எம்.ஜி.ஆர். கை நீட்டி ரசம் வாங்கிக் குடித்தார்

எம்.ஜி.ஆர். கை நீட்டி ரசம் வாங்கிக் குடித்தார்
Published on

ஒரு நிருபரின் டைரி – 24

– எஸ். சந்திரமெளலி

'ஜெமினி கேண்டீன்' .என்.எஸ். மணியன்

த.ப.க. என்றால் என்ன தெரியுமா?

"நீங்கள் தி.மு.க.வா?"

"இல்லை"

"அ.தி.மு.க.வா?"

"இல்லை"

"காங்கிரசா?"

"இல்லை"

"பா.ஜ.க. வா?"

"இல்லை"

"கம்யூனிஸ்டா?"

"இல்லை"

"தா.மா.க.வா?"

"இல்லை"

"பின்னே?"

"தா.ப.க."

"அப்படியென்றால்?"

"தஞ்சாவூர் பட்சணக் கடை"

இப்படி சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் ஒரு பட்சணக் கடைக்கு விளம்பர பிட் நோட்டீஸ் கொடுத்தார் ஒருவர். அந்தக் கடையில் விற்பனை செய்யப்பட்ட இனிப்பு, கார வகைகள் எல்லாம் வாய்க்கு ருசியாக, வயிற்றுக்குக் கெடுதல் செய்யாத வகையில் தயார் செய்யப்பட்டதால், அந்த ஏரியா மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்றிருந்தது. அந்த பட்சணக் கடைக்கு எதிரில் ஒரு சின்னதாய் ஓட்டல். பெயர் லட்சுமி விலாஸ். உள்ளே போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளில் மொத்தமே பத்து பன்னிரெண்டு பேர் போல உட்கார்ந்து சாப்பிடலாம்.  ஆனால், அந்த ஓட்டலின் சுவரில் தமிழின் முக்கிய இலக்கிய கர்த்தாக்கள், பழம்பெறும் சினிமா ஸ்டார்கள் என சுமார் முப்பது பேர் இருப்பார்கள். அந்த ஓட்டலை நடத்தியவர் சுப்ரமணியன் என்கிற தஞ்சாவூர்க்காரர். சுருக்கமாக ஏ.என்.எஸ். மணியன். பிரபலமாக ஜெமினி கேண்டீன் மணியன். மூப்பனார் தொடங்கி பல தா.மா.க. பிரமுகர்களும் த.ப.க.வின் வாடிக்கையாளர்கள் என்றால், வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன், சின்னக்குத்தூசி தியாகராஜன், நக்கீரன் கோபால் என பல இலக்கிய ஊடக பிரபலங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டது லட்சுமி விலாஸ் ஓட்டல்.

பெரும்பாலான மீடியா நண்பர்களுக்கு சின்னக் குத்தூசி மூலமாகவே ஏ.என்.எஸ்.மணியன் அறிமுகமானார். தன்னை சந்திக்க வரும் ஊடகக் காரர்களை அவ்வப்போது "ஒரு காப்பி சப்பிட்டுவிட்டு வரலாம் வாருங்கள்" என்று லட்சுமி விலாசுக்கு அழைத்துக் கொண்டு போவார் சின்னக்குத்தூசி. அங்கே போனால் காப்பியோடு டிபனும் சாப்பிடலாம்.  சாப்பிட்டுவிட்டு, "எவ்வளவு  பில்?" என்று கேட்டால் மணியன் பதில் சொல்ல மாட்டார். காரணம், தான் அழைத்துவரும் நண்பர்கள், சாப்பிட்ட பில்லுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளவே கூடாது" என்ற சின்னக்குத்தூசியின் உத்தரவை சிரம் மேற்கொண்டு கடைபிடிப்பவர் மணியன். அதி தீவிரமான வாசகர். இளம் வயதில் பள்ளிப்படிப்பு பாதியில் நின்று போனாலும் அதன் பிறகும் அவர் புத்தகங்கள், பத்திரிகைகள் படிப்பதை நிறுத்தவில்லை. நல்ல புத்தகம் ஒன்ரைப்பற்றிக் கேள்விப்பட்டால் போதும், உடனே அதை எப்படியாவது காசு கொடுத்து வாங்கிவந்து ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுவார். கல்கி, நா.பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன், லட்சுமி என அத்தனை எழுத்தாளர்களின் தீவிர வாசகர். அவர் மறைந்தபோது, அவரது குடும்பத்தினர் அவருடைய மூக்குக் கண்ணாடியை அணிவித்து, கையில் பொன்னியின் செல்வன் புத்தகத்தையும் வைத்திருந்தது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்ற என்னைப் போன்றவர்களை  நெகிழச் செய்தது.

