

கே ஜி எப் என்ற ஒரே படத்தின் மூலம் உச்ச நட்சத்திரம் ஆனவர் தான் கன்னட நடிகர் யாஷ். யாரோ பத்துப்பேரை அடிச்சு 'டாண்' ஆனவன் நான் இல்லை, நான் அடிச்ச பத்துப்பேருமே 'டாண்' தான் என்ற அவரது பஞ்ச் டயலாக்கிற்கு தியேட்டரில் விசில் பறந்தது. கே ஜி எப் பாகம் 2 வந்தபோது அதுவும் மெகா ஹிட் ஆகி உச்ச நட்சத்திரமானார் யாஷ். இப்போது லேட்டஸ்ட்டாக ரிலீஸ் ஆக இருக்கும் டாக்சிக் (Toxic) படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வேற இருக்காங்க, ஆனால் ஜோடி அல்ல.
இந்தப் படத்தின் 'ஸ்னீக் பீக்' ரிலீஸ் ஆனபோதே சர்ச்சை ஆரம்பமானது. அதில் நயன்தாரா சிகரெட் பிடிப்பது போல் ஒரு சீன் வந்ததும் நெட்டிசன்கள் கொதித்தார்கள்.
இப்போது டீசர், ட்ரெய்லர் எல்லாம் வந்து விட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் கீது மோகன் தாஸ். 'ஒரு பெண் இயக்குநரின் படத்தில் இவ்வளவு வன்முறை, ஆபாசமா?' என நெட்டிசன்கள் கொந்தளித்து விட்டார்கள்.
யார் இந்த கீது மோகன் தாஸ்? என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988) என்ற தமிழ்ப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான். மாதவன் நடித்த நளதமயந்தி படத்தில் நாயகி. இவரது இயற்பெயர் காயத்ரி தாஸ். மலையாளத்தில் இவர் இயக்கிய Liar's Dice (2013) என்ற சோசியோ பொலிடிக்கல் பிலிமுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. 'அப்படிப்பட்ட தரமான படம் தந்தவரா இப்படி ஒரு படம் தந்திருக்கிறார்?' என ரசிகர்களுக்கு அதிர்ச்சி.
26/8/2026 அன்று ரிலீஸ் ஆக இருக்கும் இந்தப்படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி. யம்மாடியோவ். கன்னட உலகில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் அதிக பொருட் செலவில் உருவான முதல் படம்.
இவ்வளவு பணம் முதலீடு போட்டது திரும்பக் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
வன்முறைக் கலாச்சாரத்தை லோகேஷ் கனஜராஜ் தான் கமல் நடித்த விக்ரம் படம் மூலம் தொடங்கி வைத்தார். திரைக்கதைக்காக அந்தப்படம் வெற்றி பெற்றாலும், வன்முறை தூக்கலாக இருக்க வேண்டும் என அடுத்தடுத்து வந்த படங்களின் தயாரிப்பாளர்கள் விரும்பினார்கள்.
ரஜினியின் ஜெயிலர், முதல்வர் விஜயின் ஜனநாயகன் அதீத வன்முறைப் படங்களானது இதனால் தான். விஜய் நடித்த படங்களிகளிலேயே ஏ சர்ட்டிபிகேட் வாங்கிய முதல் படம் ஜனநாயகன் தான்.
இப்போது டாக்சிக் படத்துக்கு வருவோம். படத்தின் கதையே ஏற்புடையதாக இல்லை. நாயகன் ஒரு கேங்க்ஸ்டர். நாயகனால் பாதிக்கப்பட்ட அவனது மகனும், மருமகளும் அவனைப்பழி வாங்குவது தான் படத்தின் கதை. அப்பா, மகன் இரு வேடங்களில் யாஷ்.
அப்பாவுக்கு ஜோடி கியாரா அத்வானி. மகனுக்கு ஜோடி ருக்மினி வசந்த். நயன்தாரா அப்பாவுக்குத் தங்கை. அதாவது ஒரு யாஷ்க்கு தங்கை. இன்னொருவருக்கு அத்தை.
டாக்சிக் படம் ட்ரெய்லர் படு பயங்கரம்.
