0,00 INR

No products in the cart.

கிச்சன் கிளினிக் பார்த்திருக்கிறீர்களா?

ஒரு நிருபரின் டைரி – 32

எஸ். சந்திரமௌலி

 

ரு பெண்மணி தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும்  மளிகைக் கடைக்கு வருகிறார். கடைக்காரரிடம்,  மிளகு நூறு கிராம், சீரகம் ஐம்பது கிராம், வெந்தயம் நூறு கிராம், வெங்காயம் ஒரு கிலோ, பூண்டு அரை கிலோ….. என்று தன் வீட்டில் சமையலுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு  செல்கிறார். அடுத்து ஒரு முதியவர் வருகிறார். “மிளகு நூறு கிராம், சீரகம் நூறு கிராம், வெந்தயம் நூறுகிராம், கிராம்பு பத்து கிராம், ஏலக்காய் பத்து கிராம்” என்று தனக்கு வேண்டிய ஐட்டங்களின் லிஸ்ட்டை சொல்ல, கடைக்காரர் அவருக்குத் தேவையான ஐட்டங்களை எடுத்துக் கொடுத்துவிட்டு காசை வாங்கி கல்லாவில் போடுகிறார்.

முதலில் வாங்கிய பெண்மணி  தான் வாங்கிய ஐட்டங்களை தினமும் சமையலுக்குப் பயன்படுத்துகிறார். அடுத்து வாங்கிய முதியவர் ஒரு சித்த மருத்துவர். தாம் வாங்கியவற்றைத் தம்முடைய கிளினிக்கிற்குக் கொண்டு போகிறர். எல்லாவற்றையும் லேசாக  வறுத்துப் பொடியாக்கி, ஒரு சூரணம் தயாரிக்கிறார். அதற்கு ‘வாய்வு சூரணம்’ என்று பெயர். அந்தச் சூரணத்தைத் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு வாய்வு சூரணமாகவும், மூட்டு வாத வலி சூரணமாகவும், மலச்சிக்கல் போக்கும் சூரணமாகவும், வெவ்வேறு பரிமாணத்தில் கொடுக்கிறார். நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

அந்தப் பெண்மணி வாங்கியவை எல்லாம் உணவுடன் உடலுக்குள் சென்று நோய் வராமல் தடுக்கிறது. அப்படி இல்லாமல் நோய் வந்தவர்களுக்கு அந்தச் சித்த மருத்துவர் வாங்கிச் சென்றவை மருந்தாக உருமாறி நோயைத் தீர்த்து வைக்கிறது. இதுதான் உணவே மருந்து; மருந்தே உணவு. இதுபோன்ற ஒரு விஷயம் உலகில் வேறு எந்த மருத்துவ முறையிலும் கிடையாது. நம் வீட்டுச் சமையலோடு இணைந்த ஒரு மருத்துவ முறைதான் நமது தமிழ்நாட்டு சித்த மருத்துவம்!

இப்படி எனக்கு சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமான உணவே மருந்து மருந்தே உணவு என்பது பற்றி நச்சென்று எடுத்துச் சொன்னவர் பிரபல சித்த மருத்துவரான மூலிகை மணி வேங்கடேசன். அவரை பல சந்தர்ப்பங்களில் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறேன். கலகலப்பான மனிதர். எந்த ஒரு விஷயத்தையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் ரொம்ப எளிமையாக விளக்கிச் சொல்வதில் ஒரு எக்ஸ்பர்ட். அவர் சொல்லுவார்: மேல் நாட்டுக்காரர்கள் நம் மருத்துவ முறைகளை “ஆல்டர்நேடிவ் மெடிசன்”  என்கிறார்கள். ஆனால் இவற்றை “ நேடிவ் மெடிசன்” என்று சொல்வதுதான் சரி!”

