
ஒரு சினிமாவின் வெற்றி என்பது கதை, திரைக்கதை என்ற எழுத்தில்தான் உள்ளது என்பதை விமர்சகர்கள் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறார்கள். ஆனால், தமிழ் சினிமா, எழுதாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை தருகிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
நம் அண்டை மாநிலமான கேரளாவில் உருவாகும் மலையாள மொழி திரைப்படங்களில் எழுத்தாளர்களின் பங்களிப்பு மிக அதிகம். அங்கே எழுத்தாளர்களிடமிருந்து கதையை முறையாக பெற்று படமாக இயக்குகிறார்கள். வைக்கம் முகமது பஷீர், தகளி சிவசங்கரன் பிள்ளை, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற ஆளுமை மிக்க எழுத்தாளர்கள் மலையாள சினிமாவில் தங்களின் பங்களிப்பை ஆரம்பம் முதல் செய்து வருகிறார்கள். அங்கே பல இளைய தலைமுறை எழுத்தாளர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் கேரள எல்லைகளையும் தாண்டி வெற்றி பெற்ற த்ரிஷ்யம், ஆடு ஜீவிதம், மஞ்சுமல் பாய்ஸ், துடரும் உட்பட பல்வேறு மலையாள படங்களின் கதைகள் ஆளுமைமிக்க மலையாள எழுத்தாளர்களால் எழுதப் பட்டவைதான். ஆனால் நம் தமிழ் சினிமாவில் நிலைமை தலைகீழ். இங்கே தமிழ் சினிமாவும் தமிழ் இலக்கிய துறையும் தனித்தனியாக பயணிக்கின்றன. இங்கே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்து டைட்டில்களும் டைரக்டர் ஒருவரே 'சுமக்க' ஆசைப்படுவதுதான் காரணம்.
இருந்தாலும் சில நேரங்களில் சில டைரக்டர்கள் தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் கதையை வாங்கி படம் எடுக்கிறார்கள். வெற்றி மாறன் இயக்கிய விசாரணை, விடுதலை போன்ற படங்கள் இதற்கு உதாரணம். இந்த வரிசையில் டைரக்டர் ஏழுமலை அவர்களும் சேர்ந்துள்ளார். இவர் இயக்கும் 'மையல்' திரைப்படத்தை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதி திரைக்கதையும் வடிவமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரைலரை பார்த்த ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற திரைப் பிரபலங்கள் "இந்த ட்ரைலர் மைனா படத்தை நினைவு படுத்துகிறது" என்கிறார்கள்.
இப்படத்தின் ட்ரைலரை மற்றும் ஊடகப் பகிர்வுகளை பார்க்கும் போது, சினிமா என்ற ஊடகத்தின் ஆணிவேர் எழுத்துதான் என்பதை இன்றைய இளைய தலைமுறை தமிழ் இயக்குனர்கள் புரிந்து கொண்டு, எழுதாளர்களை நோக்கி நகர்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
மைனா படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த சேது இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். சம்ரிதி என்ற பெண் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். படத்தின் ட்ரைலர், போஸ்டரை பார்க்கும் போது தனது கதைகளில் எளிய மனிதர்களை பதிவு செய்யும் ஜெயமோகன் இந்த படத்திலும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளார் என்றே சொல்லத் தோன்றுகிறது. படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. 'மையல்' திரையில் மையம் கொள்ளுமா என்பது விரைவில் தெரிந்து விடும்.