வேண்டாம் முத்தம்!

வேண்டாம் முத்தம்!
Published on

ஒரு நிருபரின் டைரி – 10

– எஸ். சந்திரமெளலி

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த சமயம், 1984ஆம் வருடம் மார்ச் மாதம் அன்னை தெரசா தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். மூன்று, நான்கு நாட்கள் இங்கே தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 'அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் சென்று, கல்கியில் எழுதுவது' என்று முடிவானது. நானும் நண்பர் ப்ரியனும் களத்தில் இறங்கினோம்.

சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதும், அவரது முதல் நிகழ்ச்சி மந்தைவெளியில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களைச் சென்று சந்திப்பது. தமிழக அரசின் செய்தித்துறை, பத்திரிகையாளர்களை அழைத்துக்கொண்டு போக இரண்டு வேன்களை ஏற்பாடு செய்திருந்தது. அன்னையின் வருகையை எதிர்பார்த்து அந்த குடிசைப் பகுதியில் மட்டுமில்லாமல், வழி நெடுக மக்கள் திரண்டு நின்று காத்துக் கொண்டிருந்தார்கள். ஸ்பாட்டுக்கு வந்து இறங்கிய அன்னை, போலிஸ் பாதுகாப்பு வளையத்தை சட்டை செய்யாமல் குழந்தைகளைக் கொஞ்சினார்; அன்புடன் தட்டிக் கொடுத்தார். அந்தக் காட்சிகளைப் புகைப்படம் எடுத்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் மத்தியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில், ஒரு போட்டோகிராஃபர்  கீழே விழுந்துவிட்டார். அதை கவனித்துவிட்ட அன்னை, அவர் அருகில் வந்து கைகொடுத்து எழுப்பி விட்டது நெகிழச் செய்தது. அடுத்து அசோக் நகரில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு விசிட். அங்கே ஒரு சர்ச் கண்ணில்பட, உள்ளே சென்று சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார். ராயபுரத்தில் உள்ள மிஷினரீஸ் ஆஃப் சாரிடீஸ் இல்லத்தில் இரவு தங்கினார்.

மறுநாள் கொடைக்கானலில் மகளிர் பல்கலைக்கழகத்தின் தொடக்க விழா. அந்த நிகழ்ச்சியை கவர் செய்ய இரவு மதுரைக்கு பஸ் பிடித்தேன். தகவல் துறை அதிகாரி ஒருவர் சொன்ன ஆலோசனையின் பேரில், மதுரை வரை போகாமல், கொடைரோடிலேயே இறங்கி, கொடைக்கானலுக்கு பஸ் ஏறிவிட்டேன். காலையில் விமானம் மூலம் மதுரை வந்த எம்.ஜி.ஆரும் அன்னை தெரசாவும், காரில் கொடைக்கானல் வந்து சேர்ந்தார்கள்.

"கொல்கத்தாவில் பசியோடு வந்த சிறுவனுக்கு ரொட்டி கொடுத்தபோது, பாதியை மட்டும் சாப்பிட்டுவிட்டு, மீதியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். காரணம் கேட்டதற்கு "இரவு சாப்பிடுவதற்காக" என்றான். "இரவு சாப்பிட வேறு ரொட்டி தருவோம். நீ இதை முழுசாக சாப்பிடு" என்றபோது அவன் கண்களில் ஏற்பட்ட சந்தோஷம் இன்னமும் என் மனதில் நிழலாடுகிறது" என்று மகளிர் பல்கலைக் கழகத் தொடக்க விழாவில் குறிப்பிட்டார் அன்னை. அடுத்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 'இந்த மகளிர் பல்கலைக்கழகத்துக்கு அன்னை தெரசாவின் பெயரை சூட்டுவதில் தமிழக அரசு பெருமை கொள்கிறது" என்று அறிவித்தவுடன் அனைவரும் அந்த இனிய எதிர்பாராத அறிவிப்பால் மகிழ்ந்து கைதட்ட, அன்னையின் முகத்தில் லேசான புன்னகை மட்டுமே.

