கோர்பசேவுக்கு உடம்பு சரியில்லை

கோர்பசேவுக்கு உடம்பு சரியில்லை
Published on

ஒரு நிருபரின் டைரி – 6

– எஸ். சந்திரமெளலி

கோடிக்கணக்கில் ஊழல், கட்டுமானப் பணிகளில் ஆமை வேகம்,கட்டியவற்றிலும் இடிபாடு, உயிர்ப் பலி, மோசமான பராமரிப்பு, பாம்பு முதலிய வேண்டாத விருந்தாளிகள் என்று மீடியாவில் நார் நாராகக் கிழிபட்டுக் கொண்டிருந்த காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் மறந்து உலகமே "வாவ்! " என்று வாய் பிளக்கும் அளவுக்கு 2010ல் காமன்வெல்த் போட்டிகள் மிக அற்புதமாக நடந்து முடிந்தன.

துவக்க விழாவில் இந்தியாவின்  கிராமிய கலாசாரத்தை வெளிப்படுத்தும் "கிரேட் இந்தியன் ஜர்னி " என்ற பெயரில்  ரயில் பயணம்,  சங்கில் ஆரம்பித்து  இந்தியாவின் பல்வேறு மொழி, இன, கலாசார  மக்களுக்கும் உரிய தாள வாத்தியக் கருவிகள் இடம்பெற்ற டிரம்ஸ் ஆஃப் இந்தியா, ஒரிசாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்னாயக் லைவ்வாக உருவாக்கிய காந்திஜியின் மணல் சிற்பம், இவை அனைத்தையும் தூக்கி சாப்பிடுவது மாதிரி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வானத்தில் மிதந்த ராட்சச பலூன், வாண்டுப் பையன் கேசவின் தபலா வாசிப்பு, ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, அதேபோல நிறைவு விழாவில் இந்தியாவின்
வீர தீர விளையாட்டுகள் என்ற தீமை வைத்துக்கொண்டு, இந்த மண்ணுக்குரிய பல்வேறு வீர சாகச விளையாட்டுகள் என ஏகப்பட்ட புதுமைகள் இடம்பெற்றிருந்தன.

கோலாகலமாகத் துவக்க விழா நடந்து முடிந்த மறுநாள் காலை புதிய தலைமுறை ஆசிரியர் மாலனிடமிருந்து போன். துவக்க விழா நிகழ்ச்சி குறித்த தன் பாராட்டுக்களைப் பகிர்ந்துகொண்டு,  "கலை நிகழ்ச்சிகளின் கிரியேடிவ் டைரக்டர் பரத்பாலா உங்கள் நண்பர்தானே! அவருடைய   பேட்டி உடனடியாக வேண்டுமே!" என்றார். உற்சாகமாக பரத்பாலாவை மொபைலில் தொடர்பு கொண்டேன். பாராட்டுக்களைச் சொல்லிவிட்டு, பேட்டி விஷயத்தைச் சொன்னதும், "நோ பிராப்ளம்; இன்று பிற்பகலில் ஒரு அரை மணி நேரப் பயணம் இருக்கிறது; அப்போது கூப்பிடுகிறேன். பேசிவிடலாம்" என்றார். இத்தனைக்கும், அவர் டெல்லியில் நிறைவு விழா கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகையில் பிசியாக இருந்தார்.

நான் அவரிடம் கேட்க, கேள்விகளை எழுதி வைத்துக் கொண்டு எந்த நிமிடமும் பேட்டிக்குத் தயாராக இருந்தேன். பாலாவிடமிருந்து போன் வந்தது. மொத்த பேட்டியையும் மொபைலில் பதிவு செய்துகொண்டு, பேட்டிக் கட்டுரையை  எழுதி முடித்து,  ஆசிரியர் மாலனுக்கு ஈ மெயிலில் அனுப்பி வைத்துவிட்டேன். அரை மணியில் அவரிடமிருந்து என் சுறுசுறுப்பையும், பேட்டியின் சுவாரசியத்தையும் பாராட்டி ஈ மெயில் வந்தது.

பரத்பாலா என்ற பெயரை நான் முதன் முதலாகக் கேள்விப்பட்டது இந்திய சுதந்தரப் பொன்விழா  சமயத்தில்தான்.   பரத்பாலாவும், ஏ.ஆர். ரஹ்மானும் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர்கள் இருவரும் இணைந்து நம் நாட்டின் சுதந்தரப் பொன்விழாவை ஒட்டி வந்தே மாதரம் பாடலுக்கு புத்துயிரூட்டி, நாடெங்கும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தினார்கள்.

அதற்கு இணையாகக் கவிஞர் வைரமுத்து  எழுதிய 'தாய் மண்ணே வணக்கம்' பாடலும் இளைய தலைமுறையினர் மத்தியில் இன்னொரு தேசிய கீதமாக ஒலித்தது. அது மட்டுமில்லாமல், வந்தேமாதரம் என்ற வரிசையில் நூற்றுக்கும் அதிகமான ஒரு நிமிடக் குறும் படங்கள் எடுத்து மக்கள் மனத்தைக் கவர்ந்தார் பரத்பாலா.

