சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, பின்னர் நடிப்பிலும் களமிறங்கினார். பின்னர் 2023ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின்மூலம் இயக்குநராக களமிறங்கினார். இப்படி இசையைமைப்பாளராகவும், பாடகராகவும், இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வரும் இவரைப் பிடிக்காத தமிழ் மக்களே இல்லை. ஏனெனில், இளைஞர்களுக்கு தேவையான ஊக்கத்தை தனது வார்த்தைகள் மூலம் கொடுத்து ரசிகர்களுக்கு பிடித்த மனிதராக இருந்து வருகிறார் விஜய் ஆண்டனி.
அந்தவகையில் இவர் இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
தீவிரவாதிகள் காஷ்மீரில் சமீபத்தில் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பலியாகினர். இதன்பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பகைமை வலுத்துள்ளது. சிலர் பாகிஸ்தான் மக்களையே வஞ்சிக்கிறார்கள். மேலும் சிலர் மதவாத பிரச்சனையாக சொல்லி வாதாடுகிறார்கள். சமூக வலைதளங்களில் இதுகுறித்தான பல தரப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. அதேபோல்தான் விஜய் ஆண்டனியும் இதுகுறித்து பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் "காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்கள் என் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மை போல அமைதியும் மகிழ்ச்சியும் மட்டுமே விரும்புகிறார்கள்."
இப்பதிவை கண்டதும் நெடிசன்கள் இவர் பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகையால், இதுகுறித்து தற்போது மீண்டும் ஒரு பதிவை விட்டிருக்கிறார்.
"என் பதிவை தவறாக புரிந்து கொண்டவர்கள் கவனத்திற்கு… காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம் நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையாண்மையை பாதுகாப்போம். "என கூறியுள்ளார்.