அன்று கொடைக்கானலுக்கு வந்திருந்த இன்னொரு வி.வி.ஐ.பி. காஷ்மீரின் முன்னாள் முதல்வரான ஃபாரூக் அப்துல்லா. மத்திய அரசால் அந்தக் காலத்தில் அவர் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருந்த கொடைக்கானல் கோஹினூர் மாளிகைக்கு "ஃபரூக் அப்துல்லா மாளிகை" என்று பெயரிட்டு, திறப்பு விழா நடத்தப்படது.

அடுத்த நாள் மாலை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் அன்னை தெரசா கலந்துகொண்டார். அங்கேயும் நானும், ப்ரியனும் ஆஜர். அடுத்த நாள் வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் நடந்த விழாவில் உலக அமைதிக்காக ஒரு டஜன் வெண் புறாக்களைப் பறக்க விட்டார். அங்கேயே அரச மரமும், பனை மரமும் இணைந்த ஒரு மரத்துக்கு 'அன்னை தெரசா அதிசய மரம்" என்று பெயர் சூட்டினார்கள். அன்று மாலை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அன்னைக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சி. பெண்கள் நிரம்பிய அந்தக் கூட்டத்தில் "உங்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள பிடிக்கவில்லையா? தயவு செய்து அந்தக் கருவை அழித்துவிடாதீர்கள். அல்லது பெற்று, அனாதையாக்காதீர்கள்! என்னிடம் கொடுத்துவிடுங்கள்! " என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அன்னையைப் பின்தொடர்ந்த நாங்கள் அவர் சென்னையை விட்டுப் புறப்பட்டபோது விமான நிலையத்துக்கும் சென்றோம். அன்னையின் அருகில் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு, எங்களுக்குத் தரப்பட்ட அன்னையைப் பின்தொடரும் அசைன்மென்ட் பற்றிச் சொன்னோம். புன்னகைக்க முயன்றபோது அவர் இருமினார். "நாங்களும் மூன்று நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களைப்போலவே, இருமல் கூட உங்களை விடாமல் பின்தொடருகிறது போலிருக்கிறதே?" என்று கேட்டபோது, "இரண்டு மாதங்களாக இந்த இருமல் இருக்கிறது" என்றார். "மருந்து ஏதும் சாப்பிடவில்லையா?" என்று கேட்டபோதும் புன்னகைதான் பதில்.

அப்போது ஒரு போலிஸ் அதிகாரி அன்னையின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு, "மதர்! மூன்று நாட்களாக உங்களுக்கு செக்யூரிடி ஆக இருந்து சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம்" என்றார். அதற்கு அன்னை சிரித்தபடியே, "என் பாதுகாப்பு பொருட்டு பல பேர்களின் வெறுப்பை நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருப்பீர்களே!" என்றார். (அந்த மனிதர், அன்னையைப் பார்க்க வருபவர்களை 'ஜருகண்டி, ஜருகண்டி' என்று திருப்பதி ஸ்டைலில் வி.ஐ.பி. அல்லாத சாமானிய பார்வையாளர்களை விரட்டிக்கொண்டிருந்ததை முந்தைய நாட்களில் நாங்கள் கூட கவனித்தோம்)

அடுத்து அன்னையிடம்,கல்கி வாசகர்களுக்காக ஒரு பிரத்யேகமான செய்தியை எழுதி, கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும்படிக் கேட்டுக்கொண்டோம். அவர் இப்படி எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்:

Dear Kalki readers,
God is love and He loves you.
Love one another as God loves each one of you.
Remember works of love are works of peace.
God bless you.
Mr Tesesa M.C.
04.03.1984. 

விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது எங்கள் மனதை நெருடிய விஷயம்: அன்னை சென்னை வந்து இறங்கியபோது, அவரை வரவேற்க சில தமிழக அமைச்சர்கள் வந்திருந்தார்கள். ஆனால் புறப்படும்போது வழி அனுப்பி வைக்க யாருமே வரவில்லை.

