

அரசியலில் தாய்க்கழகம் என்ற ஒரு வார்த்தை வழக்கில் உள்ளது. திரைத்துறையில் அப்படி ஒன்று உண்டா? இந்த கேள்விக்கு பதில் தான் இந்த கட்டுரை.
'தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை' அடிமைப்பெண் படப் பாடல் தாயின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாடல்.
'அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே' மன்னன் படத்தில் இடம் பெற்ற வாலி அவர்கள் எழுதிய இந்த பாடல் இன்று வரையில் முன்னிலை வகிக்கிறது.
திருச்சியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இந்த பாடலுக்காக சிறு கல்வெட்டு வைத்து, அருகில் ஒரு மின்சார சுவிட்ச் வைத்து அதை அமுக்கினால் பாடல் ஒலிக்கும்படி செய்துள்ளார்கள். தாயின் பெருமைகளை அடுத்த அடுத்த தலைமுறைகள் அறிந்து கொள்ள இதை செய்துள்ளார்கள்.
எந்த கவிஞனுக்கும் கிடைக்காத பெருமை இது. இந்த இரண்டு பாடல்களிலும் அம்மாவாக நடித்தது 'பண்டரிபாய்' அவர்கள்.
தாயை முன்னிலைப்படுத்தி பல படங்களை தேவர் பிலிம்ஸ் எடுத்துள்ளார்கள்.
'தாய்க்குத் தலைமகன், தாயை காத்த தனயன், தாய் சொல்லைத் தட்டாதே, தாய்க்குப் பின் தாரம், தாய் மீது சத்தியம், தாயில்லாமல் நானில்லை, தாய் வீடு' போன்ற படங்கள்.
பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக கண்ணாம்பா நடித்துள்ளார்கள். இருந்தாலும் மனோகராவில் 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்ற அனல் பறக்கும் வசனம் இன்று வரையில் அவரை நினைவில் நிறுத்தி வருகிறது.
தாய்க்கழகம் என்று ஒன்று திரைத்துறையில் இருந்திருந்தால் அதை நிறுவிய பெருமை கண்ணாம்பா அவர்களைச் சேரும். அவருக்கு பின்னர் பண்டரிபாய் அதன் பொதுச் செயலாளராக நீண்ட நாட்கள் இருந்து வந்தார். குடியிருந்த கோயில், அடிமைப்பெண், பல்லாண்டு வாழ்க, இதயக்கனி, தெய்வத்தாய் - பிரம்மாண்டமான வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர். படங்களில் அவர்தான் அம்மாவாக நடித்தார்.
கெளரவம் படத்தில் சிவாஜிக்கு அம்மாவாக - பெரியம்மாவாக சிறப்பாக நடித்திருப்பார்.
மன்னன் படம் வரையில் தாய் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் அவர்தான்.
90களில் இந்த பதவிக்கு ஆச்சி மனோரமா வந்தார். 'சின்ன கவுண்டர், சின்னத்தம்பி, இது நம்ம ஆளு, ராசுக்குட்டி, கிழக்கு வாசல்' 90 களில் வெளிவந்த பல படங்களில் தாயாக நடிப்பில் வெளுத்து வாங்கினார். தாய்க் கழகத்தின் அடுத்த பொதுச் செயலாளராக இருந்து வந்தார்.
70 களின் கடைசியில் 'பூவரசம் பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு'ன்னு பாடிக்கிட்டு பாஞ்சாலின்னு ஒரு பொண்ணு கிழக்கே போகும் ரயிலில் வந்தது. யாரு இந்த கிராமத்து பொண்ணுன்னு எல்லாரும் நெனச்சிட்டு இருக்கும் போதே. 'DO YOU KNOW THE VALUE OF LAKH அயோக்கிய ராஸ்கல்?' என்று தன்னுடைய காதலனிடம் கேட்கும் மெட்ராஸ் கேர்ள் ஆக மாறி வந்தார் 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் அதே ரயில் ராதிகா. தனது குரலால் குயிலாக 'முதல் மரியாதை' படத்தில் நடித்த ராதாவின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார்.
பாசமலருக்கு பின்னர் அண்ணன் தங்கை பாசம் சொன்ன 'கிழக்கு சீமையிலே' படத்தில் தெற்கத்தி பெண்ணாக வாழ்ந்தார்.
'இன்று போய் நாளை வா' படத்தில் பழனிச்சாமி சார் என்று கொஞ்சி கொஞ்சி பேசிய அவர்தான் இன்று ஆச்சி மனோரமா நாட்டாமை படத்தில் 'தாய்க்கிழவி' கதாபாத்திரத்திற்கு எழுதிய முன்னுரையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
பவுனுத்தாயாக... 'தாய்க்கிழவி' படத்தில். அவருக்குள் பழைய 'பொன்னாத்தா' இருப்பதை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்த அப்படத்தின் இயக்குனரை பாராட்ட வேண்டும்.
அவரின் வாழ்நாள் சாதனை இப்படம் என்று பலர் பாராட்டுகிறார்கள். தாய்க்கிழவி படத்தின் மூலம் தாய்க்கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியை அபரிமிதமான வெற்றியோடு பிடித்திருக்கிறார்.
இந்த தாய்க்கழகத்தில் துணை பொதுச் செயலாளராக குருவம்மா காந்திமதியும், திருப்புவின் பாட்டி எஸ்.என்.லட்சுமி உட்பட பலரும் மற்றும் சில சாதாரண உறுப்பினர்களும் இருந்தார்கள்.
இந்த தாய்க்கழகத்தின் பதவி காலம் எத்தனை ஆண்டுகள்... சொல்ல முடியாது. இவரை எதிர்த்து போட்டி போடும் தகுதியாளர்கள் யார்... யார்... முருங்கை காய் சமைத்த கமல் சொல்லும் ராட்சஸி 'ஊர்வசி'யும், ஆடி போய் ஆவணி வந்தா அவன் டாப்ல வந்திடுவான்னு சொல்லிக்கிட்டே குன்றக்குடி முருகன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்யும் 'சரண்யா பொன்வண்ணன்' மட்டுமே தற்சமயம் கண்ணுக்கு தெரிகிறார்கள்.
சொல்ல முடியாது ஒரு நாள் திடீரென்று வேறு ஒருவர் வந்து நின்று நம்மை அதிர வைக்கலாம்.
ஏன்னா... சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஒரே பாடலில், அது ஒலிக்கும் அந்த 5 நிமிடத்தில் ஒருவர் உயரத்துக்கு செல்ல முடியும். அதுதான் காலம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடத்தும் அற்புதம்.