விமர்சனம்: பாகுபலி தி எபிக் - ஒரு மகத்தான திரையனுபவம்!
ரேட்டிங்(4.5 / 5)
இந்தியத் திரையுலகை பாகுபலிக்கு முன் பாகுபலிக்கு பின் எனப்பிரிக்கலாம். ஒரு படத்தை இப்படியும் யோசிக்கலாம்; எடுக்கலாம். நம்பிக்கையும் நடைமுறைச் சாத்தியங்களும் கண்டு பிடித்தால் போதும். இதை நிரூபித்தவர் எஸ்.எஸ் ராஜமௌலி. இந்தியத் திரையுலகில் தோல்வியே கண்டிராத இயக்குநர். ஒவ்வொரு படமும் மாபெரும் வெற்றி. கமர்ஷியல் கதைகளைச் சுவாரசியமாக்கிச் சொல்வதில் அசகாய சூரர்.
ஒரு கனவுக் கதை. மகிழ்மதி என்ற ஒரு கற்பனை நாடு. அதன் வாரிசுகள் பல்வாள்தேவனும் (ராணா டகுபதி), பாகுபலியும் (பிரபாஸ்). இவர்களுக்கிடையில் நடக்கும் போட்டிகள் பொறாமை, துரோகம் இது தான் கதை. முதல் பாகம் வந்த வருடம் 2015. யாரும் எதிர்பார்க்காத ஓர் இடத்தில் முடிந்தது படம். படத்தின் மிக முக்கியக் கதாபாத்திரமான கட்டப்பா (சத்யராஜ்) பாகுபலியின் முதுகில் கத்தியைப் பாய்ச்சிக் கொல்வதோடு முடிகிறது படம்.
கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான் என்ற கேள்விக்கு விடை காணக் காத்திருங்கள் என முடிந்தது. இரண்டு ஆண்டுகள் எங்கு நோக்கினும் இதே கேள்வி தான். படத்தின் மாபெரும் வெற்றி பிரபாஸைப் பான் இந்திய நடிகராக்கி விட்டது. அதன் பிறகு வெளியான படங்கள் அனைத்தும் இதை நோக்கி நகரத் தொடங்கின.
இரண்டாம் பாகம் 2017 இல் வெளியானது. ஏன் கட்டப்பா கொன்றான் என்ற கேள்வி தான் முதல் காட்சி பார்த்த அனைத்து ரசிகர்கள் மனத்திலும். முந்தைய வெற்றியைச் சுலபமாக ஊதித் தள்ளியது. வெளியான இடங்களில், மொழிகளில் எல்லாம் வெற்றி. ராஜமௌலி எட்டமுடியாத உயரத்துக்குச் சென்று விட்டார். படத்தில் நடித்த ரம்யாகிருஷ்ணன் சிவகாமி தேவியாகவே பார்க்கப் பட்டார். அனுஷ்கா, தமன்னா, என அனைவருக்கும் ஒரு சாதனைப் படத்தில் நடித்த திருப்தி.
தொழில்நுட்பம், இசை, சண்டைக்காட்சிகள், ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், வசனங்கள், என ஒவ்வொன்றும் போட்டி போட்டுக் கொண்டன. பாகுபலி பார்க்காத சினிமா ரசிகர்கள் இல்லை என்ற நிலை உருவானது. அப்படி வெளியான இரண்டு பாகங்களை இணைத்து ஒரே படமாக வெளியிட வேண்டும். அதுவும் முதல் பாகம் வெளியான பத்து வருடங்கள் கழிந்து எனத் திட்டமிட்டது இந்தக் குழு. ராஜமௌலி இதிலும் புதிதாக வெளியாகும் படத்திற்கு உண்டான அக்கறையைக் கொடுக்க விரும்பினார். ஐந்தரை மணி நேரப் படம். அதைச் சுருக்கி ஒரே வடிவமாகக் கொடுப்பது சுலபமல்ல. அனைத்தும் நன்றாக இருக்கும் ஒன்றை எப்படி வெட்டுவது. அது தான் மிகப் பெரிய சவால். இரண்டு பாகங்களையும் பார்க்காத நபர்கள் பார்த்தால் எப்படி உணர்வார்கள்.
அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கான உழைப்பு மட்டுமே எட்டு மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார். அதற்கான பலன் கிடைத்ததா.
