0,00 INR

No products in the cart.

 கி. ரா.  கற்றுக் கொடுத்த அரிச்சுவடி

நிருபரின் டைரி  – 2

 

 

 

– எஸ். சந்திரமெளலி

 

“When in doubt, leave it out”.

இது கி.ராஜேந்திரன் எனக்குக் கற்றுக் கொடுத்த இதழியல் அரிச்சுவடி. நான் ஒரு தவறு செய்ததன் பலனாகத்தான் அவர் எனக்கு இந்த வாசகத்தைச் சொன்னார்.  “நமக்குத் தெரியாமலேயே, பத்திரிகைகளில் வெளியாகிற விஷயங்களில் சில சமயங்களில் தவறு நிகழ்ந்துவிடுவது இயல்புதான். அந்தத் தவறு சுட்டிக்காட்டப்படும்போது, அதற்குத் திருத்தம் வெளியிடத் தயங்கக் கூடாது” என்று விளக்கினார்.

ஒரு சப்ஜெட்டை எடுத்துக்கொண்டு எழுதுகிறபோது அதிலே குறிப்பிடப்பட வேண்டிய விஷயங்கள் பத்து இருக்கலாம். அவற்றில் ஏழெட்டை மட்டுமே நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கலாம். நீங்கள் எழுதாமல் விட்ட விஷயங்கள் குறித்து வாசகர் பெரிதாகக் குற்றம் சொல்ல மாட்டார். ஆனால் பத்து விஷயங்களையும் நீங்கள் எழுதி, அதில் ஒன்று தவறாக இருந்துவிட்டால் ‘எப்படி தப்பாக எழுதலாம்?’ என்று சண்டை பிடிப்பார்கள். எனவே, எழுதுகிறபோது ஏதாவது சந்தேகம் வந்தால், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தோ, அல்லது விஷயம் அறிந்த மற்றவர்களிடமிருந்தோ ’சரியானது எது’ என்று கேட்டறிந்து எழுதுங்கள். அது இயலாத பட்சத்தில் சந்தேகப்படும் விஷயத்தை எழுதுவதைத் தவிர்த்துவிடுங்கள்” என்பது அவரது அறிவுரை.

1980 வாக்கில் அண்ணா மேம்பாலத்துக்கு அருகில் அமைந்துள்ள ஆயிரம் விளக்கு மசூதியைப் புதுப்பிக்கும் பணி முடிவடைந்தது. அது பற்றிய சிறு செய்தி ஒன்று ஹிந்துவில் வெளியாக, அதைப் படித்துவிட்டு, புதுப்பிக்கப்பட்ட மசூதி குறித்து ஒரு கட்டுரை எழுதச் சொன்னார் கல்கி ஆசிரியர். ஆயிரம் விளக்கு மசூதிக்குச் சென்று விவரங்கள் சேகரித்து, எழுதிய கட்டுரையில் நான் தவறு செய்தபோது வந்த சில வாசகர் கடிதங்களை என்னிடம் படிக்கக் கொடுத்துவிட்டு, இந்தப் பாடத்தை நடத்தினார் கி.ரா.

அப்போது எனக்கு மசூதிக்கும், தர்காவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆயிரம் விளக்கு மசூதியை,  ’தர்கா’ என்று கட்டுரையில் குறிப்பிட்டுவிட்டேன். அதற்குத்தான் எதிர்வினைகள்! பிடித்து எகிறிவிட்டார்கள் வாசகர்கள். ’மசூதி’ முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலம். ’தர்கா’, இறந்த முஸ்லிம் மகான்களின் சமாதி உள்ள இடம். சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கில் இருப்பது மசூதி. எல்.ஐ.சி. கட்டடத்துக்கு எதிரில் இருப்பதுதான் தர்கா. அங்கே மற்ற மதத்தினர்களும் நம்பிக்கையுடன் வந்து வணங்கிச் செல்வார்கள்.

