
சினிமாவின் வளர்ச்சி பலமடங்கு பெருகி விட்ட இன்றைய நிலையில், ஒரு படத்தை விளம்பரப்படுத்துவது மிகவும் எளிதாகி விட்டது. சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய பின் தான், திரைப்படங்களின் விளம்பர யுக்தி மேலோங்கியுள்ளது. முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தை எடுத்தால் முதலில் இசை வெளியீட்டு விழா நடைபெறும். பிறகு திரைப்படம் ரிலீஸாகும் அவ்வளவு தான். ஆனால் இன்று அப்படி இல்லை.
ஒரு படத்தைத் தொடங்கும் போதே பல அப்டேட்டுகளை ரசிகர்களுக்கு கொடுக்கின்றனர். பிறகு ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பிற்கும் ஒரு அப்டேட், படத்தில் நடிக்கும் நடிகர்களின் பிறந்தநாளுக்கு ஒரு அப்டேட் என படம் வெளியாகும் வரை ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கிறது படக்குழு. இது மட்டுமா அவ்வப்போது முதல் சிங்கிள் மற்றும் இரண்டாவது சிங்கிள் என பாடல்களையும் சமூக வலைதளத்தில் வெளியிடுகிறது படக்குழு.
இப்படி வெளியாகும் பாடல்கள் ஹிட் அடித்து விட்டால், ரிலீஸ் அன்று படத்திற்கான வரவேற்பு கூடும் என படக்குழு நினைக்கிறது. இருப்பினும் தற்போது ஒரு பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவதற்கு ரீல்ஸ் வீடியோக்களும் துணை புரிகின்றன என்பது தான் நிதர்சனமான உண்மை.
சினிமா பாடல்கள் நம் வாழ்வியலோடு கலந்துள்ளன. டேப் ரெக்கார்டர், ரேடியோ, மியூசிக் சேனல்கள் மற்றும் யூடியூப் தளங்கள் வரை அன்றைய காலத்திலிருந்து இன்று வரை நாம் பாடல்களை தொடர்ந்து கேட்டு வருகிறோம். ரீல்ஸ் வீடியோக்களின் வரவுக்குப் பிறகு புதிய பாடல்கள் பலவும் ரசிகர்களைக் வெகு விரைவிலேயே கவர்கின்றன. புதிதாக ஏதேனும் ஒரு பாடல் வெளியானால், அந்தப் பாடலைக் கொண்டு ரீவ்ஸ் வீடியோக்கள் அதிகளவில் உருவாக்கப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக ஒரு பாடல் யூடியூப்பில் எத்தனை மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது என்பதைப் பொறுத்தே அப்பாடலின் வெற்றி உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ரீல்ஸ் வீடியோக்களில் ஒரு பாடல் எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறது மற்றும் பார்வைகளின் எண்ணிக்கையும் பாடலின் வெற்றிக்கு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் வரும் ‘கனிமா’ பாடல், ரீல்ஸ் வீடியோக்களின் மூலம் தான் விரைவில் பிரபலமடைந்தது. அடுத்ததாக தக்லைஃப் படத்தில் வரும் ‘ஜிங்குச்சா’ பாடலும் ரீல்ஸ் வீடியோக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ரீல்ஸ் மோகம் தலைதூக்கியுள்ள இன்றைய காலகட்டத்தில், இது திரைப்படங்களின் புரோமோஷனுக்கும் உதவி வருவது திரைத்துறைக்கு மகிழ்ச்சி தான். பாடல்கள் ஹிட் அடித்தால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தானாகவே அதிகரிக்கும். அவ்வகையில் ஒரு படத்தின் பாடல்கள், தயாரிப்பாளருக்கு எவ்வித செலவுமின்றி ரீல்ஸ் வீடியோக்களின் மூலம் பிரபலமாகின்றன.
சமீப காலமாக புதுப்படங்களில் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி அன்றைய காலத்தில் உருவான பாடல்கள் தற்காலத்தில் மிகவும் பிரபலமடைவது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. படம் வெளியான பிறகு அதில் பயன்படுத்தப்பட்ட பழைய பாடல்கள் கூட ரீல்ஸ் வீடியோக்களில் இடம் பிடித்து விடுகின்றன. சினிமா பாடல்கள் இன்றைய தலைமுறையினரை எளிதில் சென்றடைய ரீல்ஸ் வீடியோக்கள் தான் பிரதான வழி என்றாகி விட்டது.