
வார் 2 யாஷ் ராஜ் பிலிம்ஸின் முக்கியமான பிராஞ்சைஸ். முதல் பாகம் மிகப் பெரிய வெற்றி. அதற்குப் பிறகு அப்படியொரு வெற்றியை யாஷ் ராஜும் சரி, ஹ்ரிதிக் ரோஷனும் சரி, பெறவில்லை. சமீபத்தில் வெளியான சையாரா எதிர்பாராத வெற்றியைப் பெற்று ஐந்நூறு கோடி வசூலை யாஷ் ராஜுக்கு கொடுத்துள்ளது. இவர்களுக்கு வார் 2 கௌரவப் பிரச்சினை.
முதலில் கூலி வருவதால் இதன் வெளியீடு தள்ளிப் போகும் என்று பேசப்பட்டது. ஹ்ரிதிக் ரோஷனுக்கு அடிபட்டதும் அந்தப் பேச்சு அதிகரித்தது. ஆனால் அசரவில்லை யாஷ் ராஜ். நீங்கள் அங்கே என்றால் நாங்கள் இங்கே கெத்து என முடிவு செய்து இறங்க ஆயத்தமானது வார் 2 குழு.
கூலி ப்ரோமொஷன்கள் தாமதமாகவே, முன்னதாகக் களத்தில் இறங்கி டீசர், ட்ரைய்லர், பாடல்கள் என்று இறங்கி அடிக்க ஆரம்பித்தது. இது மட்டுமன்றி இந்தியாவில் உள்ள அனைத்து ஐமேக்ஸ் திரை அரங்கங்களையும் தனது படத்திற்காக நான்கு வாரங்கள் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.
கூலி இதிலெல்லாம் கலந்து கொள்ளவே இல்லை. முதலில் இது ஒரு பெரிய திரை அனுபவம் தானே தவிர ஐமேக்ஸ் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்ற எண்ணம் இருந்ததோ என்னவோ. ஆனால் ஒன்று... ரஜினிகாந்த் படம் என்று வரும்போது படம் மட்டுமே கணக்கு. அது எந்தத் திரையில் என்று இதுவரை ரசிகர்கள் பார்த்ததே இல்லை. ஒவ்வொரு பட வெளியீடும் கொண்டாட்டம் தான். இது போன்ற கொண்டாட்டங்கள் வேட்டையனுக்கும் லால் சலாமுக்கும் நடக்கவில்லை என்பதும் உண்மை. ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரை எந்தப் படத்தைக் கொண்டாட வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. வேட்டையன் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரொம்ப மோசம் என்றெல்லாம் பேர் எடுக்காமல் ஜெயிலர் மாதிரி இல்லை என்ற பேச்சோடு நின்றுவிட்டது. லால் சலாம் பற்றிப் பேசவே வேண்டாம்.
ஜூனியர் என்டிஆர் சேர்ந்து நடிப்பதால் வார் 2 படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருக்கும் என்று நம்பியது குழு. வட இந்தியா ஊடகங்கள் அந்தப் படத்திற்கு முன் கூலி ஒன்றுமே இல்லை என்று பேச ஆரம்பித்தன. ஆனால் மக்களும் ரசிகர்களும் அப்படி எண்ணவில்லை. எதிர்பார்ப்புகள் பற்றிய பேச்சு எழுந்தபோது இரண்டையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தான் கருத்து இருந்தது.
கூலி படத்தின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றால் அதில் ஆமீர் கான் நடிப்பதாக முடிவு செய்தது தான். இது போன்ற கமர்ஷியல் படங்களில் அதிகமாக நடிக்காத அவர் ரஜினி - லோகேஷ் காம்பினேஷன் என்றதும் உடன் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டார். “ரஜினி சாருக்காக நான் இதைச் செய்கிறேன். கதை கூடக் கேட்கவில்லை. எனக்கு லோகேஷ் மீதும் ரஜினி சார் மீதும் நம்பிக்கை இருக்கிறது" என்றார் ஆமீர் கான். இதைவிட அவர் சொன்னது என்னவென்றால் “இது போன்ற ஒரு பாத்திரத்தில் நான் நடித்ததே இல்லை. போனோமா நடித்தோமா. எந்த விதமான முன்தயாரிப்பும் தேவையில்லை. ஜாலியாக இருந்தது" என்றார். எவ்வளவு தான் ரகசியமாக இவர் நடிப்பதைப் பொத்தி வைத்திருந்தாலும் ஒரு கட்டத்தில் அவரே சிடாரே ஜமீன் பர் ப்ரோமொஷனில் உடைக்க வேண்டியதாகி விட்டது. காமிரா முன் என்னால் பொய் பேச முடியாது என்று லோகேஷிடம் சொல்லி அனுமதி வாங்கி சொல்லியும் விட்டார்.
