0,00 INR

No products in the cart.

குஜ்ராலின் குறுந்தாடி

 நிருபரின் டைரி  – 3

– எஸ். சந்திரமெளலி

 

மிழ்நாட்டில் அரசியல்,  சினிமா,  இலக்கியம்,  சின்னத்திரை,  ஸ்போர்ட்ஸ்,  மதம் என்று அத்தனை துறையிலும் உள்ள பிரபலங்களைப் பட்டியல் போட்டால் ஒரு நூறு பேர் தேறுவார்கள். அவ்வப்போது இந்தப் பட்டியலில் கவுண்ட் டவுன் போல சிலர் புதிதாகச் சேருவார்கள்; சிலர் விலக்கப்படுவார்கள். இந்த நூறு பேர்களைப் பற்றித்தான் அத்தனை பத்திரிகைகளும் துணுக்கில் ஆரம்பித்து, கவர் ஸ்டோரிகள் வரை எழுதிக்கொண்டிருப்பார்கள்.  இதை,  தமிழ்ப் பத்திரிகை உலகத்தின் சாபக்கேடு என்று கூடச் சொல்லலாம்.

எனக்கு இந்த எழுதப்படாத பட்டியலைக் கண்டாலே கடுப்படிக்கும்.  அதற்காகவே “தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்து யாராவது சென்னைக்கு வருகிறார்களா” என்று பார்த்துக்கொண்டே இருப்பேன்.  யாராவது வருவது தெரிந்தால் உடனே “அவர்களை சந்திக்க வழி என்ன” என்று பார்க்க ஆரம்பித்துவிடுவேன். நம் ஊரில் ஒரு பழக்கம் உண்டு.  உள்ளூர் ஆசாமிகள் ஆகட்டும்,  வெளியூர்க்காரர்கள் ஆகட்டும்,  யாருடைய பிரஸ் மீட் என்றாலும்,  அந்தக் காலத்தில் தினசரிப் பத்திரிகைகளை மட்டும்தான் அழைப்பார்கள். இப்போது எலெக்டிரானிக் மீடியா வந்தபிறகு,  அவர்களையும் அழைக்கிறார்கள்.  ஒருவரும் தப்பித்தவறிக்கூட வாரப் பத்திரிகைகளுக்கு அழைப்பு அனுப்ப மாட்டார்கள்.  எனவே,  வாரப் பத்திரிகைகளைப் பொருத்தவரை,  நியூஸ் பேப்பரைப் பார்த்துத்தான் அயல் மாநிலப் பிரமுகர்கள் சென்னைக்கு வந்துவிட்டுப் போன தகவலே தெரியும்.

அப்போது ராம் விலாஸ் பாஸ்வான் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். தெற்கு ரயில்வேயில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த ஸ்ரீதரனிடம் எனக்கு பரிச்சயம் உண்டு.  அவரிடம், “சென்னை பீச் – திருமயிலை பறக்கும் ரயிலைத் தொடங்கி வைக்க ரயில்வே அமைச்சர் சென்னை வரப்போகிறாரே,  ஒரு அப்பாயின்ட்மென்ட் கிடைக்குமா?” என்று பேப்பரில் வெளியான ரயில்வேத் துறை விளம்பரத்தைப் பார்த்துவிட்டுக் கேட்டேன்.  “அமைச்சரின் புரோகிராமில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இல்லையே” என்றார்.

“எனக்கு மட்டும் பத்து நிமிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கித்தர முடியுமா?” என்று கேட்டேன்.

“ஒன்று செய்யுங்கள்! காலையில் ஏர்போர்ட்டிலிருந்து நேரே நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடில் உள்ள ரயில்வே கெஸ்ட் ஹவுசுக்கு வருகிறார். நாளைக் காலை ஒன்பது மணிக்கு அங்கே வந்துவிடுங்கள்! நீங்கள் அவரைப் பேட்டி காண ஏதாவது வழி செய்கிறேன்” என்றார்.