முதல் பாகத்தை இடைவேளைக்கு முன்பும், இரண்டாம் பாகத்தைப் பின்பும் எனப் பிரித்துக் கொண்டிருக்கிறார். இரண்டுக்கும் சேர்த்து ஒரு டைட்டில் கார்ட் தயார் செய்தார். எபிக் (EPIC) என்று வரும் ஆரம்பமே அமர்க்களம். தமன்னா - பிரபாஸ் காதல் காட்சிகளைப் பெருமளவு கத்தரித்து விட்டார். இரண்டு பாடல்களில் டூயட் வெட்டப்பட்டு விட்டது. தமன்னா அவர் சார்ந்த கூட்டம் சார்ந்த அறிமுகங்கள் வசனங்களாய்க் கடத்தப்பட்டன. மனோகரி என்ற குத்துப் பாடல் சீக்வன்ஸ் மொத்தமாகத் தூக்கப்பட்டது. கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்வியுடன் இடைவேளை. இந்த இடத்தில் ஒரு சுவாரசியம். இதற்கு விடை தெரிய நீங்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டாம் என்று ஒரு கார்ட் வருகிறது.
பாகுபலி, தேவசேனா (அனுஷ்கா) காதல், திருமணம், மகிழ்மதி வருகை. சகோதரர்களுக்கிடையே சண்டை. எனத் தொடர்கிறது. இரண்டரை மணி நேரப் படம் ஒன்று இடைவேளைக்குப் பிறகு பார்ப்பது இது தான் முதன்முறையாக இருக்கும் ரசிகர்களுக்கு. ஆனால் அசரவில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன் எதை ரசித்தார்களோ கைதட்டினார்களோ அதே காட்சிகள் இப்பொழுதும் அதே வரவேற்பைப் பெறுகின்றன.
மக்கள் இதை ஒரு படமாகப் பார்க்கவில்லை. ஓர் அனுபவமாகப் பார்க்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். கண்ணா நீ தூங்கடா பாடல் வெட்டப்படுகிறது. மூன்று பாடல்கள், போர்க்காட்சிகளில் சில நிமிடங்கள், எனத் தொண்ணூறு நிமிடங்கள் கத்தரித்தும் படத்தின் சுவாரசியம் குறையவில்லை. நீளமாகப் போகிறதே என்ற எண்ணமும் வரவில்லை. இன்னொரு இடைவேளை விட்டிருந்தாலும் கல்லா கட்டியிருப்பார்கள் தியேட்டர்காரர்கள். ஆனால் அந்த ரிஸ்க்கை மட்டும் ராஜமௌலி எடுக்கவில்லை. படத்தின் ஓட்டம் பாதிக்கப்படும் என்று நினைத்தாரோ என்னவோ.
இருநூற்று இருபத்து ஐந்து நிமிடங்கள். இவ்வளவு நீளமான ஒரு படம் இனி வருமா எனத் தெரியவில்லை. இரண்டரை மணி நேரத்துக்கு மேலே போனாலே லேக் அடிக்கிறது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நீளத்தைக் குறைக்கச் சொல்லி அழுத்தம் தருகிறார்கள்.
புஷ்பா, அனிமல் படங்கள் மட்டுமே விதிவிலக்கு. பெரிய படங்கள் தோல்வியைத் தழுவின. ஆனால் பாகுபலியை கொண்டாட ரசிகர்கள் தயாராக இருப்பார்கள் என நம்பினார் ராஜ மௌலி.
புதுப் பட வெளியீட்டைப் போலவே டீசர், ட்ரைலர், பேட்டிகள் என ப்ரோமொஷன்கள் நடந்தன. நூறு கோடி ரூபாய் வசூலித்தால் தான் மறு வெளியீட்டுக்கான பணம் திரும்ப வரும் என்று சொல்கிறார்கள். ஐமேக்ஸ், டால்பி, அட்மாஸ், எபிக் எனப் பல தரப்பட்ட பிரிண்ட்கள் போடப்பட்டு இருக்கின்றன. படங்கள் ஒ.டி.டி யில் இருந்தாலும் சிறிய திரைகளில் பார்த்துச் சந்தோஷப்படும் படங்கள் அல்ல இவை. ஒரு மகத்தான திரையனுபவம். அரங்கு நிறையும் ஐமேக்ஸ் திரையரங்குகளின் முன்பதிவுகளே இதற்குச் சான்று.