மணியன் ஜெமினி ஸ்டுடியோவின் கேண்டீனில்  வேலை பார்த்தவர். அவர், ஜெமினி ஸ்டுடியோ மற்றும் கேண்டீன்  அனுபவங்கள் பற்றி சுவாரசியமான அனுபவங்களை பலமுறை சொல்லி இருக்கிறார். அவரது பேட்டி கல்கியில் வெளியானபோது அவருக்கு பரம சந்தோஷம். கல்கி பேட்டி பக்கங்களை லேமினேட் செய்து கடையிலும், ஓட்டலிலும் மாட்டி வைத்திருந்தார். ஜெமினி –விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் பற்றி ரொம்ப சிலாகித்து சொல்லுவார். குறிப்பாக  அவரது மனிதநேயம் பற்றி சொல்லும்போது நெகிழ்ச்சியில் அவருக்குக் கண்கள் கலங்கிவிடும்.  அவரது ஜெமினி கேண்டீன் அனுபவங்கள் எஸ்.எஸ்.வாசன் நூற்றாண்டு விழா மலரில் இடம் பெற்றதை மிகப் பெரிய கௌரவமாகக் கருதினார்.

சாம்பிளுக்கு சில ஜெமினி கேண்டீன் அனுபவங்கள் இங்கே:

ஜெமினியில் 'ஒளவையார்' படம் எடுத்துக் கொண்டிருந்த சமயம். கே.பி.சுந்தராம்பாளுக்கு ஜெமினி கேண்டீன் சாப்பாடு, டிபன் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஒரு நாள் மாலை, படப்பிடிப்பு முடிந்து, கே.பி.எஸ். வீட்டுக்குப் புறப்பட்டுப்போய்விட்டார்.  ஏழு மணி வாக்கில் ஒரு டிபன் கேரியருடன் ஜெமினி கேண்டீனுக்கு வந்த கே.பி.எஸ். வீட்டுப் பணியாளர் ஒருவர் கே.பி.எஸ். அம்மா இரண்டு சாப்பாடு வாங்கிக்கொண்டு  வரும்படி சொன்னதாகச் சொன்னார். கேண்டீன் பொறுப்பாளர் 'ஜெமினி ஆபீசில் இருந்து சாப்பாட்டுக்கான சீட்டு வாங்கிக்கொண்டு வரும்படி சொல்லிவிட்டார். ஜெமினி ஆபீசில் "ஷூட்டிங் முடிந்துவிட்டது; எனவே உணவுச் சீட்டு தருவதற்கில்லை" என்று சொல்லிவிட்டார்கள். கே.பி.எஸ். வீட்டுப் பணியாளர் சாப்பாடு வாங்காமலேயே திரும்பிவிட்டார்.