மறுநாள் காலையில் ஒன்பது மணிக்கு நான் ரயில்வே கெஸ்ட் ஹவுசில் ஆஜரானேன். அமைச்சர் பாஸ்வான் வந்தார்.  முகம் கழுவிக்கொண்டு, ரயில்வே உயர் அதிகாரிகளுடன் சில நிமிடங்கள் பேசினார். அமைச்சருக்கு காலைச் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாப்பிட டைனிங் டேபிளுக்குப் போனவர், சற்றும் எதிர்பாராத வகையில், “பிரஸ்காரங்க யாராவது வந்திருக்காங்களா? அவங்களையும் சாப்பிடக் கூப்பிடுங்க” என்று சொல்ல அதிகாரிகளுக்கு சின்ன ஷாக். சட்டென்று பி.ஆர். ஓ. ஸ்ரீதர் வெளியில் வந்து என்னை உள்ளே அழைத்துக்கொண்டுபோய் அமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

“வாங்க! சாப்பிடலாம்” என்று அழைத்தார் பாஸ்வான். அவர் பக்கத்தில் அமர்ந்து, “சாப்பிட்டுக்கொண்டே என் கேள்விக்கு பதில் அளிக்கலாமில்லையா?” என்று நான் கேட்டதும், “ஓ! தாராளமாக”  என்றார். டேப் ரெகார்டரை ஆன் செய்துவிட்டு, நான் சாப்பிட்டபடியே கேள்விகள் கேட்க, அவரும் சாப்பிட்டுக்கொண்டே பதில் அளித்தார்.

பாஸ்வான் பீகார் மாநிலத்தில் ’சாகர் பன்னி’ என்ற கிராமத்தில் கொஞ்சம் வசதியான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சட்டம் படித்தவர். குடும்பத்தில் முதல் பட்டதாரி. பீகார் மாநில சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி,  டி.எஸ்.பி. ஆகத் தேர்வு செய்யப்பட்டார்.  ஆனால், காக்கி உடையில் பணியாற்றச் செல்வதற்கு முன்னாலேயே தேர்தலில் போட்டியிட்டு காக்கிகள் சல்யூட் அடிக்கும் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்.

தான் அரசியலில் நுழைவதற்குக் காரணமான ஒரு சம்பவத்தையும் பாஸ்வான் நினைவுகூர்ந்தார். கிராமத்தில் ஊர்ப் பண்ணையாரிடம் ஒருவர் அவசரத்துக்கு நூறு ரூபாய் கடன் வாங்கி இருந்தார். சில மாதங்கள் கழித்து, அவரைக் கூப்பிட்டு அனுப்பிய பண்ணையார், “உன் கணக்கில் 400 ரூபாய் பாக்கி. எப்போது கடனைத் திருப்பித் தரப்போகிறாய்?” என்று மிரட்டினார். “என் மகன் பட்டணத்தில் வேலை பார்க்கிறான். அவன் அடுத்த வாரம் ஊருக்கு வரும்போது நிச்சயம் கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு வருவான்”  என்றார் கடன்பட்ட ஏழை.

அடுத்த சில நாட்களில் மகன் தன் சம்பளத்திலிருந்து ஆயிரம் ரூபாய் வரை சேமித்து, ஊருக்கு எடுத்துக்கொண்டு வந்தான்.  மகனிடம் ஆயிரம் ரூபாய் இருப்பது எப்படியோ பண்ணையாருக்குத் தெரிந்துவிட்டது. மகனும் தந்தையும் பண்ணையார் வீட்டுக்குப் போனபோது, அடாவடியாக “கடன் பாக்கி ஆயிரம் ரூபாய்” என்றார் பண்ணையார். அப்பாவிகளிடமிருந்து பண்ணையார் ஆயிரம் ரூபாய் பறிக்க நினைக்கும் விஷயம் தெரிந்து சினிமா ஹீரோபோல பாஸ்வான் அங்கே பிரசன்னமானார், “இவர் எழுதிக் கொடுத்த கடன் பத்திரத்தைக் காட்டு” என்று பாஸ்வான் கேட்க, பண்ணையார், “இதோ” என்று விவசாயி கை நாட்டு போட்ட வெற்றுப் பத்திரத்தைக் காட்ட, பாஸ்வான் அதை அவரிடமிருந்து பிடுங்கி, அவர் கண் எதிரிலேயே கிழித்துப் போட்டுவிட்டு, “இந்த முதியவர் ஒரு ரூபாய்கூட உனக்குத் தரமாட்டார்! உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்” என்று சொல்லிவிட்டார். அன்று முதல் அந்த ஏரியாவில் பெரிய ஹீரோவாகிவிட்டார் பாஸ்வான்.