இந்த வேறுபாடு தெரியாமல் நான் எழுதிய கட்டுரை எனக்கு ஒரு வாழ்நாள் பாடமானது. இன்றுவரை துல்லியமாக விசாரிக்காமல் ஒருவரியும் எழுதுவதில்லை. அதுமட்டுமில்லாமல், பேட்டி எடுக்கச் செல்லும் பிரமுகரிடம் பேட்டி முடிந்தவுடன் ஒரு டிஸ்க்ளைமர் போட்டுவிடுவேன். “ஏதாவது சந்தேகம் என்றால், உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டி இருக்கும்; அதற்கு இப்போதே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்பேன். அவரும் தயாராக இருப்பார். நமக்கும் பிரச்னை இருக்காது!

காலப்போக்கில் நானாக எனக்கு இன்னொரு கட்டுப்பாட்டையும் விதித்துக் கொண்டேன். நடிகர் சிம்புவை பேட்டி கண்டு எழுதுகிறேன் என்றால், அது வெளியானவுடன் எவர் வேண்டுமானாலும், “சிம்பு சொல்லி இருப்பது தவறு” என்று மறுப்பு சொல்லலாம்; ஆனால், சிம்பு, “பேட்டியில் நீங்கள் எழுதியுள்ள இந்த விஷயத்தை நான் சொல்லவே இல்லையே!” என்றோ, “நான் சொன்னது ஒன்று; ஆனால் நீங்கள் எழுதி இருப்பது வேறாக இருக்கிறதே?” என்றோ சொல்கிற மாதிரி ஒரு போதும் நடந்துவிடக் கூடாது. எனவே, டேப்பில் பதிவு செய்யாமல் பேட்டிகளை எடுப்பதே இல்லை.

சில சமயங்களில் பேட்டி அளிப்பவர், பேட்டியின்போது சொன்ன விஷயங்களை, பேட்டி வெளியான பிறகு, சிலபல காரணங்களுக்காக “நான் அப்படிச் சொல்லவில்லை” என்று மறுப்பதும் பத்திரிகையுலகில் வெகு சகஜம். இதிலும் என் கொள்கை மாறுபட்டது.

ஒரு முறை முன்னணி ஹீரோ ஒருவரை பேட்டி கண்டேன். ‘இன்றைய தமிழ் சினிமாவில் உங்களுக்கான இடம் எது?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டேன். அவரும் பதிலைச் சொல்லிக்கொண்டே இருந்தபோது அவருக்கு முக்கியமான போன் கால் ஒன்று வர, அதைப் பேசி முடித்துவிட்டு, என் முகத்தைப் பார்க்க, நான் அடுத்தக் கேள்விக்குப் போய்விட்டேன். பேட்டி முடிந்து புறப்பட்டுவிட்டேன்.

மறுநாள் பேட்டியை எழுதிக் கொண்டிருந்தபோது அந்தக் குறிப்பிட்ட கேள்வி வந்தது. நடிகரது பதிலை எழுதி-படித்துப் பார்த்தபோது லேசான மிரட்சி. மீண்டும் சில தடவை கேசட்டைப் போட்டுக் கேட்டேன். “இந்த பதிலை வெளியிட்டால் சரியாக இருக்குமா?” என்ற கேள்வி என் மனத்தில் எழுந்தது. அடுத்த நிமிடம் அவரது மேனேஜருக்கு போன் செய்தேன். ஹீரோ ஹைதராபாதில் இருப்பதாகத் தெரியவந்தது. அடுத்த போன் ஹைதராபாத்துக்கு. ஹீரோ பிரஸ் மீட்டில் இருப்பதாகச் சொன்னார் உதவியாளர்.

அரை மணியில் அந்த ஹீரோவே எனக்கு போன் செய்தார். “இன்றைய தமிழ் சினிமாவில் உங்களுக்கான இடம் எது?” என்ற கேள்விக்கு இப்படி ஒரு வரியில் பதில் சொல்லி இருக்கிறீர்களே! அப்படியே எழுத வேணாம்னு நினைக்கிறேன்” என்றேன். அவரும், “ரொம்ப சரி! அந்த பதில் வேணாம்; நான் இப்போ சொல்ற பதிலை வெச்சுக்கங்க” என்று புதிய பதில் சொன்னார். அப்படியே எழுதி, பேட்டி வெளியானது.