படத்தில் வரும் அனைத்துப் பெண் கதாப்பாத்திரங்களும் சிகரெட்டோ, சுருட்டோ பிடிக்கிறார்கள். சரக்கு அடிக்கிறார்கள். போதாக்குறைக்கு துப்பாக்கியால் கொலையும் செய்கிறார்கள்.
லேடீஸ் & லேடீஸ் ஒத்தையா வரப்போறீங்களா? மொத்தமா வரப்போறீங்களா? என நாயகன் கேட்டுக்கொண்டே 10 பேர் கொண்ட கும்பலுடன் (பெண்களுடன்) சண்டை போடுவதாக ஒரு ஆக்சன் சீக்வன்ஸ் படு பயங்கர வன்முறை.
ஒரு காட்சியில் ஒரு நாயகி நாயகனிடம் உன்னிடம் நாகரீகமான உரையாடல் நடத்த விரும்புகிறேன் என்கிறாள். அதற்கு நாயகன் 'என்னைப் பார்த்தா நாகரீகமானவனாகத் தெரியலையா?' எனக் கேட்கிறான்.
இந்தக் காட்சியில் நாயகன் நிர்வாணமாக இருக்கிறான். இந்த சீன் அனிமல் என்ற ஹிந்திப்படத்தில் வரும் சீன் போலவே இருக்கிறது. தேவையில்லாத ஆபாசம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பலரும் இது கேஜி எப் + அனிமல் + தக் லைப் + புஷ்பா 2 ஆகிய படங்களின் கலவை என்கிறார்கள்.
கமல் நடித்த தக் லைப் படத்தில் நாயகன், நாயகனின் வளர்ப்பு மகன் இருவரும் ஒரே பெண்ணை விரும்புவார்கள். அதாவது கமலின் ஜோடியாக இருந்த திரிஷாவை சிம்புவும் பிற்காலத்தில் விரும்புவார். அதே மாதிரி கதை தான் என்கிறார்கள்.
நாலரை நிமிட ட்ரெய்லரில் நான்கு நிமிடங்கள் யாராவது கத்துகிறார்கள் அல்லது அலறுகிறார்கள். ட்ரெய்லர் பார்த்த பலரும் சொல்லும் வரி.. 'போட்ட பணம் 1000 கோடி ரூபாய் முதலை திருப்பி எடுக்க முடியுமா?' என்பதே.
சென்சார் சர்ட்டிபிகேட் ஏ தான் தந்திருக்கிறார்கள். ஆபாசம், வன்முறை எல்லாம் ஓவர்டோசாகவே இருக்கிறது.
இந்தப்படத்தை இளைய தலைமுறைகள் ஜென் சி கிட்ஸ் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று கவலையாகவும் இருக்கிறது.
'ஒரு பெண் இயக்குநரே பெண்களை இப்படி மட்டம் தட்டலாமா?' என்று தான் நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள். விஜய் நடித்த கோட் படத்தில் கூட அப்பா, மகன் கதை தான். அந்த சாயலும் தெரிகிறது. இப்படி ஒவ்வொரு சீனும் ஒரு படத்தை நினைவுபடுத்த சொந்த சரக்கே இல்லையோ என்ற கேள்வியும் எழுகிறது.
டெக்னிக்கலாக இது பிரம்மாண்டமாக, ரிச்சாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் காட்சிகளும், வசனங்களும், ஆபாசமும் , வன்முறையும் அந்த பிரம்மாண்டத்தை ரசிக்க விடாமல் செய்து விடுமா என்பதும் கேள்வியாக உள்ளது.
கர்நாடகா தமிழகத்துக்குத் தண்ணீர் தராததால் தமிழர்கள் இந்தப் படத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் ஒரு சாரார் குரல் கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் முழுமையான திரைப்பின்னணி மற்றும் வணிக ரீதியான தாக்கத்தை அறிந்துகொள்வதன் மூலம், பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் குறித்த தற்போதைய சினிமா போக்கு மற்றும் அதன் வணிக வெற்றியை முன்கூட்டியே கணிக்கும் திறனைப் பெறலாம்.