Zebra Movie Review
Zebra Movie Review

விமர்சனம்: ஜீப்ரா (தெலுங்கு) - அக்கடதேசத்து அசத்தல் படம்!

Published on
ரேட்டிங்(3.5 / 5)

ஒரு திரைப்படம் வெளியானதுமே சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்கள் ரசிகர்கள் தியேட்டர்க்கு வருவதை தடுக்கிறது என்ற குற்றசாட்டு தமிழ் நாட்டிலுள்ள பல சினிமாகாரர்களால் முன் வைக்கப்படுகிறது. ஒரு படம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் ரசிகர்கள் படத்தை காண தியேட்டர்களுக்கு வருகிறார்கள் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது சமீபத்தில் வெளியாகி உள்ள ஜீப்ரா.

தெலுங்கு படமான இதை தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் டப் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். ஜீப்ரா வெளியிட்ட அனைத்து இடங்களிலும் பரவலான வரவேற்பை பெற்று வருகிறது. ஆக்ஷன் திரில்லர் படமாக வந்திருக்கும் ஜீப்ராவில் சத்யதேவ், ப்ரியா பாவானி சங்கர், டாலி தனஞ்சயா நடித்திருக்கிறார்கள். ஈஸ்வர் கார்த்திக் இப்படத்தை இயக்கி உள்ளார்.

வங்கியில் ரிலேஷன் ஷிப் மானேஜராக பணி யாற்றுகிறார் சத்யதேவ். வேறொரு வங்கியில் பணியாற்றும் காதலி ப்ரியா பவானி ஷங்கர் தவறுதலாக ஐந்து லட்சம் ரூபாயை ஒரு வாடிக்கையாளர் அக்கவுண்டிற்கு மாற்றி அனுப்பி விடுகிறார். காதலி இந்த பிரச்சனையில் மாட்டாமல் இருக்க சில தகடு தத்தம் வேலைகள் செய்து ஐந்து லட்சத்தை பேலன்ஸ் செய்கிறார் சத்யதேவ். இந்த பிரச்சனையின் நீட்சியாக  பிரபல தாதா டாலி தனஞ்சயாவின் ஐந்து கோடி ரூபாய் வங்கி கணக்கில் இருந்து  காணாமல் போகிறது. இதனால் கோபம் கொள்ளும் டாலி, இதற்கு பின்னால் இருப்பது சத்யதேவ்தான் என்றெண்ணி நான்கு நாட்களுக்குள் தனக்கு தன் பணம் வேண்டும் என்று சத்தியதேவை மிரட்டுகிறார். நான்கு நாட்களில் சத்யதேவ் ஐந்து கோடியை தேடும் முயற்சிதான் இந்த ஜீப்ரா.

படத்தின் முதல் சில காட்சிகளுக்குள் இது தான் பிரச்சனை. இதை பற்றி தான் பேசப் போகிறோம் என சொல்லி விட வேண்டும் என்ற ஹாலிவுட் விதிக்கு ஏற்ப படத்தின் இருபதாவது நிமிடத்தில் கதையின் கருவை புரிய வைத்து விடுகிறார்கள்.

ஒரு படம் வெற்றியடைய வில்லன் கதாபாத்திரம் முக்கியம். வில்லனாக வரும் டாலி தானஞ்சயாவின் கதாபாத்திரம் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹீரோவின் பார்வையில் (hero point of view) படம் நகர்வது போல் வில்லன் கதாபாத்திரத்தின் வழியாகவும் கதை நகர்கிறது. அலட்டல், கத்தல் இல்லாமல் மாஸ் வில்லனாக சபாஷ் சொல்ல வைக்கிறார் டாலி. இன்னொரு வில்லன் சுனில் நம்மை சிரிக்க வைத்து வில்லத்தனம் செய்கிறார்.

ஹீரோ சத்திய தேவ் பன்ச் வசனம் இல்லாமல், மாஸ் காட்டாமல் நடிப்பால் மனதில் நிற்கிறார். தவறு செய்து விட்டு மேனேஜர் முன்பு  கூனி குறுகி நிற்கும் காட்சியில் பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஒருபடி மேலே சென்று விட்டார். பாபா என்ற கேரக்டரில் சத்யராஜ் மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: லைன்மேன் - அங்கீகாரத்தை தேடும் ஒரு இளைஞனின் போராட்டம்!
Zebra Movie Review

படம் நகரும் விதம் மிக வேகமாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. வங்கி கொள்ளை என்ற விஷயத்தை ஒரு தொழில் நுட்ப பார்வையில் சொல்லி இருப்பது புதுமையாக உள்ளது. படத்தில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படம் நகரும் மேஜிக்கில் இந்த லாஜிக்கை மறந்து விடுகிறோம். ரவி பஸ்ரூரின் இசை திரில்லர் திரைக்கதையை தாங்கி பிடிக்கிறது. பொன்மரின் ஒளிப்பதிவும், மாஹியின், VFX எபெக்ட்டும் ஒரு  சிறந்த விஷுவல் ட்ரீட்டாக படத்தை உருவாக்கி உள்ளது.

மாறுபட்ட கதை, வேகமாக நகரும் திரைக்கதை, சரியான கதாபாத்திர தேர்வு, நடிகர்களின் நடிப்பு, இசை, தொழில் நுட்பம் என அனைத்து அம்சங்களையும் சரியான விகிதத்தில் தந்துள்ளார் டைரக்டர் ஈஸ்வர் கார்த்தி.

அக்கடதேசத்திலிருந்து வந்துள்ள இந்த ஜீப்ராவை பார்க்க சென்றால் ஒரு மாஸ் விஸுவல் என்டர்டைன்மென்ட் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com