விமர்சனம்: விருந்து - இன்னும் கொஞ்சம் சுவை தேவை!
ரேட்டிங்(3 / 5)
இந்தியாவில் பல மொழிகளில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள் வந்து கொண்டிருந்தாலும், மலையாள மொழியில் உருவாகும் திரில்லர் படங்களுக்கு இணையாக பிற மொழிகளில் த்ரில்லர் படங்கள் இல்லை என உறுதியாக கூறலாம். மாறுபட்ட கதையின் மீது திரைக்கதையை யாரும் யோசிக்க முடியாத வகையில் உருவாக்குவதுதான் இதற்கு காரணம். இந்த வகையில் அர்ஜுன், நிக்கி கல்ராணி நடிப்பில் திரில்லர் மலையாள படமாக வெளி வந்துள்ளது விருந்து. இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு தமிழ் நாட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது. தாமிர கண்ணன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
ஒரு பிரபல தொழிலதிபர் கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். இவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. யாரோ கொலை செய்துவிட்டு பிணத்தை கடலில் போட்டுள்ளார்கள் என்று காவல் துறைக்கு தெரிய வருகிறது. சில மாதங்களில் தொழிலதிபரின் மனைவியும் கொலை செய்யப்படுகிறார். இவர்களது மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அறிந்து கொள்ளும் குடும்ப நண்பர் மகளை அடர்ந்த காட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கிறார். அங்கே அர்ஜுனின் நட்பு மகளுக்கு கிடைக்கிறது. அர்ஜுனின் செயல்பாட்டை பார்த்து சந்தேகப்படும் மகள் அர்ஜுனை கொலை செய்ய முயற்சிக்கிறார். அர்ஜுன் தனக்கும் இந்த கொலைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புரிய வைத்து, கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க உதவி செய்வதாக உறுதி அளிக்கிறார். இருவரும் சேர்ந்து கொலையாளியை தேடுகிறார்கள்.
பொதுவாக, திரில்லர் படங்களில், ஒருவர் கொலை குற்றவாளி என்ற சந்தேகத்துடன் கதை நகரும். திடீரென வேறொருவர் மீது சந்தேகம் செல்லும். இது போல பரபரப்பை ஏற்படுத்தும் காட்சிகள் பல படத்தில் உள்ளன. ரஷீத்தின் இசை படம் பார்க்கும் போது திக் திக் உணர்வை அதிகரிக்க செய்கிறது. ரவிசந்திரன், பிரதீப் நாயரின் ஒளிப்பதிவு சுமாராக இருந்தாலும் மன நிறைவை தருகிறது. அனைத்து விஷயங்களும் சிறப்பாக இந்த விருந்தில் இருந்தாலும் கிளைமாக்ஸ் சரியாக அமையவில்லை என்றே சொல்லலாம். நன்றாக கதையை நகர்த்தி கொண்டு சென்று விட்டு இறுதியில் கடவுள், சாத்தான் என்று கதையை சுத்த விட்டிருக்கிறார் டைரக்டர்.
என்றும் மார்க்கண்டேயன் என்ற பட்டத்தை தமிழ் சினிமாவில் சிவகுமாருக்கு பின்பு அர்ஜுனுக்கு தரலாம் என்று சொல்லும் அளவிற்கு இளமையாக இருக்கிறார் அர்ஜுன். நல்லவனா கெட்டவனா என்ற குழப்பமான கதா பாத்திரத்தில் தெளிவாக நடித்திருக்கிறார். இன்னும் சில வருஷங்கள் நடிச்சிருக்கலலாமே என்று நாம் வியக்கும் அளவுக்கு வரும் காட்சிகள் எல்லாம் ஸ்கோர் செய்கிறார் நிக்கி கல்ராணி. ஆதி சார், நிக்கி மேடம் இன்னும் சில வருடங்கள் சினிமாவில் நடிக்கட்டும் - இது ரசிகர்கள் சார்பில் வைக்கும் கோரிக்கை. ரமேஷ் பேரடி, முகேஷ் என மலையாள வாடையில் தமிழ் பேசும் நடிகர்களின் நடிப்பும் நன்றாகவே உள்ளது
வித்தியாசமான கதைக்களம், சரியான நடிகர்கள் தேர்வு, விறுவிறுப்பான காட்சிகள் என பல விஷயங்களை கவனமாக இந்த விருந்தில் பரிமாறும் டைரக்டர் கிளைமேக்ஸில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இந்த விருந்து இன்னும் சுவையாக இருந்திருக்கும்.