அதனைத் தொடர்ந்து அரசியலில் குதித்து, தேர்தலில் போட்டியிட்டு வென்றது சரித்திரம். 1977  நாடாளுமன்றத் தேர்தலில், பீகாரின் ஹாஜிபூர் தொகுதியில் போட்டியிட்ட பாஸ்வான், தன்னை எதிர்த்துப் போட்டி இட்ட மஹாவீர் பாஸ்வான் என்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளரைவிட நாலேகால் லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்றது சாதனை.  தன் சாதனையை  89 தேர்தலில் அவரே முறியடித்தார். இப்போது ஓட்டு வித்தியாசம் ஏறத்தாழ ஐந்து லட்சம்.

ராம்விலாஸ் பாஸ்வான் பேட்டியை முடித்துக்கொண்டு விடை பெற்றபோது, பி.ஆர்.ஓ. ஸ்ரீதரிடம், “கொடுத்த வாக்கைக் காப்பாத்தித்டீங்க!  ரொம்ப தேங்க்ஸ்” என்றேன். அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு, “நான்தான் சார் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்! மினிஸ்டர் பிரஸ்காரங்க இருந்தாக் கூப்பிடுங்கன்னு சொன்னப்போ, நீங்க இருந்தது ரொம்ப உதவியா இருந்தது” என்றார்.

ஒரு முறை முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் சென்னைக்கு வந்தார். ராஜ் பவனில் அவருடைய பிரஸ் மீட். என் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த போது ஜெமினி அருகில் டிராஃபிக்கை போலீஸார் நிறுத்திவிட்டார்கள்.  விசாரித்தால், “முன்னாள் பிரதமர் குஜ்ரால் ராஜ் பவனுக்குப் போகிறார். அதற்காகத்தான் டிராஃபிக் நிறுத்தப்பட்டுள்ளது” என்றனர். அவரது கான்வாய் கடந்தபிறகு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. ராஜ் பவனுக்கு ஸ்கூட்டரை விரட்டினேன். பிரஸ் மீட்டுக்கான அழைப்பு ஏதும் என்னிடம் இல்லை.  எனவே,  ராஜ் பவன் வளாகத்துக்குள் நுழையும்போதே,  அங்கிருந்த பாதுகாவலர்களிடம், “தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்! கான்வாய் போவதற்காக டிராஃபிக்கை நிறுத்தியதில் சிக்கிக்கொண்டுவிட்டேன். அதனால்தான் தாமதமாகிவிட்டது! பிரஸ் மீட் ஆரம்பித்துவிட்டதா?” என்று படபடப்புடன் கேட்க, அவர்கள் பிரஸ் மீட் நடக்கும் அரங்கத்துக்கு வழி சொல்லி “சீக்கிரம் போங்கள்”  என்று அனுப்பி வைத்துவிட்டார்கள்.

வழி நெடுக பலரிடமும் தாமதத்துக்கு மன்னிப்பு கோரியபடியே பிரஸ் மீட் நடந்த அரங்கம் வந்து சேர்ந்துவிட்டேன். ஆனால் அந்த பிரஸ் மீட்டோ, அதில் எல்லா பத்திரிகையாளர்களும் கேட்கும் கேள்விகளோ, அவற்றுக்கு குஜ்ரால் அளிக்கும் பதில்களோ எனக்கு முக்கியமில்லை. காரணம்? அவை எல்லாமே அன்றைய மாலையோ,  மறுதினம் காலையிலோ எல்லா பேப்பர்களிலும்,  சானல்களிலும்   வந்துவிடுமே?  அதையே ஒரு வாரம் கழித்து வாரப் பத்திரிகையில் எழுதினால், அதில் வாசகர்களுக்கு என்ன புதிய சுவாரசியம் இருக்க முடியும்? எனவே, எப்போது பிரஸ் மீட் முடியும் என்பதிலேயே குறியாக இருந்தேன்.