மூலிகை மணி வேங்கடேசன், அமரர் கல்கியின் தீவிர வாசகர். வருடம் ஒரு முறை பொன்னியின் செல்வன்,  சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய மூன்று நாவல்களையும், ஒரு தடவை படிப்பதை வழக்கமாகக் கொண்டவர். ஒரே ஒரு நாள் என்னை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கினால்,  மகாபலிபுரத்தில் அமரர் கல்கியின் அழியாப் பொக்கிஷங்களான பொன்னியின் செல்வன்,  சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு மூன்றுக்கும் ஒரு ஒளி-ஒலி காட்சியகம் அமைக்க உத்தரவு போடுவேன்”  என்று சொல்லுவார்.

சித்த வைத்திய பாரம்பரியத்தில் வந்த அவர்கள் பரம்பரையில் அவர்  ஐந்தாவது தலைமுறை சித்த வைத்தியர். வேங்கடேசனின் அப்பா மூலிகை மணி கண்ணப்பருக்கு “ காப்புக்கார வைத்தியர்” என்று சிறப்புப் பட்டம் உண்டு. அதென்ன காப்புக்கார வைத்தியர்? என்று வேங்கடேசனிடம் ஒரு முறை கேட்டபோது, “ காப்பு என்பது வேறு ஒன்றுமில்லை; ஆண்கள் கையில் அணியும் பொன், வெள்ளி, செப்பினால் ஆன வளைந்த கம்பி. ஆற்காட்டு நவாப் பரம்பரைக்கு குடும்ப வைத்தியராக இருந்தவர்கள் எனது முன்னோர்கள்.  அப்பாவின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் அவரது கைகளில் காப்பு அணிவித்தார் ஆற்காட்டு நவாப். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜ், கோவை விஞ்ஞானி ஜிடி நாயுடு, வாரியார் சுவாமிகள் போன்றவர்களின் அபிமானத்தைப் பெற்றவர் அவர். அன்றைய தொண்டை மண்டலத்தில் ஜமீந்தார்கள் பலருக்கும் அவர்தான் குடும்ப வைத்தியர்.

வேலூரில் முருகன் வைத்திய சாலை நடத்தி வந்த அவர், அவ்வப்போது உள்ளூர் பத்திரிகைகளில் மருத்துவக் கட்டுரைகள் எழுதி வந்தார். ‘மாத ஜோதிடம்’ என்ற பத்திரிகையில் அவர் எழுதிய ஒரு கட்டுரை காஞ்சி மடத்தின் மகாபெரியவர் பார்வையில் பட, அவர், கண்ணப்பரை வரவழைத்து, ஆசிர்வதித்து  பிரபலமான பெரிய பத்திரிகைகளில் நிறைய எழுது;  நிறைய மக்கள் பயன்பெறுவார்கள்” என ஆலோசனை கூறினார். அதன்பேரில் தினமணியில் “நம் நாட்டு மூலிகைகள்” என்ற தொடரை எழுதத் துவங்கினார் கண்ணப்பர். சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் 200 மூலிகைகளைப் பற்றிய விரிவான தகவல்களோடு 200 வாரங்கள் தினமணி சுடரில் வெளியாகி தமிழகம் முழுக்க பிரபலமானார் மூலிகை மணி கண்ணப்பர்.

தொடர்ந்து 1964ல்,  “மூலிகை மணி” என்ற பெயரில் பிரத்யேகமான சித்த வைத்திய பத்திரிகையே ஆரம்பித்துவிட்டார். 1975ல் ஒரு நாள் கண்ணப்பர் தன் மகன் வேங்கடேசனிடம், “இனிமேல்  மூலிகை மணி பத்திரிகையை நீயே நடத்து! உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் பத்திரிகையை மட்டும் நிறுத்திவிடாதே!” என்று அன்புக்கட்டளை போட்டுவிட்டு, 1979ல் மறைந்துவிட்டார். அப்பா சொல்படி வேங்கடேசன்,  பல்வேறு சிரமங்களையும் வெற்றிகரமாகக் கடந்து, மூலிகை மணி இதழுக்கு மெருகூட்டி, விற்பனையையும் ஸ்திரப்படுத்தினார். பொன்விழா கொண்டாடி, வெற்றிகரமாக இன்றும், தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது மூலிகை மணி.

