பத்தாண்டுகள். இருபத்தி நான்கு படங்கள். அதில் இருபத்தி இரண்டு படங்கள் பிளாக் பாஸ்டர்கள். இந்த வெற்றிகள் யாருக்காவது சாத்தியப்படுமா. இன்று இருக்கும் சூழ்நிலையில் கண்டிப்பாக முடியாது. ஆனால் நடந்தது. இதை செய்தது ஒரு நடிகரோ, இயக்குனரோ அல்ல. இரண்டு கதாசிரியர்கள். பாலிவுட்டின் ராஜாக்கள் என்று அழைக்கப்பட்ட சலீம் - ஜாவேத் தான் அந்த சாதனையைச் செய்தவர்கள். இன்று வரை பாலிவுட்டில் ஒரு சக்தியாக இருந்து வரும் அமிதாப் பச்சனுக்கு கோபக்கார இளைஞன் என்ற பட்டம் அமைவதற்கு காரணமாக இருந்தவர்களும் அவரது இமாலய வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்களும் இவர்கள் இருவர் தான்.
இவர்களின் இளமைக்காலம் அவ்வளவு இலகுவாக அமைந்து விடவில்லை. இருவருக்கும் இளம் வயதிலேயே அவர்களது தாயார் இறந்து விட்டார்கள். அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்தவர்கள். "அதனால் தான் எங்களது படங்களில் தாயார் சென்டிமென்ட் அதிகம் இருக்கும். எங்களுக்குக் கிடைக்காத பாசத்தை எங்கள் கதாநாயகர்கள் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். இது எங்களை அறியாமல் நடந்தது தானே தவிர அப்பாக்கள் மோசமானவர்கள் எனச் சிந்தித்து எழுதியது கிடையாது" என்கின்றனர் இருவரும்.
ஆங்ரி யங் மென் என்ற தலைப்பிலே அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ஒரு டாகுமெண்டரி இவர்கள் வளர்ச்சியை அலசுகிறது. சலீம் ஜாவேத் இருவரின் பிள்ளைகளால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த டாக்குமென்டரியை இயக்கியுள்ளவர் நம்ரதா ராவ் என்ற பெண். "நாங்கள் இதை இயக்கினால் ஒரு பாசப் பிணைப்பு வந்துவிடும். அதனால் தான் ரத்த சம்பந்தம் இல்லாத ஒருவரை இயக்க வைத்தோம்" என்கிறார் ஜாவேத் அக்தரின் மகளான ஜோயா அக்தர்.
"அவர் என்னைவிடப் பத்து ஆண்டுகள் பெரியவர். அவரை என் அண்ணன் என்றே நினைத்தேன். அவர் சொல்வது தான் வேத வாக்கு" என்கிறார் ஜாவேத் அக்தர்.
ஒரு நடிகராகத் தனது திரை வாழ்க்கையை துவக்கியவர் சலீம். "நான் எழுத ஆரம்பித்தபிறகு தான், நான் நடிகராக லாயக்கில்லை; எனக்கு வந்தது எழுத்து தான் என்பதே தெரிந்தது. அதற்குள் ஐந்தாண்டுகளைத் தொலைத்துவிட்டேன்" என்கிறார் சலீம். "புராணப் படங்கள், காதல் படங்கள், வெளிநாட்டில் எடுக்கப்படும் படங்கள் என்று ஒரே மாதிரி வந்து கொண்டிருந்த காலத்தில் கொஞ்சம் அடிதடி, அம்மா பாசம், என்று கலந்து கட்டி எழுதினால் என்ன என்று நினைத்தோம்."என்கிறார். மசாலா படங்கள் என்று இப்போது சொல்கிறோமே அதற்கு அச்சாரம் போட்டவர்கள் இவர்கள் தான்.
ஐஞ்சீர், தீவார், ஹாத்தி மேரா சாத்தி, ஷோலே, ஷான், யாதோன் கி பாராத், திரிஷுல், டான், காலா பத்தர், ஷக்தி... இந்த லிஸ்ட் கூடிக் கொண்டே போகும். பார்த்தவுடனே தெரியும் இந்தப் படங்களின் தரமும் வெற்றியும். கதை திரைக்கதை சலீம் ஜாவேத் என்று போட்டாலே போதும் படம் துவங்கிய அன்றே விற்றுவிடும். அந்த அளவு கைராசிக்காரர்கள் இருவரும்.
"ஷோலே எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயம். இயக்குனர் ரமேஷ் சிப்பி செலவைப் பற்றிக் கவலைப்படாமல் நட்சத்திரக் கூட்டணியில் ஆங்கிலப் படம்போல் ஒரு கௌபாய் படம்போலச் செய்ய வேண்டும் என்று சொன்னார். ஒரு மாதத்தில் அதற்கான திரைக்கதையைத் தயார் செய்து விட்டோம்."
