
தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் குறிப்பிடத்தக்கவர் நடிகை நித்யா மேனன். இவரது சிறந்த நடிப்புக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் ரசிகர்களின் செயல்பாடு குறித்து சமீபத்தில் மிகவும் கோபமாக பேசியிருக்கிறார். நடிகைகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை என சில நடிகைகள் குறைகூறி வரும் நிலையில், தற்போது ரசிகர்களின் மீது கோபத்தை வெளிக்காட்டி உள்ளார் நித்யா மேனன்.
தனுஷ் உடன் நித்யா மேனன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதோடு இப்படத்திற்கு தேசிய விருதையும் வென்றார் நித்யா மேனன். அடுத்ததாக காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ரவி மோகனுக்கு கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது தனுஷ் இயக்கும் இட்லி கடை மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் தலைவன் தலைவி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர்கள் மற்றும் நடிகைகளை வெளியில் காணும் போது ரசிகர்கள் அவர்களுடன் கைகுலுக்கி, செல்ஃபி எடுத்துக் கொள்ளவே ஆசைப்படுவார்கள். இது எல்லா இடங்களிலும் நடப்பது தான். பொதுவாக எந்த நடிகர்களும் இதனைப் பெரிதுபடுத்த மாட்டார்கள். ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா என்பதைத் தான் நடிகை நித்யா மேனன் கோவமாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நடிகைகள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அதிகளவில் கூடுவது வழக்கம் தான். இந்நேரத்தில் ரசிகர்கள் எங்களுக்கு கைக் கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும். ஆனால் சிலர் ஒட்டி உரசிக்கொண்டு செல்ஃபி எடுக்க முற்படுகின்றனர். விலகி நின்றாலும், நெருங்கி வருகிறார்கள். நடிகைகள் என்றால் ரசிகர்களின் இந்தச் செயலை கண்டு கொள்ளமாட்டார்கள் என்று நினைக்கிறார்கள் போல. ஆனால் இது முற்றிலும் தவறான செயல். ரசிகர்கள் மிக எளிதாக எங்களைத் தொடுவதற்கு நாங்கள் ஒன்றும் பொம்மைகள் கிடையாது. யாரென்றே தெரியாத பெண்ணிடம் இவர்கள் இப்படி நடந்து கொள்வார்களா? ஆனால் நடிகைகளிடம் மட்டும் இப்படி நடந்து கொள்வது எங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது” என கோவமாக பேசியிருக்கிறார் நித்யா மேனன்.
எதார்த்தமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்கும் நடிகை நித்யா மேனனின் இந்த கோவம் நியாயமானது தான் என சிலர் தெரிவித்தாலும், 'யாரும் வேண்டுமென்றே அப்படி செய்வதில்லை. யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு அனைவரையும் குறை கூறுவதும் சரியாக இருக்காது. ரசிகர்களைக் கண்டால் தூரத்தில் இருந்து கைக்காட்டி விட்டு சென்று விட்டால் இந்தப் பிரச்சினையே இருக்காது' என்றும் சினிமா நிபுணர்கள் கூறுகின்றனர்.