தமிழ்ப் படங்களில் ஆங்கில தலைப்புகள் அதிகரிப்பது ஏன்?

Tamil Movies with English Titles
Tamil Cinema
Published on

சினிமாவில் படத்திற்கான தலைப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்பதில் தலைப்பு தான் உறுதுணையாக நிற்கிறது. முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் படங்களின் பெயர்கள் தமிழில் தான் இருந்தன. அத்தி பூத்தாற் போல் ஏதாவது ஒரு படத்தின் பெயர் தான் ஆங்கிலத்தில் இருக்கும். ஆனால் தற்போது இது அப்படியே தலைகீழாக மாறி விட்டது.

பெரும்பாலும் இன்றைய காலத்தில் படங்களின் தலைப்பு ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. தமிழ் மொழி உணர்வை தமிழ்த் திரையுலகம் மறந்து விட்டதா அல்லது இலாப நோக்கத்திற்காக படங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் வைக்கப்படுகின்றனவா என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.

இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி வரிக்கும், தமிழ்ப் படங்களின் பெயருக்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்பு வரை திரைப்படங்களின் பெயரை தமிழில் வைத்தால் வரிவிலக்கை அளித்து வந்தது தமிழ்நாடு அரசு. ஆனால் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பின் இந்த வரிவிலக்கு நீக்கப்பட்டது. இதன்பிறகு படங்களின் பெயர்களில் ஆங்கில மொழி கலக்கத் தொடங்கியது.

ஜிஎஸ்டி வந்த பிறகும் கூட ஒருசில படங்களுக்கே ஆங்கிலத் தலைப்பு இருந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தான் இந்த எண்ணிக்கை மெல்ல மெல்ல உயரத் தெடங்கியது. அதுவும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் மட்டும் ஆங்கிலத் தலைப்பு கொண்ட தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை மிக அதிகம். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடி தளங்கள் மிகவும் பிரபலமானது.

தியேட்டருக்குச் சென்று படம் பார்க்காதவர்கள் கூட ஓடிடி தளங்களில் புதுப்படங்களைப் பார்க்கத் தொடங்கினர். ஓடிடி தளங்கள் பெரும்பாலும் ஆங்கிலத் தலைப்பை விரும்புகின்றன எனவும், அப்போது தான் தமிழ்ப் படங்கள் உலகளவில் பிரபலமாக முடியும் எனவும் இயக்குநர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. திரைப்படங்களின் தலைப்புகள் தான் ஆங்கில மொழியில் வைக்கப்படுகின்றன என்று பார்த்தால், விளம்பரங்களில் கூட ஆங்கில மொழியைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

படத்திற்கான முன்னோட்டத்திலும் தமிழ் மொழி புறக்கணிப்பட்டு வருகிறது. ஆங்கில மொழிப் பயன்பாடு அவ்வளவு தானா என்றால், இன்னும் இருக்கிறது என்று பாடல்களும் வரிசை கட்டி நிற்கின்றன. இன்றைய நவீன காலகட்டத்தில் தமிழ்ப் பாடலில் ஆங்கில வார்த்தைகளைக் கலந்து தான் பாடலே எழுதுகின்றனர்.

இதுவரை 2025 இல் வெளிவந்த பாதி படங்களுக்கும் மேல் ஆங்கிலத் தலைப்பைக் கொண்டவை தான். இனி திரைக்கு வரவிருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல், மெட்ராஸ் மேட்னி, லெமன், ஏஸ், ஸ்கூல், தக் லைஃப், பீனிக்ஸ், டிஎன்ஏ, டியூட் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல படங்கள் ஆங்கிலத் தலைப்பையே கொண்டுள்ளன. இனிவரும் காலங்களிலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தமிழ்ப் படங்கள் உலகளவில் பிரபலமாக வேண்டும் என இயக்குநர்கள் நினைப்பது சரிதான். ஆனால் தமிழ் மொழியின் பெயரிலேயே அது பிரபலமானால்தானே பெருமையாக இருக்கும்.

என்ன நான் சொல்வது சரிதானே?

இதையும் படியுங்கள்:
தமிழ் சினிமாவின் 'கமர்ஷியல் கிங்' யார்?
Tamil Movies with English Titles

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com