நாகர்ஜுன் அவர் பங்குக்குக் குபேரா ப்ரோமொஷனில் கூலி பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். நாற்பது ஆண்டுகளாக ஹீரோவாகவே நடித்து இதில் வில்லனாக இவரை நடிக்க வைக்கத் தான் பட்ட கஷ்டங்களை லோகேஷ் சொல்ல இவர் 'அது முழுக்க முழுக்க விசில் விசில் விசில் என இருக்கும் படம். ரசிகர்கள் அமைதியாகவே இருக்க முடியாது' என்று அவர் பங்குக்கு ரசிகர்கள் கொண்டாட்டத்தை மேலும் அதிகமாக்கினார். கூலி ஜுரம் பற்றிக் கொண்டது. இதில் ரசிகர்கள் மோதல் வடக்கு தெற்கு என்று பிரிந்து பரபரப்பு கூட ஆரம்பித்தது.
அவர்கள் ப்ரொமோஷன் மேல் ப்ரொமோஷன் செய்யக் கூலி படக் குழுவினர் இறக்கிய ஆயுதங்கள் தான் இரண்டு பாடல்கள். ஒன்று சிக்கிட்டு, இரண்டாவது மோனிகா. அவ்வளவு தான் மொத்தப் பார்வையும் கூலி பக்கம் திரும்பி விட்டது. ஒரே பாடலில் சௌபின்சாஹிர் தமிழகம் முழுதும் தெரிந்த நடிகராகி விட்டார். பூஜா ஹெக்டேவுடன் அவர் போட்ட ஆட்டம் வைரலாகி மிகப் பிரசித்தம் ஆகிவிட்டது. மோனிகா பாடல்கள் இல்லாத திருமண இசை நிகழ்ச்சிகளே இல்லை என்று இருக்கிறது இப்போது.
லோகேஷ் பேட்டி, பாடல்கள் என்று மட்டுமே இருந்த பரபரப்பு ஆடியோ லாஞ்சிலும் ட்ரைலர் வெளியீட்டிலும் தொட முடியாத உச்சத்திற்குச் சென்றுவிட்டது கூலி. வழக்கமாக ஆடியோ லாஞ்சில் ரஜினி பேசுவது மிகப் பிரபலம். இதிலும் அதுபோல் தான். இதைச் சன் டிவி நாளை மாலை ஒளிபரப்புகிறது. அதற்குப் பிறகு இன்னும் ஹைப் கூடும் என்பதே சன் பிக்சர்ஸ் எதிர்பார்ப்பு. ஒரு கட்டத்தில் இது மிகவும் உச்சத்திற்குச் செல்லவே சமீபத்தில் வெளியான சில படங்களுக்கு நடந்தது போல ஆகிவிடக் கூடாது என அடக்கி வாசிக்க முடிவு செய்தனர் கூலி படக்குழுவினர். ஆனால் இந்த ஹைப் என்பது அலாவுதீன் பூதம்போல. வெளியே வந்தது. வந்தது தான். உள்ளே அடைக்கும் வழி தெரியவில்லை.
இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமலோ அல்லது இதே நினைப்பிலோ யாஷ் ராஜ் வார் 2 பற்றிய ப்ரோமொஷன்களை குறைத்துக் கொள்வது போலத் தோன்றியது. இப்படி இருக்கும்போது டிக்கெட் முன்பதிவு களேபரம் ஆரம்பித்தது.
முன்னெப்போதும் இல்லாத அளவு கூலி படத்திற்கான புக்கிங் வெளிநாடுகளில் தீயாய்ப் பற்றிக்கொண்டது. குறிப்பாகத் தென் அமெரிக்காவில். இன்றைய நாள்வரை ஒரு கோடி ரூபாய்கும் மேல் ரிசர்வேஷன் மட்டுமே கொடுத்துள்ளது. இது ஒரு புதிய சாதனை. கூலி ஒரு தென்னிந்தியப் படம். அதற்கு இங்கே மட்டும் தான் வரவேற்பு இருக்கும். வெளிநாடுகளில் வார் 2 ராஜ்ஜியம் தான் என்று நினைத்தவர்கள் இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைகின்றனர். கூலி அதைவிட இரண்டு மடங்கு வசூலுடன் எட்டாத இடத்தில் இருக்கிறது.
