சினிமாவில் நடிகைகளின் ஆதிக்கம் சில ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும். திருமணம் ஆனதும் நடிகைகளுக்கான மவுசு குறைந்து விடுகிறது. தமிழ் சினிமாவில் சிம்ரன் முதல் கொண்டு நயன்தாரா வரைக்கும் இதுதான் எதார்த்தமான நிலைமை. ஆனால் ஒருசில நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து நடிக்கின்றனர். பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த பிறகும் மீண்டு வருகின்றனர். அப்படி ஒரு நடிகையைத் தான் குஷ்பு சமீபத்தில் பாராட்டினார்.
ஒரு காலத்தில் குஷ்பு மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தார். இவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது சின்ன தம்பி தான். இப்போதும் கூட சின்ன தம்பி குஷ்பு என்று சொன்னால் பலருக்கும் அப்படத்தின் காட்சிகள் நினைவிற்கு வந்து செல்லும். பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர், திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அரண்மனை-4 திரைப்படத்தில் கூட ஒரு அம்மன் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
தமிழ் சினிமா எத்தனையோ நடிகைகளைக் கண்டிருக்கிறது. அதில் ஒரு சில நடிகைகள் தான் பல ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை த்ரிஷா என குஷ்பு பாராட்டியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கோலிவுட்டில் அதிக ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க வேண்டிய சூழல் அனைவருக்குமே ஏற்படும். இருப்பினும் அதனையெல்லாம் கடந்து மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிப்பது அசாத்தியமானது. அப்படியொரு நடிகையாகத் தான் த்ரிஷா தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக த்ரிஷா திகழ்கிறார். என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் ஒன் அன்ட் ஒன்லி நடிகை என்றால் அது த்ரிஷா மட்டும் தான்” என குஷ்பு பாராட்டினார்.
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் 96 மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கம்பேக் கொடுத்த த்ரிஷா, தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். தளபதி விஜய்யுடன் லியோ, தல அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் மீண்டு வந்துள்ளார்.
படிக்கும் வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்ட த்ரிஷா, நாடகங்களிலும் நடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற த்ரிஷாவுக்கு, அந்த ஆண்டே நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ஜோடி திரைப்படத்தில், கதாநாயகியின் தோழியாக நடித்தார் த்ரிஷா. அதன்பின் பாலிவுட் நடிகை வராததால் லேசா லேசா திரைப்படத்தில் கதாநாயகியாக உருவெடுத்தார்.
இவரது திரைப் பயணத்தில் சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் மங்காத்தா உள்ளிட்ட படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றன. அன்றிலிருந்து இன்றுவரை த்ரிஷாவின் வளர்ச்சி அபரிமிதமானது. தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கான இடத்தை இளம் கதாநாயகிகள் ஆக்கிரமித்த பிறகும், த்ரிஷாவுக்கான பட வாய்ப்புகள் மட்டும் குறையவில்லை.