நயன் – விக்கி கல்யாணம்.. வைபோகமே! 

நயன் – விக்கி கல்யாணம்.. வைபோகமே! 

-சஞ்சனா கார்த்திக்.

டிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இன்று காலையில்   மகாபலிபுரத்திலுள்ள  ஷெரட்டன் கிராண்ட் என்கிற ரிசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. இத்திருமணத்தில் ஷாருக்கான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் நேரில்  கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இத்திருமண விழாவிற்கு நெருங்கிய உறவினர்கள், வி.ஐ.பி-க்கள் என்று சுமார் 200 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  இந்த ஜோடியின் திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலானது, அதில் மணமக்களின் பெயர்கள், திருமணம் நடைபெறும் இடம், நேரம் என மிகவும் எளிமையாக  அச்சிடப்பட்டு இருந்தது. 

தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் ஜோடியாக தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகைர்ந்து வந்தனர். இவர்களின் திருமணம் எப்போது என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நயனும் விக்கியும் திருப்பதியில் திருமணம் செய்யவுள்ளதாக முதலில் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் விக்னேஷ் சிவன் நேற்று முன் தினம் (ஜூன் 7)  பத்திரிகையாளர்களை சந்தித்து, தங்கள் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இன்று (ஜூன் 9)  நடத்த உள்ளதாகவும் போக்குவரத்துப் பிரச்சினை மற்றும் சில நடைமுறை காரணங்களால் திருப்பதியில் திருமணம் செய்யும் தங்கள் முடிவை மாற்றியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷெராட்டன் கிரான்ட்  ஹோட்டலில் குடும்ப உறவினர்கள், மற்றும் நண்பர்கள், பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக தொடங்கியது. இவர்களது திருமணத்துக்கு சுமார் 200  பிரபலங்கள் மற்றும் விஐபி-க்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப் பட்ட நிலையில் பாலிவுட் ஷாருக்கான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா- ஜோதிகா, மணிரத்னம், சரத்குமார், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான்,அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில் இன்று காலை 10.25 மணிக்கு நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். அதையடுத்து மணமக்களுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இத்திருமண நிகழ்ச்சிகளை நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரலையில் ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டதால், திருமண அரங்கினுள் யாரும் புகைப்படம் எடுக்கவோ செல்போனில் விடியோ எடுக்கவோ அனுமதிக்கப் படவில்லை. இத்திருமண நிகழ்ச்சிகளை நெட்பிளிக்ஸுக்காக விடியோ எடுக்கும் பொறுப்பு இயக்குனர் கவுதம் மேனனுக்கு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த காதல் ஜோடியின் திருமணத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் நபர்களுக்கு மதிய உணவளிக்க ஏற்பாடு செய்து இருக்கின்றனர்.  ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களிலும், திருவண்ணாமலை உள்ளிட்ட சில முக்கியமான கோயில்களிலும் உணவளிக்க நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இந்த புதுத் திருமண ஜோடி, நாளை மறுநாள் (ஜூன் 11) பத்திரிகையாளர்களை சந்தித்து விசேஷ பேட்டி அளிக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com