கரகாட்டம் பார்த்திருக்கிறீர்களா?

கரகாட்டம் பார்த்திருக்கிறீர்களா?
gokulam strip
gokulam strip

கிராமப்புறங்களில் திருவிழா என்று நாம் சொன்னாலே நம் எல்லோர் நினைவுக்கும் வருவது ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான். ஆட்டம் என்பதில் முக்கியமானது கரகாட்டம். இது தமிழரின் மரபு வழி ஆட்ட கலையாகும். கரகம் என்ற சொல்லுக்கு கமண்டலம், ஆலங்கட்டி, பூங்குடம் என்று பொருள் கூறுகின்றனர். இந்தக் கரகம் பானையால் செய்யப்பட்ட தோண்டி கரகம் அல்லது செம்பினால் செய்யப்பட்ட செம்பு கரகம் வைத்து ஆடி வரப்படுகிறது. நையாண்டி மேளத்தின் இசைக்கேற்ப இந்த ஆட்டம் ஆடப்படுகிறது.

குறிப்பிட்ட கலைஞர்களால் மட்டுமே ஆடப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாத ஒரே கலை இந்தக் கரகாட்டம்தான் என்றால் மிகையாகாது.  பெரும்பாலும் காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடக்கூடிய கலைஞர்களே இந்த ஆட்டத்தையும் ஆடி வருகிறார்கள். கரகாட்டம் ஒரு சமயத் தொடர்பற்ற கலையாகும்.

இதில் ஆடப்படும் கரகங்கள் இரண்டு வகைப்படும்.

1) சக்திக் கரகம்.

2) ஆட்டக் கரகம்.

சக்திக் கரகம்

கோயில்களில் அம்மன் உருவத்திற்காக இக்கரகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சக்திக் கரகங்களை கலை நிகழ்ச்சிகளில், மேடைகளில் ஆடுவதற்கு பயன்படுத்து வதில்லை. கிராமப்புறங்களில் அம்மன் திருவிழா நடைபெறும்போது ஊர் மக்கள் ஒன்று கூடி நீராடும் ஆற்று மணப் பரப்பிலோ அல்லது குறிப்பிட்ட இடங்களிலோ, சக்திக் கரகம் பூஜிக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. இந்த சக்திக்கரகம் பெரும்பாலும் வேப்பிலையால் அலங்காரம் செய்யப்படுகிறது. இதனைத் தூக்கும் நபருக்கு ‘மருள் வரவழைத்து’ சக்தி கரகத்தைத் தலையில் ஏற்றி மருளால் ஆடுவர்.

ஆட்டக் கரகம்

ந்த ஆட்டத்தை ‘கும்பாட்டம்’ என்று சில கிராமங்களில் குறிப்பிடுவர். ஒரு பெண், மாலைகளால் ஒப்பனை செய்யப்பட்டுள்ள ஒரு குடத்தைத் தலைமீது வைத்துக்கொண்டு ஆடுவதும், குடத்தின் உச்சியில் ஒரு கிளியின் உருவம் பொருத்தி இருப்பதையும் காணலாம். இந்த ஆட்டத்தில் இரண்டு பெண்கள் சேர்ந்தும், ஒரு ஆண் இரு பெண்கள் சேர்ந்தும் ஆடுவார்கள்.

தற்காலத்தில் கரகாட்டம் ஆடும் பொழுது பாட்டுக்கள் பாடியும் தீப்பந்தத்தை கொளுத்தி அதைச் சுழற்றியும் ஆடுகின்றனர்.

மரபு வழிச் சார்ந்த இந்த கரகாட்டக் கலையில் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தக் கரகத்தைத் தலையில் சுமந்தபடியே தரையில் வைக்கப்பட்டுள்ள கைக்குட்டையை வாயால் கவ்வி எடுப்பது, கண்ணிமையால் நிறுத்தப்பட்டிருக்கும் ஊசியை எடுப்பது போன்ற பல வித்தைகளைச் செய்து காட்டுவார்கள்.

கரகாட்டக்கலை தற்போதைய நிலையில் பரவலாக்கப்பட்டு கல்லூரி மாணவர்கள், மாணவிகள் கூட கற்றுக்கொண்டு அதில் புதிய யுத்திகளைப் புகுத்தி வருகின்றனர். கரகாட்ட கலையின் மரபும் தமிழர்களின் கலைகளும் அழியாமல் பாதுகாத்து, அக்கலைகளை வளர்த்து பெருமிதம் கொள்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com