

'தற்கொலை செய்து கொண்ட ஒருவர் வரிசையாக பல கொலைகள் செய்கிறார்' என்ற வித்தியாசமான ஒன் லைன் ஸ்டோரியுடன் வந்துள்ளது பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள ஆரியன் திரைப்படம்.
செல்வராகவன் ஒரு டிவி ஷோவில் கலந்து கொள்கிறார். ஷ்ரத்தா நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் செல்வராகவன் சென்னை நகரத்தில் அடுத்தடுத்து சில கொலைகள் நடக்கப்போகிறது இதை தடுக்க முடியாது என்று சொல்லி விட்டு தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
செல்வராகவன் சொன்னது போல் தொடர்ந்து வெவ்வேறு கொலைகள் நடக்கின்றன. அடுத்து யார் கொலை செய்யப்பட போகிறார் என டிவி, சமூக வலைத்தளங்களில் செல்வராகவன் தோன்றி சொல்கிறார். தற்கொலை செய்து கொண்டவர் எப்படி பேசுகிறார், இந்த கொலைக்கு பின்னால் இருப்பது யார் என போலீஸ் குழம்புகிறது. விசாரணை அதிகாரியாக விஷ்ணு விஷால் நியமிக்கப்படுகிறார்.
இந்த குழப்பதை விஷ்ணு விஷால் எப்படி தீர்த்து வைத்தார் என்று சொல்கிறது மீதிக்கதை.
இறந்தவரே கொலை செய்வது என்ற மாறுபட்ட ஒன் லைனில் தொடங்கும் கதை, இடைவேளைக்கு பின் தடம் மாறி தொடர்பில்லாத விஷயங்களை பேசுகிறது. சரி கிளைமேக்ஸில் ஏதாவது ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்த்தால் கிளைமாக்ஸ் வெறும் உபதேசமாக இருக்கிறது. விஷ்ணு விஷால் நடிப்பில் இன்னொரு ராட்சசனை எதிர்பார்த்தால் ஏமாற்றத்தையே இந்த படம் தருகிறது.
விஷ்ணு விஷால் போலீஸ் கேரக்டருக்கான உடல் மொழியில் பொருந்தி போனாலும், லேசான தாடியுடன் கூடிய முகம் பொருந்தி போகவில்லை. நடிப்பும் சுமார் ரகம் தான். ஷ்ரத்தா, மானசா என இரண்டு ஹீரோயின்களில் ஷ்ரத்தாவிற்கு மட்டுமே நடிக்கும் வாய்ப்பை தந்துள்ளார் டைரக்டர். மானசாவிற்கு திரையில் வந்து போகும் வாய்ப்பு மட்டுமே. செல்வராகவன் மட்டுமே நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். சைக்கோ தனமும், நிதானம் கலந்த பேச்சிலும், நடிப்பிலும் சிக்ஸர் அடிக்கிறார்.
இந்த படத்தை சிறிதாவது திரில்லர் படம் என்று சொல்ல தோன்றினால் அதற்கு காரணம் ஜிப்ரானின் இசை மட்டுமே. திரைக்கதையில் தொய்வு ஏற்படும் போதெல்லாம் ஜிப்ரானின் இசை சற்று ஆறுதல் படுத்துகிறது. விஷ்ணு விஷால் படம் மாறுபட்ட கதை அம்சத்துடன் இருக்கும் என்று இப்படத்திற்கு சென்றால் கதை வித்தியாசமாக உள்ளது. திரைக்கதை சுமாராக உள்ளது.
ஆரியன் - ஏமாற்றம் தான்!