அதனைத் தொடர்ந்து  பரத்பாலா-ரஹ்மான் காம்பினேஷனில் வெளியான ஜன கண மன ஆல்பமும் பல தரப்பினரது பாராட்டையும் பெற்றது. அப்போது, குமுதம் ஆசிரியராக இருந்த மாலன் சொல்லி, பரத் பாலாவை முதல் தடவையாகச் சந்தித்தேன். பாலாவின் ஆபீஸ் மும்பையில். அவ்வப்போது சென்னை வந்து செல்வார். ஒரு சென்னை விசிட்டின்போது, பரத்பாலாவை சந்தித்து நீண்ட நேரம் பேசினேன். அவர் ஏகப்பட்ட விஷயங்களைச் சொன்னதால், இரண்டு வாரங்களுக்கு அந்தப் பேட்டி வெளியானது.

விவேகானந்தா கல்லூரியில் படித்து முடித்த பிறகு பரத்பாலா லண்டன் சென்று  டெலிவிஷன் டெக்னாலஜி படித்துவிட்டு, இந்தியா திரும்பியதும் விளம்பரப் படங்கள் எடுக்க ஆரம்பித்தார். அவர் எம்.ஆர்.எஃப். க்காக எடுத்த முதல் விளம்பரமே  அந்த வருடத்து சிறந்த விளம்பரப்படத்துக்கான விருதினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து பெப்சி, நெஸ்லே, ஜே.கே.டயர்ஸ், ஐ.டி.சி  என வளர்ந்து பிரபலமானார். இந்திய அரசாங்கத்தின் சுற்றுலாத்துறையின் 'இன்கிரிடிபிள் இந்தியா!" விளம்பரங்கள் அவரது கைவண்ணம்தான்!

பரத்பாலாவின் அப்பா கணபதி ஒரு சுதந்தரப்போராட்ட வீரர். பெருந்தலைவர் காமராஜருக்கு மிகவும் நெருக்கமானவர். அவர்தான் இந்திய சுதந்தரப் பொன்விழாவின்போது, பாலாவிடம் "இன்றைக்கு நாடு போகிற போக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது; இந்த பொன்விழா சமயத்தில் ஆத்மார்த்தமாக ஏதாவது செய்! அது இந்தியர்கள் அனைவரது  கவனத்தையும் கவரும்படியாக, இந்தியனாக இருப்பது குறித்து பெருமைப்படும்படியாக இருக்க வேண்டும்" என்று சொன்னார். அப்பா சொன்னது குறித்து மகன் தீவிரமாக யோசித்தபோது உதயமானதுதான் வந்தே மாதரம் ஐடியா! "வந்தே மாதரம் என்ற பழைமையான அக்னியை, இன்றைய தலைமுறையினரிடம் மூட்டி, அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குக் கொழுந்து விட்டு எரியச் செய்வதை என்னுடைய இந்தத் திட்டத்தின் லட்சியமாக்கிக் கொண்டேன்" என்றார் பாலா.

வந்தேமாதரத்தை உலக அளவில் எடுத்துக் கொண்டு செல்லவும் பரத் பாலா ஒரு யுக்தியைக் கையாண்டார். உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர்களை சந்தித்து அவர்களை உலக அமைதி பற்றிப் பேசச் செய்து, இறுதியாக வந்தேமாதரம் என்று சொல்லி பேச்சை முடிக்க வைத்தார். ஒரு  நள்ளிரவு நேரத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இரண்டுக்கும் இடைப்பட்ட 'யாருக்கும் சொந்தமில்லாத' நிலப்பகுதியை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கடந்து, பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத்தை  சந்தித்து படம் பிடித்ததையும், மூவண்ணத் துணியில் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கியதையும் ஒரு திரில்லர் கணக்காய் விவரித்தார் பரத் பாலா.

ருஷ்யாவிலோ வேறு மாதிரியான டென்ஷன். முன்னாள் ருஷ்ய அதிபர் கோர்பசேவ்வின் அப்பாயின்ட்மென்ட் தினத்தன்று அவருக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய், அப்பாயின்ட்மென்ட் கேன்சல் ஆகிவிட்டது. ஐந்து நாட்கள் காத்திருக்க நேரிட்டது. ஆனால் அதற்குள் ருஷ்ய விசா காலாவதியாகிவிடும் சிக்கலான நிலைமை. தங்கி இருந்த ஓட்டலிலேயே இரண்டு நாட்கள் வெளியில் செல்லாமல் அடைபட்டிருந்து, அதன் பிறகு விசா நீட்டிப்பு பெற்று கோர்பசேவை சந்தித்தோம்.