அடுத்து நாள் ஷூட்டிங்கிற்கு வந்த கே.பி.எஸ். கொத்தமங்கலம் சுப்புவிடம், "வீட்டு சமையல்காரருக்கு உடம்பு சரியில்லை; ஓட்டல் சாப்பாடு வேண்டாமே என்று நினைத்து நம்ம கேண்டீனில் இருந்து இரண்டு சாப்பாடு வாங்கிக்கொண்டு வரும்படி ஆள் அனுப்பினேன். சாப்பாடு தரவில்லையே!" என்று  சொல்ல, உடனடியாக விஷயம் வாசனின் காதுக்குப் போய்விட்டது. "முப்பது லட்சம் ரூபாய்  போட்டு கே.பி.எஸ்.ஐ வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அவருக்கு ஒண்ணரை ரூபாய் விலையுள்ள ரெண்டு சாப்பாடு இல்லையென்று சொல்லிவிட்டீர்களே!" என்று சம்மந்தப்பட்ட ஊழியர்கள் இருவரையும்  அழைத்து, சத்தம் போட்டுவிட்டு, சீட்டுக் கிழித்து விட்டார் வாசன். ஜெமினி வளாகத்தில் பணியாளர்கள் மத்தியில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. மேக்-அப் அறையில் இருந்த கே.பி.எஸ்.  மேக்-அப் மேன் மூலமாக இதைக் கேள்விப்பட்டு, பதட்டத்துடன் நேரே வாசனின் ஆபீசுக்குப் போய்விட்டார். அவர் "என் பொருட்டு இரண்டு பேர் வேலை இழந்து, அவர்கள் குடும்பம் கஷ்டப்படக்கூடாது; அவர்களை மறுபடியும் வேலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்!" என்று கேட்டுக்கொள்ள, அந்த இருவரும் மீண்டும் வேலை கிடைத்தது.

எஸ்.எஸ்.வாசன், எம்.ஜி.ஆருக்கு தன் வீட்டில் ஒரு விருந்து அளித்தார். ஜெமினி கேண்டீனின் தலைமை சமையல்காரர்தான் அன்றைக்கு விருந்து தயாரித்தார். பரிமாறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் மணியனும், இன்னொருவரும். அது பற்றி மணியன் சொன்னது:

"அன்றைக்குத்தான் நான் எம்.ஜி.ஆரை. வெகு அருகில் பார்த்தேன். அன்றைய விருந்தில் ஏராளமான ஐட்டங்கள் பறிமாறப்பட்டாலும், பைன் ஆப்பிள் ரசம் ஊற்றியபோது எம்.ஜி.ஆர். கை நீட்டி ரசம் வாங்கிக் குடித்தார். உடனே, கரண்டியால், ரசத்தில் இருந்து பைன் ஆப்பிள் துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து அவர் கையில் போட்டேன். அவர் அதை சாப்பிட்டுக் கொண்டே, தலையைத் தூக்கி என்னை ஒரு பார்வை பார்த்தார். அடுத்து ஒரு புன்னகை. எம்.ஜி.ஆரின் அந்தப் பார்வையும், புன்னகையும் எனக்கு ஆயுசுக்கும் மறக்காது."

ஜெமினியில் 'சந்திரலேகா' படமெடுத்ததைப் பற்றி பல சுவாரசியமான சம்பவங்களை அவர் சொல்லி இருக்கிறார். சந்திரலேகாவின் மிகப்பிரபலமான டிரம் டான்ஸ் காட்சிக்காக சென்னையில் இருந்த அத்தனை துணை நடிகர்கள், நடிகைகளையும் புக் பண்ணியும் பற்றாகுறை ஏற்படவே, தஞ்சாவூர், கும்பகோணம் என ஒரு ரவுண்டு போய் நடனமாடத் தெரிந்தவர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு வந்தார்கள். அப்படியும், படப்பிடிப்பு அன்று நாலைந்து பேர் குறையவே, ஜெமினியிலேயே வேலை பார்த்த நாலைந்து பேர்களுக்கு பெண் வேடமிட்டு, கடைசி வரிசையில் நிறுத்தி, டான்ஸ் ஆடச் செய்து சமாளித்தார்கள். ஆனால், படம் பார்க்கிறபோது அதைக் கண்டுபிடிக்கவே முடியாது.

அவருக்கு ஏற்பட்ட இன்னொரு பரபரப்பான அனுபவம் பற்றி அறிந்தபோது வியப்படைந்தேன். ஒருநாள் ஓர் இளைஞர் கேண்டீனுக்கு வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டார். மணியன் அவருக்குத் தண்ணீர் கொடுத்திருக்கிறார். தண்ணீர் டம்ளரை வாங்கிக்கொண்டு கொஞ்ச தூரம் போன மனிதர், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டார். ஒரே பரபரப்பு. ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார் அந்த இளைஞர். ஆனால், அதிர்ஷ்டவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தார் அந்த இளைஞர். அந்த இளைஞர் வேறு யாருமில்லை. நகைச்சுவை நடிகர் சந்திரபாபுதான்!

