்போதுவரை அந்நிகழ்ச்சியில் கோமாளியாக அசத்தி வருகிறார்.
இந்நிலையில் புகழ் 2022-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான பென்ஸி ரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2023-ம் ஆண்டு ரிதன்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் தான் புகழ் தனது மகள் ரிதன்யாவின் பிறந்த நாளை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி இருந்தார். பிறந்த நாள் விழாவிற்கு சினிமா துறையை சேர்ந்த பல பிரபலங்களையும் அழைத்திருந்தார். அதுமட்டுமின்றி முதல் பிறந்தநாளில் தான் தன்னுடைய மகளின் முகத்தையும் வெளி உலகிற்கு காட்டினார். ரிதன்யா தன் தந்தைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறுவயதிலேயே உலக சாதனைகளை படைத்து வருகிறார்.
கடந்தாண்டு 2 கிலோ டம்புள்ஸை இடைவிடாமல் அதிக நேரம் தூக்கிய குழந்தை என்ற சாதனையை படைத்திருந்தார் ரிதன்யா. 11 விநாடிகள் தூக்கி ரிதன்யா இந்த உலக சாதனையை படைத்திருந்தார். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். பிறந்த 11 மாதம் 14 நாட்களில் அதிக படிகள் ஏறிய குழந்தை என்ற சாதனையையும் படைத்துள்ளார் ரிதன்யா. இந்த சாதனையை படைத்ததன் மூலம் international book of records என்ற புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் ரிதன்யா. அவர் மொத்தம் 45 படிகள் தொடர்ச்சியாக ஏறி இந்த உலக சாதனையை படைத்திருக்கிறார் ரிதன்யா.
இதனை புகழ் பெருமையுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இதோ 2-வது உலக சாதனை பிறந்து 11 மாதங்களில் முடிச்சாச்சு’ என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த சினிமா பிரபலங்களும் அவரது ரசிகர்களும் புகழ் மற்றும் ரிதன்யாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.