இணையத்தில் வைரலான ஹிருத்திக் ரோஷன்-ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து ஆடிய நடனம்..!
பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வார்'. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘வார் 2’, வருகிற 14-ந் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷனுடன், தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ளார். தேசப்பற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஜூனியர் என்.டி.ஆர். முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் ‘வார் 2' படத்தில் இருந்து ஹிருத்திக் ரோஷன் ஜூனியர் என்.டி.ஆர் என இருவருக்கு இடையேயான நடன மோதல் பாடலான ‘ஜனாப் ஏ ஆலி' (தமிழில் களாபா) என்ற பாடல் வெளியிடப்பட்டது. இதில் ஹிருத்திக் ரோஷனும், ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து நடனம் ஆடியுள்ளனர். ஹிருத்திக் ரோஷன் சூப்பராக நடனமாடக்கூடியவர்.
இவருக்கு இணையாக ஜூனியர் என்.டி.ஆரும் இந்த பாடலுக்கு இணைந்து நடனமாடி உள்ளார். இந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடலின் சிறிய பகுதியை மட்டும் வெளியிட்டுள்ள படக்குழு, ‘முழுப் பாடலையும் பெரிய திரையில் கண்டுகளியுங்கள்' என்று கூறியிருக்கிறது. பிரிதம் இசையமைத்துள்ள இந்த பாடலை, பாடகர்கள் சச்சேத் டாண்டன், சாஜ் பட் பாடியுள்ளனர். இதன் பாடல் வரிகளை அமிதாப் பட்டாசார்யா எழுதியுள்ளார்.
வெளியான ஒரே நாளில் 8 மில்லியன் பார்வையை எட்டியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாடல் காட்சியில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரின் நடனமும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. இருவரும் இணைந்து நடனமாடி இருப்பதால், படத்தில் அவர்கள் நண்பர்களா?, எதிரிகளா?, இல்லை நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறுகிறார்களா? என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
அயன் முகர்ஜி இயக்கிய உள்ள இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாக உள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸில் தயாரித்துள்ள இந்த படம் மார்க்கெட்டிங் செலவுகளைத் தவிர்த்து ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.