நேற்று கேரளாவில் ரிசர்வேஷன் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் ஐம்பதாயிரம் டிக்கெட்கள் விற்றிருக்கின்றன கூலிக்கு. கேரளாவில் முதல் நாளில் மிக அதிக வசூல் கூலிக்கு என்பதில் இப்போதே சந்தேகமில்லை. தமிழகத்தில் நேற்று இரவு எட்டு மணிக்கு முன்பதிவுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பிருந்தே முன்பதிவுத் தளங்களை முற்றுகையிட்டு விட்டனர். புக் மை ஷோ தளம் முடங்கும் அளவு ஒரே நேரத்தில் அனைவரும் மொய்த்தனர். சினிமாவில் காட்டப்படும் மாயாஜாலக் காட்சிகள் போல க்ளிக் செய்வதற்குள் சீட்கள் மறையத் தொடங்கின.
அந்தக் காலை ஒன்பது மணிக் காட்சிக்குத் தான் போட்டி. கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் ஆறு மணிக்கு முதல் காட்சி. தமிழகத்தில் ஒன்பது மணி என்பதே இவர்களுக்கு ஒரு விதமான ஏமாற்றம். ஆனாலும் விடவில்லை. பத்தே நிமிடங்களில் தமிழகத்தின் அனைத்து முன்னணித் திரையரங்குகளிலும் ஒன்பது மணிக் காட்சிக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. கார்பரேட் புக்கிங் காரணமாகச் சென்னை போன்ற நகரங்களில் பல திரையரங்குகளில் புக்கிங் காட்டவே இல்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுவதைப் பார்க்க முடிந்தது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் ரிசர்வேஷன் மூலமாக மட்டுமே ஐந்து கோடி ரூபாய் வரை வசூலாகி இருக்கலாம்.
ஆயிரம் கோடி வசூல். ஏ சர்டிபிகேட் படம். குடும்பங்களாக வரும் ரசிகர்கள் என இதெல்லாம் ஓரத்தில் இருந்தாலும் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும். அது வும் முதல் நாளிலேயே என்பதில் தான் ரசிகர்கள் ஆர்வம் இருக்கிறது. இதுபற்றிப் பேசிய மும்பை, தில்லி, மற்றும் வட இந்தியத் திரையரங்கு உரிமையாளர்கள் சொன்னது இது:
“நடிகர்களில் ஸ்டார், சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் இவை எல்லாம் பட்டங்கள் தான். இதற்கு அப்பாற்பட்ட ஒரு பெயர் ரஜினிகாந்த். எங்களுக்கு இரண்டு படங்களுக்கும் இணையான வேண்டுகோள்களே வந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு இது பெரிய படம் அது பெரிய படம் என்பதெல்லாம் கிடையாது. எத்தனை நடிகர்களுடன் நடித்தாலும் அது ரஜினி படம் அவ்வளவே. அதனால் இரண்டு படங்களுக்கும் இணையாகவே காட்சிகள் ஒதுக்கப்படும். மூன்று நாள்கள் கழிந்து வரவேற்பைப் பொறுத்து அது மாற்றங்களுக்கு உட்படலாம். எங்களுக்கு இரண்டும் ஒன்று தான். ஏன் இரண்டும் வெற்றி பெற்றால் திரையுலகிற்கு நல்லது தானே. எங்களுக்கும் சந்தோசம். இதில் போட்டி என்ன வேண்டியிருக்கிறது. இந்த ஆகஸ்ட் பதினான்கு ஒட்டு மொத்தத் திரையுலகிற்கும் முக்கியமான ஒரு நாள். போட்டிகள் கடந்து அனைவரும் எதிர்பார்ப்பது மிகப் பெரிய வெற்றி. அது நடக்கும்" என்றே நம்புகிறோம் என்று சொல்கின்றனர்.
இந்த இரண்டு படங்களுக்கிடையே நடக்கும் போட்டிகள் எல்லாம் இப்பொழுது மறைந்து விட்டது. எது எவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்ற அனுமானங்கள் தான் வரும் நாட்களில் இருக்கும். இது எல்லாவற்றிற்குமான விடை ஆகஸ்ட் பதினான்காம் தேதி காலை ஒன்பது மணிக்கும் தவறினால் பன்னிரண்டு மணிக்கும் தெரிந்து விடும். அதுவரை ஊடகங்களுக்குப் பரபரப்பிற்குக் கொஞ்சமும் பஞ்சம் இருக்கப் போவதில்லை.