அடுத்த சில நாட்களில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய அவரது படம் ரிலீஸ். பத்திரிகையாளர்கள் காட்சிக்குச் சென்றிருந்தபோது ஹீரோவும் வந்திருந்தார். நான் ஹலோ சொன்னபோது அவருடைய ஆழ் மனத்திலிருந்து வந்த ரியாக்‌ஷன்: “தேங்க்ஸ் ஃபார் தட் போன் கால்.”

ஒருவரை பேட்டி காணும்போது அவரோடு நிறையப் பேசலாம்; நான் பேட்டிக்குப் போகிறபோது ஹோம் ஒர்க் பண்ணாமல் போக மாட்டேன். அதுவும் முதல் முறையாகச் சந்திக்கும் நபர் என்றால் ஆரம்பத்தில் சில மொக்கையான கேள்விகளைக்கூடக் கேட்பதுண்டு. பேட்டி கொடுப்பவருக்கும், பேட்டி காண்பவருக்கும் இடையிலே ஒரு சகஜமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்தக் கேள்விகள். அந்த மொக்கைகளின் பட்டியலில் இடம் பெறும் ஒரு கேள்வி:

“உங்களுக்கு ஏன் இந்தப் பெயரை வைத்தார்கள்?”

இதற்கு அவர்களிடம் சுவாரசியமான பதிலை நான் எதிர்பார்ப்பது கிடையாது. ஆனால், இந்தக் கேள்விக்குச் சிலரிடம் துளியும் எதிர்பாராத சுவாரசியமான பதில்கள் வந்து விழும்.

இப்போது அ.தி.மு.க. ராஜ்ய சபா உறுப்பினராக இருக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி. அவர் ஜெ.ஆட்சி காலத்தில் உள்துறைச் செயலாளராக இருந்தவர். தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு நடக்காமல் இருந்த பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டபோது, அதன் முதல் ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் மலைச்சாமி. அவரை பேட்டி காணச் சென்றேன்.

‘மலைச்சாமி” என்பது சற்றே வித்தியாசமான பெயராக இருந்ததால், அவரிடம் என் வழக்கமான கேள்வியைப் போட்டேன்.

“என் உண்மையான பெயர் மலைச்சாமி இல்லை; மழைச்சாமி” என்றார். நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். “என் சொந்த ஊரான ராமநாதபுரம் மழை காணாத காய்ந்த பூமி. நான் பிறந்த சமயத்தில் அபூர்வமாக மழை பெய்யவே, என் பாட்டனார் “ஊருக்கு மழையைக் கொண்டுவந்த சாமி இந்தக் குழந்தை; அதனால குழந்தைக்கு ’மழைச்சாமி’ என்றே பெயர் வைத்துவிடலாம்” என்று சொல்லிவிட்டார். பள்ளிக்கூடத்தில் சேர்த்தபோது, தலைமை ஆசிரியருக்கு ‘ழ’ வராது போலிருக்கிறது. ஸ்கூல் ரெகார்டுகளில் என் பெயரை மலைச்சாமி என்றே எழுதிவிட்டார். மழைச்சாமியான நான் மலைச்சாமியாகிவிட்டேன்” என்றார்.

சமீபத்தில் ’சஞ்சய் காந்தி’ என்ற வழக்கறிஞர், பெரும் முயற்சி எடுத்து, “காஞ்சிப் பட்டு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பவானி ஜமுக்காளம், மதுரை சுங்கிடிப் புடைவை” என்று சில பொருட்களுக்கு அறிவு சார் சொத்துரிமை (டிரிப்) ஒப்பந்தப்படி ஜியோகிராபிகல் இண்டிகேஷன் எனப்படும் புவி சார் குறியீட்டுச் சான்றிதழ் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவரை பேட்டி கண்டபோது, “அதென்ன சார்! உங்களுக்கு சஞ்சய் காந்தின்னு பேர் வெச்சிருக்காங்க? அவரைவிட ராஜிவ் காந்திதானே பிரபலம்? ஏன் ராஜிவ் காந்தின்னு பேர் வைக்கலை?” என்று கேட்டேன். அதற்கு அவர், “சார்! என் ஒரிஜினல் பெயர் செந்தில்குமார். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம், பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மகனான சஞ்சய் காந்தி விமான விபத்தில் திடீரென்று மரணமடைந்த செய்தி கேட்டு பழம்பெரும் காங்கிரஸ்காரரான என் தாத்தா துடிதுடித்துப்போனார். அன்றைக்கு என்னைக் கூப்பிட்டு, “பேராண்டி! இனிமே உன் பேர் செந்தில்குமார் இல்லை; சஞ்சய் காந்தி” என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு முறைப்படி பெயர் மாற்றம் நடந்தது” என்று பதில் சொன்னார்.

