
பாறையில் நீரும் சத்தும் மிகவும் அரிதாக இருப்பதால் அங்கு வளர்வன மிகவும் வறண்டு காணப்படுகின்றன. பாறையின் மேல் தளத்தில் வளர்வனவற்றில் பல்வேறு நிலைகள் உள்ளன. அதன் முதல் நிலை...
கற்பாசி நிலை:
கடினமான மேற்பாகமுடைய கற்பாசிகள் வெற்று பாறையில் முதலில் தோன்றுகின்றன. கிராபிஸ், ரிசோகார்பன் போன்றவை மிகுந்த வறட்சியை தாங்கும் நிலையில் உள்ள கற்பாசிகள். இவை அங்கு மெதுவாக வளர்ந்து, அவை வெளியேற்றும் கார்போனிக் அமிலம் பாறையின் மேல் பகுதியை அரிக்க செய்கிறது. இதனால் கற்பாசிகள் வளர்வதற்கு உரிய தாது பொருட்கள் பாறையிலேயே கிடைத்து விடுகின்றன. இந்த பாறை அரிப்பால் கிரஸ்டோஸ் பாசிகள் மடிந்து அந்த இடத்தில் காற்றின் மூலம் பரவி வளரும் பர்மீலியா டெர்மட்டோ கார்பன் மற்றும் பிஸியா போன்ற இலை வடிவ பாசிகள் வளர்கின்றன. இந்த பாசிகள் அதிக நீரை உறிஞ்சுவதுடன் அதிக மண்ணையும், கரிம சேர்க்கைப் பொருட்களையும் தங்களிடம் தக்க வைத்துக் கொள்கின்றன. இதனால் பாறையின் மேல் பகுதியில் நல்ல மண் அடுக்கு உருவாகிறது.
பாறை இடுக்கில் பாலி ட்ரைக்கம் மற்றும் கிருமியா போன்ற தாவரங்கள் வளர்கின்றன. புதை சேற்று நிலத்தில் அதிக மண்ணும் கரியச்சேர்க்கை பொருட்களும் சேர்வதால் அந்த மண்ணில் ஈரப்பதம் அதிக நாட்கள் தங்குகிறது. இது ஹிப்னம், ப்பிரியம் போன்ற ஈரப்பதம் உள்ள மண்ணில் வளரும் தாவரங்கள் வளர வழிவகுக்கிறது. தாவரங்களின் வேர்கள் பாறையைச் சிதைத்து ஊடுருவிச் செல்கின்றன.
பின்னர் பழைய தாவரங்கள் மடிந்து அவை பாறையின் மேற்பரப்பில் பாய் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குகின்றன. பகுதி சிதைக்கப்பட்ட பாதையின் மேல் பரப்பில் அமைந்துள்ள பாய் போன்ற அமைப்பு எலூசைன், அரிஸ்டிக்லா மற்றும் போவா போன்ற ஓராண்டு தாக்கு பிடித்து வளரும் வறண்ட நில சிறு தாவரங்கள் வேரூன்றி வளர இடம் கொடுக்கின்றன. இவைகளின் வேர்கள் பாறைகளை துண்டு துண்டாக பிளந்து, அந்தப் பாறை பிளவுகளில் ஈரப்பதமும் மண்ணும் அதிகரிக்கச் செய்கின்றன. காலப்போக்கில் இந்த தாவரங்கள் மடிந்து சிம்போகன் ,ஹீட்ரோ போகன் போன்ற பல பருவத் தாவரங்கள் அவ்விடத்தில் வளர ஆரம்பிக்கின்றன. அவைகளுடன் பாக்டீரியா பூஞ்சை ஆகிய நுண்ணிய பிராணிகளும் தோன்றி வளர்ந்து மடிந்து மக்கி மண்ணாக மாறுகிறது.
இப்படிப் பாறைகள் மேலும் சிதைவடைவதால் பல வருட தாவரங்கள் இருந்த இடத்தில் ரஸ், ரூபஸ், ரிசிபஸ், கேப்பரிஸ் போன்ற வறட்சியைத் தாங்கி வளரும் புதர்ச்செடிகள் தோன்றத் தொடங்குகின்றன. இந்தப் புதர்ச் செடிகளின் வேர்கள் பாறைகளில் மிக ஆழமாக இறங்குவதால் பாறைகளில் மேலும் பிளவு ஏற்படுகிறது . இதனால் பாறைகளில் அதிக மண் பகுதி உண்டாகிறது. இந்த மண் தாவரங்களிலிருந்து விழுகின்ற இலை, தழைகள், கிளைகள் ஆகியவை மட்கி சத்துள்ளதாகிறது. இதனால் மேலும் வளமாகி அப்பகுதி ஈரம் உடையதாக இருப்பதால் இச்சூழல் பெரிய மரங்கள் வளரவும், பலவிதப் பிராணிகள் அங்கு வாழவும் வழி ஏற்படுகிறது.
பாறைகளில் மண் தளம் அமைவதால் முன்பு புதர்ச் செடிகள் இருந்த இடத்தில் தற்பொழுது குட்டையானதும், திறந்த வெளியில் வளரக்கூடியதும், அதிக வெளிச்சம் தேவைப்படக்கூடியதுமான மர வகைகள் வளரத் தொடங்கி விடுகின்றன. காலப்போக்கில் அங்குள்ள சுற்றுச்சூழல் அதிக ஈரப்பதமும் நிழல்கள் நிறைந்த பகுதியாகவும் மாறுவதால், குட்டை தாவரங்கள் இருந்த இடத்தில் உயர்ந்த மரங்கள் அடர்த்தியாக வளர்கின்றன. இதுவே உச்ச நிலை காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகை காடுகள் அங்குள்ள தட்பவெட்ப நிலையைப் பொறுத்து ஈரப்பதம் உள்ள பகுதிகளில் மழை தரும் காடுகளாகவும், மித வெப்பப் பகுதிகளில் ஊசி இலை காடுகளாகவும், மழை குறைந்த பகுதிகளில் புல்வெளிகளாகவும் அமைகின்றன.