சந்திரபாபு மீது தற்கொலை முயற்சி வழக்கு போடப்பட்டது.  கோர்ட்டில் ஆஜரான சந்திரபாபு ஜட்ஜ் முன் படு ஸ்டைலாக ஷேக்ஸ்பியர் நாடக வசனத்தை பேசிக்காண்பித்து, "நான் சினிமா வாய்ப்புக்கு முயற்சி செய்தேன். ஏமாற்றமே மிஞ்சியது.  விரக்தியில் தற்கொலை முயற்சியில் இறங்கிவிட்டேன்" என்றார்.  நீதிபதி, "மனம் தளராதே! உனக்குத் திறமை இருக்கிறது!  காலம் கனியும்! காத்திரு!" என்று அறிவுரை சொன்னார். இதை அறிந்த வாசன், சந்திரபாபுவுக்கு தான் எடுத்துக் கொண்டிருந்த 'மூன்று பிள்ளைகள்' என்ற படத்தில் சந்திர பாபுவுக்கு சின்ன ரோல் ஒன்று கொடுத்தார்.  அதில் தனது திறமையால் மக்களைக் கவர்ந்த சந்திர பாபுவுக்கு மேலும் வாய்ப்புகள் வரத்துவங்கின"

இப்படி ஏகப்பட்ட அனுபவங்கள், சம்பவங்களை "ஜெமினி கேண்டீன்" என்று ஒரு புத்தகமாகவே எழுதி வெளியிட்டார் மணியன். ஜெமினியை அடுத்து, இந்தியன் எக்ஸ்பிரசில் தன் அண்ணனுடன் இணைந்து கேண்டீன் நடத்தினார். எப்போதாவது, தினமணி ஆசிரியராக இருந்த ஏ.என்.எஸ். என மரியாதையோடு அழைக்கப்பட்ட ஏ.என். சிவராமனிடமிருந்து, மணியனுக்கு அழைப்பு வரும். போனால், "உங்களுக்கு வந்த கடிதம், முகவரியில் ஏ.என். எஸ். மணியன் என்று என எழுதி இருப்பதை சரியாக கவனிக்காமல் எனக்கு அனுப்பிவிட்டார்கள். நானும் பிரித்துவிட்டேன். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!" என்று சொல்லி, கடிதத்தைக் கொடுப்பாராம்.

தான் படித்து ரசித்த எழுத்தாளர்களை நேரில் சந்தித்து, கலந்துரையாடி மகிழ்வார்  மணியன். தான் பெரிதும் மதித்த, சந்தித்த இலக்கியகர்த்தாக்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் அவர்.  அவரது புத்தக வெளியீட்டு விழாக்களில் ஜெயகாந்தன், நல்லி, இல. கணேசன், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு, சிறப்பித்திருக்கிறார்கள்.

ஏ.என்.எஸ். மணியன் தம்பதிகள் தங்கள் மகன்களும், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள் என அனைவர் மீதும் அபரிமிதமான அன்பைப் பொழிந்தனர். அவர்கள் அனைவரும் மணியன் தம்பதியினர் மீது பாசமும், மரியாதையும் கொண்டவர்கள். பெரிய மகன் சூரி உள்ளிட்ட அவரது வாரிசுகள்  தாங்கள் தற்போது வசிக்கும் திருவேற்காடு வீட்டின் மாடியில் அப்பா நினைவாக ஒரு அறையை உருவாக்கி இருக்கிறார்கள். அங்கே அப்பா நினைவாக நிகழ்ச்சிகளை  ஏற்பாடு செய்து வருகிறார்கள். அது மட்டுமில்லை. அப்பா ஏ.என்.எஸ். மணியன் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ள  ஒரு ஆவணப் படம் எடுத்து அவரை கௌரவப்படுத்தி இருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.

அவரது மகன் ஜெயராமன், அப்பா நினைவாக "ஜெமினி கேட்டரிங்" என்று திருமண காண்டிராக்ட் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com