சென்னையில் உள்ள ஒரு பச்சிளம் குழந்தைகள் இல்லத்துக்குச் சென்றிருந்தபோது, தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த சில குழந்தைகளைக் காட்டி, அவர்களின் பெயரைச் சொல்லிக்கொண்டே வந்தார் அந்த இல்லத்தின் நிர்வாகி. “சௌந்தர்யா” என்ற குழந்தையைக் காட்டியபோது  “எப்படி அந்தப் பேரைத் தேர்ந்தெடுதீங்க?” என்று கேட்டேன். “இந்தக் குட்டி எங்க ஹோமுக்கு வந்த அன்னைக்குத்தான், படையப்பாவுல நடிச்சாங்களே நடிகை சௌந்தர்யா, அவங்க  தேர்தல் பிரசாரத்தின்போது ஹெலிகாப்டர் விபத்துல அநியாயமா செத்துட்டாங்க! அவுங்க ஞாபகமா எங்க குழந்தைக்குப் பேர் வெச்சிட்டோம்” என்றார்.

‘சும்மா கேட்கும் கேள்விக்குள்ளும் இத்தனை சரக்கு இருக்கும்’ என்பது இச்சம்பவங்களால் புரிந்தது.

1 COMMENT

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

அப்ரைசர் முத்துசாமி

0
மகேஷ் குமார்   திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மெயின் ரோட்டில் இருக்கும் அந்த வங்கியின் வாசலில் காலை 9 மணிக்கே கூட்டம் நெரியும். அந்த இரண்டு தினங்களில்தான் நகைக்கடன் கொடுக்கப்படும். பெரும்பாலானோரின் கையில் ஒரு...

தல யாத்திரை செய்யும் அளவு பிரபலமான கோயில்கள் உள்ள நாடு அது!

0
உலகக் குடிமகன் - 31  நா.கண்ணன் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பானும், ஜெர்மனியும் கடும் உழைப்பு போட்டு முன்னேறிய பின்னும் தக்கார் யார்? தகவிலார் யார்? எனச் சொல்லி அமெரிக்காவும், இங்கிலாந்தும் இந்த நாடுகளை...

கிச்சன் கிளினிக் பார்த்திருக்கிறீர்களா?

0
ஒரு நிருபரின் டைரி - 32 எஸ். சந்திரமௌலி   ஒரு பெண்மணி தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும்  மளிகைக் கடைக்கு வருகிறார். கடைக்காரரிடம்,  மிளகு நூறு கிராம், சீரகம் ஐம்பது கிராம், வெந்தயம் நூறு கிராம்,...

குன்றென நிமிர்ந்து…

0
  வித்யா சுப்ரமணியம்   மைதிலி இந்த வரவு செலவு கணக்கைக் கொஞ்சம் டாலி பண்ணித் தரமுடியுமா? எனக்கு கொஞ்சம் வெளில போகவேண்டிய வேலையிருக்கு” சாரதாம்மா ஒரு லெட்ஜரை அவளிடம் நீட்ட, தாங்க மேடம் என்றபடி வாங்கிக்...

சத்திரம் அய்யர்

2
  மகேஷ் குமார்   “காலம்பரக் காபி உனக்கு இந்தச் சத்தரத்துல கெடையாது. கண்காணாம ஒழிஞ்சு போ. ஒரு மணு விறகு எடுத்துப்போடத் துப்பில்ல? பாத்திரம் எல்லாம் ஒரே கரி. பானைல தண்ணி இல்ல... கெணத்துல வாளியும்...