

தன்னுடைய சொந்த ஊருக்கு வருகிறார் ராணுவ சுபேதார் (Subedaar). மனைவியின் நினைவாக ஒரு ஜிப்ஸி ஜீப்பை வாங்குகிறார். அந்த ஊரில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் ஒரு கும்பல். அதன் தலைவன் பிரின்ஸ். இவனுக்கும் சுபேதாருக்கும் ஒரு கட்டத்தில் பிரச்சனை வருகிறது. அது எப்படிப் பெரிதாகிறது. அதிலிருந்து எப்படி வெளியேறினார் என்பது தான் கதை.
இதற்கிடையில் அவர் மகளுக்கும் உடன் படிக்கும் மாணவனுக்கும் ஒரு சண்டை. அந்த ரவுடி மாணவன் அவளுக்குப் பயம் காட்டத் தொடங்குகிறான். அந்தப் பிரச்சனையின் முடிவு என்ன. அது ஒரு கிளைக் கதை.
சுபேதாராக அனில் கபூர். பிரின்ஸாக ஆதித்யா ராவல். கோபமும் கடுமையும் கொண்ட பாத்திரத்தில் அனில் கபூர். தன்னுடைய மனைவியின் மரணத்துக்குக் காரணம் தான் தான் என்று நினைத்து வருந்துகிறார். அதனால் மகள் பேசாமல் இருப்பதைக் கண்டிக்க முடியாமல் தவிக்கிறார். ராணுவத்தில் கௌரவமாகப் பணியாற்றியவர் கொஞ்சம் கூட கட்டுப்பாடு இல்லாத ஊரில் மாட்டிக் கொள்கிறார்.
ஊர் மக்களைக் கட்டுப்படுத்தி சித்ரவதை செய்யும் பிரின்ஸ் இவரிடம் எப்படி மாட்டிக் கொள்கிறார். அந்தக் காட்சியிலிருந்து தான் படம் வேகமெடுக்கத் தொடங்குகிறது. மாணிக்கம் பாஷாவாக மாறியதும் வேறு தளத்தில் பயணிக்கிறது. பிரின்ஸ் மட்டுமே வில்லன் அல்ல. அவனையும் கட்டுப்படுத்தும் ஒரு பெண் உண்டு. அவர் சிறையிலிருந்து கொண்டே ஊரை ஆட்டிப் படைப்பவர்.
தன்னுடைய மனைவியின் நினைவாக இருக்கும் அந்த ஜீப்பின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல் தனிப்பட்ட தாக்குதல் என்று நினைக்கிறார். அதற்காக அவர் எடுக்கும் முடிவுகள், சந்திக்கும் பிரச்சனைகள் போன்றவற்றை ரத்தம் தெறிக்கத் தெரிக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் திரிவேணி. கூடவே மணல் கொள்ளையால் அந்த ஊரில் மரணமடையும் சிறுவர்கள். மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் தொட்டுக் கொண்டிருக்கிறார்.
ஓய்வு பெற்ற ஸுபேதாராக அனில் கபூர் கச்சிதம். இந்தப் பாத்திரத்தை ரஜினி ஏற்று நடித்தால் மிகச் சரியாக இருக்கும். ஆனாலும் விக்ரம் அல்லது விஜய் சேதுபதி போன்றவர்களும் நடிக்கலாம். வில்லனாக ஆதித்யா ராவல், பார்த்த உடனே கடுப்பு வரும் அளவு ஒரு நடிப்பு. நிச்சயம் ஒரு சுற்று வருவார். சிறையில் அமர்ந்து ஊரையே ஆட்டிப் படைக்கும் பாத்திரம் மோனல் சிங்குக்கு. ஆனால் அதைச் சரியாகக் கையாளவில்லை.
சண்டைக்காட்சிகள் தெலுங்குப் படங்கள் போல அமைக்கப்பட்டுள்ளன. சொல்லப் போனால் களமும் காட்சிகளும் இந்திப் படம் போலவே தோன்றவில்லை. இது ரீமேக் செய்யப்படும் சாத்தியம் கண்டிப்பாக உண்டு. இசை ஒலிப்பதிவு ஒளிப்பதிவு அனைத்தும் தரம். அந்தப் புழுதியும், மணலும், களமும் பரபரப்புக்கு உதவி இருக்கின்றன. பல இடங்களில் செட் போட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிவதைத் தவிர்த்து இருக்கலாம். மகளாக வரும் ராதிகா மதனும் பரவாயில்லை. சும்மா வந்து போகும் பாத்திரமல்ல. தைரியத்தில் அப்பாவுக்குக் குறைந்தவர் கிடையாது என்று ஒரு சண்டைக் காட்சியில் நிரூபித்து இருக்கிறார். சௌரப் சுக்லா ஒரு சண்டைக் காட்சியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
குஷ்பு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். பார்க்கப் பாவமாக இருக்கிறது. கதையாவது கத்தரிக்காயாவது. பரபர வென்று போகிறதா. நான்கு சண்டைகள் இருக்கிறதா பொழுது போகிறதா என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். என்ன ஒரு விஷயம்... அடுத்த பாகம் வேறு வரப்போகிறது.