டெல்லியிலிருந்து புறப்பட்டு பனி படர்ந்த சாலைகளில் 23 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு  ஹிமாசலப்பிரதேசம் தரம்சாலாவில் தலாய் லாமாவை பரத் பாலா குழுவினர் சந்தித்தபோது அவர் சொன்ன வார்த்தைகள், "கடவுள் அருளால் பத்திரமாக வந்து சேர்ந்தீர்கள்!"

மியான்மரில் ராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்த ஆன் சான் சூ கியை ரகசியமாகச் சந்தித்து பேட்டிகாண பரத் பாலா எடுத்த முயற்சி ராணுவ ஆட்சியாளர்களுக்குத் தெரிந்துவிட, பரத் பாலா குழுவினரை ராணுவ ஆட்சியாளர்கள் கைது செய்யக் காத்திருந்தார்கள்.  இவர்களுக்கு  பாங்காக்கில் இறங்கியதும் கைது விஷயம் தெரிந்துவிட்டது. ரங்கூன் செல்லாமல், இந்தியா திரும்பிவிட்டார்கள். பின்னர் விஷயம் அறிந்த சூ கி, 'என் டெலிபோன் ஒட்டுக் கேட்கப்படுவதால், உங்கள் முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது; இருந்தபோதிலும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்' என தகவல்  அனுப்பி வைத்தார்.

உலகம் எங்கும் பயணித்து உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர்களை சந்தித்த பரத்பாலாவுக்கு ஒரு மனக்குறை உண்டு. "அன்னை தெரசா விஷயத்தில்,  எமன் எங்களை முந்திக்கொண்டு விட்டான்; அன்னைக்கு உடல் நலமில்லாததால் எங்களுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை; நாங்களும் அயல் நாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு,  கடைசியாக இவரை சந்திக்கலாம்" என்று நினைத்தோம். ஆனால் எங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை" என்று சோகமாகச் சொன்னார்.

வந்தே மாதரம் குறும்படங்களில் நம் தேசியக் கொடி லேசாகக் காற்றில் மிதப்பது மாதிரி ஒரு ஷாட் வரும். அந்த ஷாட் லண்டனில் எடுக்கப்பட்டது. இங்கே ஸ்லோ மோஷன் ஷாட்களை எடுக்க வினாடிக்கு 120 ஃப்ரேம்கள் வேகத்தில் ஓடக்கூடிய கேமராதான் கிடைக்கும் என்பதால், லண்டனுக்குப் போய், வினாடிக்கு 1000 ஃப்ரேம்கள் வேகத்தில் ஓடக்கூடிய பிரத்யேகமான கேமராவைப் பயன்படுத்திப் படம் பிடித்தார்களாம்.

பாலாவின் மனைவி பெயர் கனிகா. ஒரு முறை  புதுச்சேரியை அடுத்த ஆரோவில்லில் வசிக்கும் கனிகாவின் அப்பாவைச் சந்திக்கச் சென்றார் பரத்பாலா. அவர்தான் அங்கே வசிக்கும் கேசவ் என்ற தபலா வாசிக்கும் மழலை மேதையை பாலாவுக்கு அறிமுகப்படுத்தினார். அந்தக் குட்டிப்பையனின் தபலா வாசிப்பில்   மிகவும் லயித்துப் போய்,  அந்தக் கணமே, காமன் வெல்த் துவக்க விழாவில் கேசவை தபலா வாசிக்கச் செய்துவிட வேண்டும் எனத் தீர்மானித்துவிட்டார்.

"கேசவ் ரொம்பச்  சுட்டியான பையன் என்றாலும்   நிகழ்ச்சிக்குப் பத்து நாட்கள் முன்னதாக அவனை நேரு ஸ்டேடியத்தில் விளையாடச் செய்தது முதல், துவக்க விழாவில் வாசிப்பது எத்தனை பெருமையான விஷயம் என்று  அவனுக்குப் புரிய வைத்தது வரை  அவனை படிப்படியாகத் தயார் செய்தோம்" என்றார்  பரத்பாலா.

கொரோனா தொற்று வந்தபோது, நாடெங்கும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதல்லவா? ஊரே அடங்கிப் போய் அமைதியாக இருந்த அந்த சமயத்திலும் பரத்பாலா சும்மா இருக்கவில்லை.  மத்திய அரசிடமும் பல்வேறு  மாநில அரசுகளிடமும் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி, வரலாறு காணாத அந்த பொது முடக்கத்தை ஆவணப்படுத்தினார்.  பரத்பாலா மும்பையில் தன் ஸ்டுடியோவில் இருந்தபடியே, இந்தியா முழுக்க ஆங்காங்கே கேமராமேன்களை இயக்கி, பின்னர் அவற்றை எடிட் செய்து, ஆவணப்படமாக்கினார்.

பரத் பாலா சந்தித்த மகத்தான மனிதர்களைப் பற்றியும், அவரது சுவாரசியமான அனுபவங்களையும்  ஒரு புத்தகமாக எழுத எனக்கு ஆசை. பார்க்கலாம்!

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com