அரை மணி நேரம் போல பிரஸ் மீட் நடந்திருக்கும். ஒரு ராஜ்பவன் அதிகாரி, “நேரமாகிவிட்டது. இன்னும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே அனுமதி” என்றார். நான் சுறுசுறுப்பாகி, குஜ்ரால் அந்த அரங்கத்திலிருந்து எந்த வாயில் வழியாக வெளியே செல்வாரோ அங்கே போய் தயாராக நின்றுகொண்டேன். அவர் என்னைக் கடந்து சென்ற தருணத்தில் கை நீட்டி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, “ஒரு சிறு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி வேண்டும் எனக்கு. ஒரு சில நிமிடங்கள் போதும்! பிளீஸ்!” என்றேன்.

நின்று என் முகத்தைப் பார்த்துவிட்டு, “எஸ்! கேளுங்க!” என்றார். “உங்களைப் போன்ற பெரிய மனிதரை நிற்க வைத்துப் பேச மனசுக்குக் கஷ்டமாக இருக்கு! இந்த நாற்காலியில் சில நிமிடங்கள் உட்கார்ந்து பதில் சொல்லலாமே!”  என்றதும்,  புன்னகைத்தபடி,  நாற்காலியில் அமர்ந்துகொண்டார். மடமடவென்று தயாராக இருந்த சில கேள்விகளைக் கேட்க, அவர் பதிலளித்தார்.  ஐந்தாறு நிமிடங்களில் அந்த மினி பேட்டி ஓவர்.

அன்று ஐ.கே. குஜ்ராலிடம் கேட்ட கேள்விகளுள் ஒன்று,
“பொதுவாக இந்திய அரசியல்வாதிகள் யாருமே ஃப்ரெஞ்ச் தாடி வைத்துக் கொள்வதில்லையே? உங்களுக்கு எப்படி அதன் மீது அட்ராக்‌ஷன் வந்தது?”
சிரித்தபடியே, குஜ்ரால் சொன்ன பதில்: “ஒரு முறை சுவிட்சர்லாந்தில் ஒரு சலூனுக்குச் சென்றபோது, லேசாகத் தூங்கிவிட, எனக்கு முடி வெட்டிவிட்ட பெண், ஃப்ரெஞ்ச் தாடி வைத்து, ‘இது உங்களுக்கு நன்றாக இருக்கிறது’ என்று சொல்ல,  எனக்கும் அது  பிடித்திருந்தது. அதிலிருந்து இது தொடர்கிறது!”

நாளிதழ்களுக்குக் கிடைக்காத ஒரு பிரத்தியேக தகவல் எனக்கு மட்டும்!

1 COMMENT

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...

தமிழனுக்கு ஓர் இயல்பான வாழ்வியல் அமைதியைத் தருகிறது…

1
 உலகக் குடிமகன் - 32  நா.கண்ணன்   நான் கொரியா செல்வேன் எனக் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், என் ஜப்பானிய ஆய்வை அமெரிக்கர்களும், கனடாக்காரர்களும், ஜெர்மானியரும், ஆங்கிலேயரும் கவனித்தது போல் கொரியர்களும் கவனித்து வருகிறார்கள் என...

சலூன் கிரி மாமா

0
மகேஷ் குமார்   கிரி மாமாவின் நிஜப்பெயர் அதுதானா என்பது எனக்குத் தெரியாது. அவரை முதல் முதலாகப் பார்த்த சலூனின் பெயர் ‘கிரி சலூன்’. அதிலிருந்து அவர் பெயர் கிரி மாமா. நல்ல உயரமும் உடலுமாக,...

குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்   அன்று நள்ளிரவில் அவன் வீடு திரும்பியதும் அவனுக்கு சாப்பாடு போட டேபிளில் தட்டு வைத்தாள். “எனக்கு வேண்டாம்” “ஏன்?” “வெளிய சாப்பிட்டேன்” “ஹோட்டல் உணவு உடம்புக்கு நல்லதில்லை” “நாம தனியா போன பிறகு உன் கையால் சாப்பிடுகிறேன். அதுவரை...

அப்ரைசர் முத்துசாமி

0
மகேஷ் குமார்   திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மெயின் ரோட்டில் இருக்கும் அந்த வங்கியின் வாசலில் காலை 9 மணிக்கே கூட்டம் நெரியும். அந்த இரண்டு தினங்களில்தான் நகைக்கடன் கொடுக்கப்படும். பெரும்பாலானோரின் கையில் ஒரு...