அந்தக் காலத்தில் மிக அதிக பொருட்செலவில் உருவான படம் அது. அம்ஜத் கான் என்ற புதிய வில்லன் அறிமுகம் ஆன படம். அமிதாப், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், ஹேமா மாலினி, ஜெயா பாதுரி, என நட்சத்திர பட்டாளம். சின்னக் கதா பாத்திரங்கள் கூட முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட படம் அது.
படம் வந்த முதல் நாள் படத்தை நூறு பேர் கூடப் பார்க்க வரவில்லை. மிகப் பெரிய தோல்விப்படம் என விமர்சிக்கப்பட்டது. ஷோக்கள் கான்சல் செய்யும் நிலை வந்தது. தயாரிப்பாளர்கள் தலைமேல் கை வைத்து விட்டார்கள். இவர்கள் இருவர் மட்டுமே தளரவில்லை. மூன்று பெரிய ஆங்கிலப் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் செய்தனர். சலீம் ஜாவேத்தின் மிகப்பெரிய வெற்றி படம். ஒரு கோடிவரை கலெக்ஷன் உறுதி என்று அந்த விளம்பரம் வந்தது. பார்த்தவர்கள் சிரித்தார்கள். இவர்கள் கொஞ்சம் கூட அசரவில்லை. பொறுத்திருங்கள் என்றார்கள். அதன் பிறகு நடந்தது வரலாறு.
படத்தில் இவர்கள் எழுதி அம்ஜத் கான் பேசிய வசனங்களைப் பொது மக்கள் பேச ஆரம்பித்தார்கள். ரிக்ஷாகாரர்கள் முதல், சிறுவர்கள்வரை 'ஹரே ஹோ சம்பா', 'கிதனா ஆத்மீ தி', 'ஆஜ் கா சூசைட் கான்செல்' போன்ற வசனங்கள் நாடெங்கும் ஒலிக்காத இடம் கிடையாது. இந்த ஒரே படத்தின் மூலம் கார் வாங்கிய, வீடு வாங்கிய பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களை நான் அறிவேன் என்கிறார் ஒரு திரை விமர்சகர். ஐநூறு நாட்களுக்கு மேல் ஓடி மிகப் பெரிய சாதனை படைத்தது ஷோலே.
"இது போதாதா. ஏற்கனவே வெற்றியின் உச்சியில் இருந்தபோதே எங்கள் நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும். வாங்கடா என்போம். இப்போது சொல்லவே வேண்டாம். ஒரு படத்தின் போஸ்டரில் எங்கள் பெயர்களைப் போடவே இல்லை. கடுப்பில் உச்சிக்குச் சென்ற நாங்கள் ஒரு ஸ்டென்சில் காட்டிங் செய்து கதை திரைக்கதை சலீம் ஜாவேத் என்று அனைத்து போஸ்டர்களில் அச்சடித்தோம். தயாரிப்பாளர்கள் திகைத்துப் போனார்கள். படம் ஓடுவதற்கு நாங்கள் மட்டுமே காரணம் என்று அவர்களுக்குப் புரிய வைக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை" என்கிறார் ஜாவேத்.
"எங்களிடம் யாரும் இந்தக் காட்சி வேண்டாம். மாற்றி எடுப்போம் என்று சொன்னது கூடக் கிடையாது. சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். எங்களது ஒரு வழிப் பாதை. எங்கள் தொடர் வெற்றிகள் எங்களை எட்டாத உயரத்தில் அமர்த்தி வைத்து விட்டு" என்கிறார் சலீம்.
பதினெட்டு நாட்களில் திரைக்கதை எழுதிய படம் தான் தீவார். இருபது நாட்களில் வசனம் எழுதப்பட்ட , சாதாரண கதை தான். மிகப் பெரிய வெற்றி. ஒரு அம்மா. இரண்டு மகன்கள். ஒருவன் திருடன். இன்னொருவன் போலீஸ். புதுமை கதையில் இல்லை. திரைக்கதையில் தான்.
ஒரு குறிப்பிட்ட ஆண்டு பிலிம்பேர் விருதுகளில் அனைத்தும் இவர்களே வென்று விட்டனர். அதில் மோதிய படங்கள் இரண்டு. இரண்டும் இவர்கள் தான் கதை திரைக்கதை. தீவார், மற்றும் ஷோலே.
"நாங்கள் நாட்டின் மனசாட்சியைத் தொட்டோம். தேசத்தில் மக்கள் படும் பாடுகளைக் காட்டினோம். எங்கள் படக் கதாநாயகனைப் போல் ஒருவன் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவன் தான் அந்தக் கோபக்கார இளைஞன். எங்கள் படங்களின் வெற்றிகள் மக்கள் தங்களின் வெற்றிகளாக நினைத்தது தான் மிக முக்கியக் காரணம்" என்கிறார் சலீம்.