அது மட்டுமில்லை; மூலிகைகளுக்குப் பெயர்போன கொல்லி மலையில், ஒரு மூலிகைப் பண்ணையை ஏற்படுத்தி, அங்கே மூலிகைகள் பற்றி பல்வேறு விதமான ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தார். ஒரு முறை கொல்லி மலை பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டி இருந்த சமயம் அவரை சந்தித்தேன். அவர் ஏராளமான தகவல்கள் புகைப்படங்கள், வீடியோ என்று அசத்திவிட்டார். எனக்கு ஏதோ கொல்லிமலை டூர் போய்வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது .

ஒரு நாள் இரவு சுமார் பத்து மணிக்கு அவர் வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது. மறுமுனையில் அவரது நோயாளி ஒருவர். “டாக்டர்! கல்யாண ரிசப்ஷனுக்குப் போயிருந்தேன். நல்ல ருசியான டின்னர். ஒரு பிடி பிடித்துவிட்டேன். வீடு திரும்பியது முதல் வயிற்றில் பிரச்னை; படுத்தால் தூக்கம் வரவில்லை. ராத்திரி இந்த நேரத்தில்  எந்த டாக்டரிடம் போக முடியும்?  என் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லுங்க டாக்டர்!” என்றார். “பயப்பட ஒண்ணுமில்லை; வெறும் வாய்வு உபத்திரவம்தான் இது. ‘வெந்தயம் ஒரு கால் ஸ்பூன் எடுத்து சர்க்கரையைக் கலந்து தூள் செய்து, வாயில் போட்டுக் கொண்டு, தண்ணீர் குடித்துவிட்டு, வீட்டில் குறுக்கும், நெடுக்குமாக கொஞ்சநேரம் நடந்து கொண்டிரு. ஏப்பம் பலமாக வரும். பிறகு வயிற்று வலி போய் விடும்’ என்று ஆன் தி ஸ்பாட் தீர்வு சொன்னார். மறுநாள் காலை டாக்டர் வேங்கடேசனுக்குப் போன் செய்து அந்த வாய்வு உபத்திரவ பேஷண்ட்  எப்படி இருக்காரு?” என்று கேட்டபோது, “காலையிலே போன் பண்ணினாரு! நான் சொன்னபடி செஞ்சதாகவும், இரவு நல்லா தூங்கினதாகவும் சொன்னாரு!” என்றார்.

அவர் பல சந்தர்பங்களில் பலவிதமான பிரச்னைகளுக்கு வீட்டு சமையல் அறைகளில்  இருக்கும் ஐட்டங்களைக் கொண்டே மருத்துவம் சொல்வதை கவனித்திருக்கிறேன். ஒரு நாள் எங்கள் வீட்டு சமையல் அறையில் இருந்த ஒவ்வொரு ஐட்டத்தையும் பார்த்தபோது அவர் சொன்ன அந்த கிச்சன் ஐட்டங்களின் மருத்துவ குணங்கள் என் நினைவுக்கு வந்தன. அப்போது என் மனதில் மின்னலாக ஒரு தலைப்பு வெட்டியது. “கிச்சன் கிளினிக்” உடனே கல்கி ஆசிரியரிடம் பேசி, “கிச்சன் கிளினிக்” என்ற தலைப்பில், நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் பல்வேறு பொருட்களின் மருத்து குணங்களைப் பற்றி மூலிகை மணி வேங்கடேசனிடம் பேசி ஒரு தொடர் எழுதுவது என முடிவாயிற்று.  விஷயத்தைச் சொன்னதும்,  மூலிகை மணி வேங்கடேசனும் கூட இருந்த  அவரது மனைவி டாக்டர் ருக்மணி வேங்கடேசன், மகள் கே.வி. அபிராமி  ஆகியோரும் “சூப்பர் ஐடியா! எப்போ ஆரம்பிக்கலாம்?” என்று கேட்டனர்.  அதன் பிறகு, அப்பா, அம்மா, மகள் என மூவரும் ஏராளமான தகவல்களையும்,  மருத்துவ அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள ஜாம் ஜாம் என்று கிச்சன் கிளினிக் தொடர் ஆரம்பமானது. வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு.  என்னை சந்தித்த பலர், “இதை எப்போ புஸ்தகமா போடுவீங்க?” என்று கேட்க ஆரம்பித்தனர்.  கிச்சன் கிளினிக் புத்தகமாக வெளிவந்து பல ஆயிரம் பிரதிகள் விற்றதாக மகிழ்ச்சியோடு  சொல்லுவார்கள் மூலிகைமணி குடும்பத்தினர்.

