
பல வெற்றி படைப்புகளை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மிஷ்கின். 2006-ம்ஆண்டு வெளியான ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவான அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, துப்பறிவாளன் போன்றவை அவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்தன.
2010-ம் ஆண்டு ‘நத்தலால’ என்ற படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அதில் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். வெற்றி, தோல்வியை கடந்து மிஷ்கின் படத்தில் எப்போதும் ஒரு தனித்துவம் உள்ளதால் இவருக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். வசனங்கள் எதுவுமில்லாமல் கோமரா கோணங்களிலேயே கதை சொல்வார்.
சவரக்கத்தி, மாவீரன், லியோ போன்ற சில படங்களில் மிஷ்கின் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனி முத்திரை பதித்தார். கடைசியாக 2020-ம் ஆண்டு ‘சைக்கோ’ படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக படங்கள் இயக்கவில்லை. தற்போது ‘பிசாசு-2' மற்றும் ‘டிரெய்ன்' படங்களை இயக்கி வருகிறார்.
இதற்கிடையில் மிஷ்கின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பரபரப்பு கருத்துகளை தெரிவித்தார். அவர் பேசும்போது, ‘‘பல தொழில்களை செய்துவிட்டு தான் சினிமாவுக்கு வந்தேன். ‘பிசாசு-2', 'டிரெயின்' படங்களுக்கு பிறகு மிஷ்கின் இருந்த இடமே தெரியாமல் போய்விடுவார் என்று பேசுகிறார்கள். சீக்கிரம் சினிமாவை விட்டு விலகவேண்டும் என்று தான் நினைக்கிறேன். நான் சினிமாவில் மகிழ்ச்சியாக இல்லை. நான் சினிமாவில் மகிழ்ச்சியாக இருந்த காலமெல்லாம் போய்விட்டது. நிறைய போட்டி, பொறாமை வந்துவிட்டது. ரத்தம் சொட்ட சொட்டத்தான் நான் சினிமாவில் தங்கியிருக்கிறேன். அதேபோல பட விழாக்களுக்கு வரும்படி என்னை கூப்பிடாதீர்கள். அப்படி நான் வரவேண்டும் என்றால் ரூ.5 லட்சம் தாருங்கள். அது எனக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும். எனவே என்னை கூப்பிடாதீர்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நிறைய படிக்க தொடங்கியிருக்கிறேன்'', என்று பேசினார்.
மிஷ்கின் பல திரைப்பட விழாக்களில் பேசுகையில் நடு நடுவே மனக்கட்டுப்பாடு இன்றி வாய்க்கு வந்ததை பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்டு அவர் பேசிய சில வார்த்தைகள் சர்ச்சையாகி விமர்சனங்கள் எழுந்த நிலையில் நான் இனி அவ்வாறு வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.