விமர்சனம்: 'ஒயிட் ரோஸ்' - மணம் இல்லை!
ரேட்டிங்(2 / 5)
கல்யாணம், குடும்பம் என செட்டில் ஆன ஆனந்தி 'ஐ ஆம் பேக்' என ‘ஒயிட் ரோஸ்’ படத்தில் சிறிய இடைவெளிக்கு பின் வந்துள்ளார். ராஜசேகர் இயக்கத்தில் வந்துள்ள ‘ஒயிட் ரோஸ்’ படத்தை பூம்பாறை முருகன் நிறுவனம் தயாரித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வரும் கணவனுடன் மகிழ்ச்சியாக ஊர் சுற்றுகிறார் திவ்யா(ஆனந்தி). ஒரு நாள் கணவன், மகளுடன் வெளியில் செல்லும்போது காவல் துறை நடத்தும் ஒரு தவறான என்கவுன்டரில் கணவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதனால் பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் திவ்யா பணம் சம்பாதிக்க ஒரு தவறான வழியைத் தேர்ந்தெடுக்கிறார். ஒரு சைக்கோ கொலைகாரனால் (ஆர் கே. சுரேஷ் ) கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார். கொலைகாரனிடமிருந்து தப்பிக்க போராட்டம் நடத்துகிறார் ஆனந்தி.
படத்தின் முதல்காட்சியில் வித்தியாசமாக தொடங்கும் கதை இந்த எதிர்ப்பார்பையும், வித்தியாசத்தையும் தக்கவைக்க தவறி விடுகிறது.
ஹீரோயின் தவறான வழியில் போகமாட்டார்; பல பெண்களைக் கொன்ற சைக்கோவால் ஹீரோயினை மட்டும் கொல்லமுடியாது என பல படங்களில் பார்த்த அனுபவம் ரசிகர்களுக்கு இருப்பதாலும், இதே போன்ற காட்சிகளே படமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாலும், படம் பார்க்கும்போது பயப்பட வேண்டிய காட்சிகளில் கொட்டாவி வந்துவிடுகிறது.
வளைவு, யூ டர்ன், வட்டம் என எதுவும் இல்லாமல் ஒரு நேர்கோட்டில் பயணித்து படம் முடிந்துவிடுகிறது. அடுத்தடுத்த காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் சரியாக சொல்லிவிடுகிறார்கள்.
ஒட்டு மொத்த படத்தையும் தனது நடிப்பால் தோளில் சுமப்பவர் கயல் ஆனந்திதான். கணவருடன் வாழும்போது மகிழ்ச்சியான துள்ளல் நடிப்பும் , தன்னை தனது தந்தை வெறுத்து ஒதுக்கும்போது வருந்துவதும், சைக்கோவிடம் மாட்டி தவிப்பதும் என காட்சிக்குக் காட்சி தான் ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்துவிடுகிறார். ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பின்பு கயல் ஆனந்திக்கு நடிப்பை வெளிப்படுத்த நல்ல களம் கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக்கொண்டு விட்டார் ஆனந்தி என்றே சொல்ல வேண்டும்.
ஆர்.கே சுரேஷ் ஹீரோவாக நடிப்பதற்கு பதில் வில்லனாக நடிக்கலாம். ஒரு சைக்கோ வில்லனாக அதிகம் பேசாமல் மிரட்டி விடுகிறார். போலீஸ் அதிகாரியாக வருபவரும் ஆனந்தியின் குழந்தையாக நடிக்கும் சிறுமியும் நன்றாகவே நடித்துள்ளார்கள்.
படம் ஓரளவு ஓகே என்றால், அதில் சுதர்சனின் பின்னணி இசைக்கு பங்கு உள்ளது. இது த்ரில்லர் படம் என்ற உணர்வை கொஞ்சமாவது தருவது இந்த பின்னணி இசைதான். வைரமுத்துவின் பாடல்கள் சுமார். நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என பல அம்சங்கள் ‘ஒயிட் ரோஸ்’ படத்தில் இருந்தாலும் சொல்லவந்த விஷயத்தில் புதுமை இல்லாததால் இந்த வெள்ளை ரோஜா மணம் வீசவில்லை.