விமர்சனம்: யார்றா அந்தப்பையன் நான் தான் அந்தப்பையன் (2026) - ரொமாண்டிக் காமெடி டிராமா!
ரேட்டிங்(2.5 / 5)
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க அறிமுக இயக்குநர் பால்ராஜ் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்து இருக்கும் படம் இது. இவர் யாரிடமும் உதவி இயக்குனர் ஆகப்பணி ஆற்றாமல் ஷூட்டிங்க் வேடிக்கை பார்த்தே தொழில் கற்றுக்கொண்டவர்.
புகழ் பெற்ற பாடல் வரியை டைட்டிலாகக்கொண்ட இந்தப்படம் திரைக்கதை அம்சத்திலும் வித்தியாசமாக இருக்கிறதா? என்பதைப் பார்ப்போம்.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு மெக்கானிக். சொந்தமாக ஒரு மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறார். இவருக்கு ஆறு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை. ஆனால் எந்தப் பெண்ணும் அதற்கு சம்மதிக்கவில்லை. கடைசியில் ஒரு பெண் அவரது கண்டிஷனுக்கு ஓக்கே சொல்ல திருமணம் நடக்கிறது. ஒரு குழந்தையும் பிறக்கிறது. இதற்குப்பின் தான் பிரச்சனை வெடிக்கிறது. ஒரு குழந்தையை வைத்தே என்னால் சமாளிக்க முடியவில்லை. இன்னமும் ஐந்து பேரா? என்னால் முடியாது என நாயகனின் மனைவி ஸ்ட்ரிக்ட் ஆக மறுத்து விடுகிறார். இருவருக்குள் மோதல் ஏற்படுகிறது. ஒரே வீட்டில் இருந்தும் இருவரும் தனித்தனியே இருக்கிறார்கள்.
நாயகி திருமணம் ஆனவர். கணவன் மாமா மகன் தான். ஆனால் குடிகாரன். தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் சண்டை. இவர்களுக்குக் குழந்தை இல்லை. ஆனால் நாயகிக்குக் குழந்தை என்றால் கொள்ளை ஆசை. இப்படிப்பட்ட தருணத்தில் நாயகியின் கணவன் ஒரு விபத்தில் இறந்து விடுகிறான்.
நாயகன், நாயகி சந்திப்பு நடக்கிறது. ஆரம்பத்தில் நட்பாகப் பழகியவர்கள் பின் காதலர்களாக மாறி விடுகிறார்கள்.
நாயகனின் மனைவி ஒரு சந்தர்ப்பத்தில் நாயகனை நாயகியுடன் ஜோடியாகப் பார்த்துவிடுகிறாள். சண்டை வெடிக்கிறது. நாயகன், நாயகி இருவரும் பிரிகிறார்கள். இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித் திரைக்கதை.
நாயகன் ஆக பால்ராஜ் நடித்திருக்கிறார். இவர் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை. முடிந்தவரை சமாளித்து இருக்கிறார் அவ்வளவுதான்.
நாயகனின் மனைவி ஆக காயத்ரி ரேமா குடும்பப்பாங்கான நடிப்பைத் தந்திருக்கிறார்.
நாயகி ஆக ஸ்வேதா ஸ்ரீ நடித்திருக்கிறார். இவரது முக பாவனைகள் அருமை.
வில்லன் ஆக ரவி மரியா நடித்திருக்கிறார். அதிக வாய்ப்பில்லை வந்த வரை ஓக்கே ரகம்.
படத்தில் நடித்த மற்ற துணை நடிகர்கள் ஆன அம்பானி சங்கர், பசங்க பட புகழ் சிவக்குமார் போன்றோர் நடிக்க அதிக வாய்ப்பில்லை, ஸ்க்ரீன் ஸ்பேஸ் தரப்படவில்லை என்றாலும் கொடுத்த கேரக்டரை நன்றாக செய்திருக்கிறார்கள்.
இசை விஜய் பிரபு. பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
ஒளிப்பதிவு உதயன். இரு நாயகிகளை அழகாகவே காட்டி இருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்து இருக்கிறார் நாயகனாக நடித்து இருக்கும் பால்ராஜ்.
சபாஷ் டைரக்டர்
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வரும் ரவி மரியா காட்சிகள் எல்லாம் சுவராஸ்யமாகவே இருக்கிறது.
நாயகி ஆக வரும் ஸ்வேதா ஸ்ரீயின் அழகும் நடிப்பும் தான் படத்துக்குப் பக்கபலம்.
பேமிலி டிராமாவாகக் கொண்டு போகலாம் என்ற இயக்குனரின் முயற்சி குட்.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
நாயகிக்குத்திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகியும் கணவருடன் தாம்பத்ய வாழ்க்கை வாழவே இல்லை என்பதை நம்ப முடியவில்லை. என்ன தான் குடிகாரன் என்றாலும் ஒரு நாள் கூடவா கணவர் ஆக நடந்து கொள்ளாமல் இருப்பார்?
தன்னை நம்பி வந்தவர்களைக்கை விட மாட்டேன் இது தான் என் கொள்கை என்று கூறும் நாயகன் மனைவிக்கு துரோகம் செய்வது ஏற்புடையதாக இல்லை.
நாயகி மேல் ஆசைப்படும் போலீஸ் ஆபீசர் திடீர் எனக்கொலை செய்யப்படுவது அதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் எல்லாம் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சுமாரான, பழக்கப்பட்ட கதை தான், போர் அடிக்காமல் கதை சொல்ல முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குநர்.