ஒவ்வொரு முறை அவரை சந்தித்துவிட்டுத் திரும்பும்போதும், உடல் நலம் குறித்து ஒரு சில புது விஷயங்களை நான் தெரிந்துகொள்வேன்.  அவற்றை சித்தர் பாடல்கள், பழந்தமிழ்ப் பழமொழிகளை மேற்கோள் காட்டி அவர் எளிமையாக விளக்குவார்.  உதாரணமாக சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது குறித்து கூட ஒரு பழமொழி உள்ளது என்றார்.  அது: இடையிற் குடியேல்; கடையில் மறவேல். அதாவது சாப்பிடும்போது நடுவில் தண்ணீர் குடிக்கக் கூடாது; சாப்பிட்டு முடித்தபிறகு தண்ணீர் குடிக்க மறக்கக் கூடாது.

ஒரு டாக்டர் என்ற முறையில் நோயாளிகளுக்கு சித்த வைத்தியம் செய்ததுடன் நிற்காமல், சித்த மருத்துவம் மற்றும் மூலிகைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தவும் தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டவர் டாக்டர் வேங்கடேசன். சென்னை பல்கலைக் கழகத்தில் இவரது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பு: “தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்” சென்னை, மதுரை மற்றும் மலேசியாவில் நடந்த  உலகத் தமிழ் மாநாடுகளில் மூலிகைக் கண்காட்சிகள் நடத்தி, பலரது பாராட்டுக்களைப் பெற்றவர் இவர்.  சென்னையில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

சிக்கன்குனியா பரவ ஆரம்பித்தபோது, முதல் முதலில் பத்திரிகையாளர்களைக் கூட்டி, நிலவேம்பு குடிநீரை அறிமுகப்படுத்தியவர் இவரே. கோவிட் தொற்று  காலகட்டத்தில் கூட சித்த வைத்தியத்தின் மூலம் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என்று ஆரம்பகட்டத்திலேயே கூறியவர் இவர்தான். கடந்த வருடம் ஜூன் மாதத்தில் கூட, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு கண்களில் கரும்பூஞ்சை பாதிப்பு வருவதாக தகவல்கள் வந்தபோது,  கரும்பூஞ்சைக்கு குங்குமபூவை மருந்தாகப் பயன்படுத்துவது பற்றி எனக்கு ஒரு பேட்டி கொடுத்தார். அவரது மறைவுத் தகவல் அறிந்து, அவரது மகள் டாக்டர் அபிராமியிடம் பேசியபோது, “அவர் அளித்த கடைசி பத்திரிகை பேட்டி உங்களுக்குத்தான்!” என்றார்.

மனசு கனத்தது.

 

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

தேடாதே !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   தேடாதே ! தேடினால் காணாமல் போவாய் ! வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன... சுஜாதாவின் ‘தேடாதே’ என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை. மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம்...

உலகெங்கும் தமிழோசை

0
  - ஸ்ருதி   சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ்...

இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன.

0
 நூல் அறிமுகம்   புதியமாதவி    வாசிப்போம் தமிழ் வளர்ப்போம் குழு   விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல, அவை  கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கின்றன. திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஓரிடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் கட்டமைத்தத்தில்...

உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.

0
முகநூல் பக்கம் சுரேஷ் கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து...   இசை ஞானத்தில் நான் ஒரு பாமரன் என்றாலும் இந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற இளைஞன் ஒரு சாதனையாளன் என்பதை ஒரு மாதிரி 'குன்சாக' உணர முடிகிறது. பியானோவில்...