விமர்சனம்: எமகாதகி - இவள் பேயும் அல்ல, தெய்வமும் அல்ல...
ரேட்டிங்(3.5 / 5)
"நம்ம ஊர்ல பொம்பளைங்க பிழைப்பே நிஜத்துக்கும், யதார்த்ததுக்கும் நடுவுல போராடுற பிழைப்பு தான்" என கீதா கைலாசம் 'எமகாதகி' படத்தில் வெடித்து அழும் போது விண்வெளிக்கு பெண்கள் செல்லும் இந்த நாளிலும் நம் நாட்டில், நம் ஊரில், நம் வீட்டில் பெண்களை எப்படி நடத்துகிறோம் என கேள்வி நமக்குள் எழும்புகிறது. வரும் சர்வதேச பெண்கள் தினத்தில் பெண்ணின் குரலாக வந்துள்ளது 'எமகாதாகி'. பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஊர் தலைவராக இருப்பவரின் மகள் (ரூபா கொடுவாயூர்) எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். இறந்த பெண்ணிற்கு அனைத்து ஈம சடங்குகளையும் செய்துவிட்டு, உடலை தூக்கும் போது தூக்க முடியவில்லை. ஊரில் இருக்கும் பல ஆண்கள் சேர்ந்து பிணத்தை தூக்க முயற்சி செய்தும் பயனில்லை. கூடி இருக்கும் சொந்தங்களும், ஊர் மக்களும் இறந்த பெண் ஏதோ சொல்ல நினைக்கிறாள் என்று சொல்லி சாமியாரை அழைத்து வருகிறார்கள்.
சாமியார் சடங்குகளால் பிணத்தை அசைக்க கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில் பெண்ணின் அப்பா தனது மகள் இயற்கையான முறையில் இறக்கவில்லை. தற்கொலை செய்து கொண்டாள் என்கிறார். இந்த விஷயத்தை மோப்பம் பிடிக்கும் காவல் துறை, அப்பெண் எப்படி இறந்தார் என்று விசாரணை செய்கிறது. போலீஸ் என்ன கண்டுபிடித்தது? இது தற்கொலையா? அல்லது கொலையா என பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்கிறாள் இந்த 'எமகாதகி'.
சாதாரண படம் போல் தொடங்கி சில காட்சிகளுக்கு பின் சுவாராசியம் அதிகமாகிறது. மிஸ்ட்ரி Thrilller (அமானுஷ்ய திரில்லர்) வகையில் காட்சிகளை அமைத்து இறுதியில் சமூக மெசேஜ் ஒன்றை சொல்லி இருக்கிறார் டைரக்டர். பெண்ணுரிமை சார்ந்த ஒரு கருத்தை பிரச்சாரமாக இல்லாமல் சஸ்பென்ஸ் பின்னணியில் சொல்லி வெற்றி பெற்றுள்ளார் டைரக்டர்.
பிணத்தை தூக்கும் ஒவ்வொரு காட்சியிலும் 'ஏதோ ஒன்னு வந்துவிடுமோ' என்ற பயம் நமக்குள் வருகிறது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் இறந்த வீட்டையே சுற்றி வந்தாலும் சலிப்பை ஏற்படுத்தவில்லை. சாவுக்கு வந்த மக்கள், அவர்களின் உரையாடல்கள் வழியே சில சமூக பார்வைகளை சொல்லி உள்ளார் டைரக்டர். டைரக்டரின் சிந்தனையை சரியாக உள்வாங்கி, தனது கேமராவில் நேர்த்தியாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுஜித். இவரது ஒளிப்பதிவில் பிணம் கூட 'உயிரோட்டமாக' தெரிகிறது.
செஜின் ஜார்ஜ் பின்னணி இசை நம்மை கட்டி போட்டு விடுகிறது. சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றால் போலீஸ், விசாரணை, ஸ்டைலிஷ் காட்சிகள் மட்டும் தான் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. மண் சார்ந்த மனிதர்கள், கிராமத்து களம் வழியாகவும் திரில்லர் படத்தை தர இயலும் என நிரூபித்து உள்ளார் இயக்குநர்
பிணமாக பல காட்சிகளிலும், உயிருடன் சில காட்சிகளில் நடித்தும், லைவ் நடிப்பால் தனது கேரக்டர்க்கு உயிர் சேர்த்திருக்கிறார் ரூபா கொடுவாயூர். அம்மாவாக நடிக்கும் கீதா கைலாசம் கிளைமாக்ஸ் காட்சியில் தன் மகளை மடியில் கிடத்தி "எல்லாத்துக்கும் அம்மா வரணும்ன்னு சொல்லுவியே... சாகும் போது மட்டும் அம்மா வேண்டாமா?" என சொல்லும் போது, நம் கண்கள் கலங்கி விடுகின்றன. அப்பாவாக வரும் நாடக பேராசிரியர் ராஜு, யதார்த்த கிராமத்து அப்பாவை கண் முன் கொண்டு வருகிறார்.
'எமகாதகி' என்பது நெகட்டிவ் வார்த்தை அல்ல. நம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக எமனாக நடக்கும் பல விஷயங்கள் எதிர்த்து போராடும் ஒவ்வொரு பெண்ணும் 'எமகாதகி'கள் தான் என்கிறது இப்படம். மகளிர் தினத்தில் இப்படி ஒரு படம் தந்ததற்கு டைரக்டரை பாராட்டலாம்.