இதன் பிறகு பல வருடங்கள் கழித்து கல்கி மேற்கு வங்காள சிறப்பிதழுக்காக, கல்கியின் துணையாசிரியராக இருந்த இளங்கோவன், பிரியன், கல்கியின் அன்றைய ஆஸ்தான புகைப்படக்காரரான கே.வி.ஆனந்த் (பின்னாளைய  பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனரேதான்) மற்றும் நான் கொல்கத்தா சென்றோம். கொல்கத்தாவில் நான் சந்திக்க ஆர்வமாக இருந்த நபர்கள் இரண்டு பேர். ஒருவர் அன்னை தெரசா. இன்னொருவர் முதலமைச்சர் ஜோதி பாசு. நாங்கள் அன்னை தெரசாவின் மிஷினரீஸ் ஆஃப் சரிடீஸ் இல்லத்துக்குச் சென்றோம். ஆனால் அவர் அப்போது வெளியூர் சென்றிருந்ததால், அவரை சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கொல்கத்தா நகரத்து நடைபாதையில் எலிகள் குதறிய, எறும்புகள் மொய்க்கிற நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது. அந்தப் பக்கமாக வந்த ஒரு இளம் பெண்மணி, அந்தப் பரிதாபத்துக்குரிய பெண்ணைப் பார்த்து பதறி, அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு போனார். ஆனால் அந்த ஆஸ்பத்திரியிலோ, அந்தப் பெண்ணை சிகிச்சைக்கு சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். அந்தப் பெண்மணி, "இவரை இங்கே அட்மிட் செய்து சிகிச்சை அளிக்கும் வரை, இந்த இடத்திலிருந்து நகர மாட்டேன்" என்று அங்கேயே உட்கார்ந்து சத்தியாகிரகம் செய்தார். உடனையாக அவரது அறப் போராட்டத்துக்குப் பலன் கிடைக்கிறது. அந்த நிமிடமே, இப்படி நடைபாதைகளில் அனாதைகளாக கிடப்பவர்களுக்கு நிம்மதியாக மரணத்தைத் தழுவ ஒரு இல்லம் அவசியம் என உணர்ந்தார். கொல்கத்தா மாநகராட்சி அதிகாரி ஒருவரை சந்தித்து விஷயத்தைச் சொன்னதும், அவர் ஒரு காளி கோவிலில் பக்தர்கள் சாமி கும்பிட்ட பிறகு ஓய்வு எடுக்கும் மண்டபம் ஒன்றை அளிக்க, தன் சமூக சேவை சாம்ராஜ்ஜியத்தின் முதல் அத்தியாயத்தைத் துவக்கினார். கொஞ்ச நாளில் அந்த மண்டபமே, கொல்கத்தா நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அழைத்துக் கொண்டு வரப்பட்ட சாவை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களால் நிரம்பி வழிந்தது. அவர்கள் அனைவருக்கும் அன்னையாகி, அன்பைப் பொழிந்த அந்தப் பெண்மணி வேறுயாருமில்லை; அன்னை தெரசாதான்.

உடல் முழுவதும் புண்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு புண்களை சுத்தம் செய்து, மருந்து போட்டுவிட்டாராம் அன்னை. அந்தப் பையன் மருந்தின் எரிச்சல் தாங்காமல் அழ, அன்னை தெரசா, "இவை எல்லாம் புண்கள் அல்ல; இறைவன் கொடுத்த முத்தங்கள்" என்று சொன்னதும், அந்தப் பையன் சட்டென்று, "அன்னையே! இறைவனிடம் சொல்லி உடனே முத்தம் கொடுப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்! எனக்கு வலி தாங்க முடியவில்லை" என்று சொல்ல, வலியையும் மீறின அந்தப் பையனின் நகைச்சுவை உணர்ச்சியை ரொம்ப ரசித்தாராம் அன்னை தெரசா!

கொரோனாவுக்கு முன்பாக வட கிழக்கு இந்திய டூர் சென்றிருந்த சமயம், கொல்கத்தாவில்  அன்னையின் மிஷனரீஸ் ஆஃப் சாரிடீஸ் தலைமையகத்துக்குச் சென்று பார்த்தேன். அந்த வளாகத்தின் உள்ளேயே அன்னையின் சமாதி இருக்கிறது. அன்னை வசித்த  அறைக்கும்  சென்று பார்த்தேன். முதல் மாடியில் சிறிய அறை. எளிமையான கட்டில், ஒரு மேஜை, நாற்காலி.  அந்த அறையின் கீழேதான் சமையலறை.  ஆனால் "அதன் வெப்பமும், சத்தமும் அன்னையின் பணிக்கு இடையூறாக இல்லை " என்றார் என்னை அழைத்துச் சென்று காட்டிய சகோதரி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com