– எஸ். சந்திரமெளலி
எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் எழுதத் துவங்கியபோது, கல்கி, குமுதம், குங்குமம் என்று பத்திரிகைகளைப் புரட்டினால், அட்டையிலும் உள் பக்கங்களிலும் அழகான வண்ணப்படங்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றை எடுத்தவர் பெயர் ’யோகா’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த யோகாவை சந்திக்கவேண்டும் என்று விரும்பினேன். கல்கி அலுவலகத்திலிருந்து முகவரியைப் பெற்றுக்கொண்டு, தி.நகர், பாண்டி பஜாரில் இன்று பாலாஜி பவன் இருக்கும் இடத்தின் (அன்றைக்கு அதன் பெயர் சாந்தா பவன்) மாடியில் இருந்த யோகாவின் போட்டோ ஸ்டூடியோவுக்குப் போனேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். “கல்கிக்காக நான் எழுதவிருந்த பேட்டிக் கட்டுரைக்கான போட்டோ எடுக்கவேண்டும். எடுத்துக் கொடுக்க முடியுமா?” என்று அவரிடம் கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார்.
அதன்பின், என்னுடன் வந்து படமெடுக்கும்போதெல்லாம் நான் ஒரு விஷயத்தை கவனித்தேன். ’முதலில் படங்களை எடுத்து முடித்துவிடலாம்’ என்று சொல்வார். பேட்டி அளிக்கும் பிரபலத்தை ஏராளமாக படமெடுத்துத் தள்ளுவார். அடுத்து, அவர் பேட்டி அளிக்கும்போதும், இயல்பாக பேசுகிறபோசில் மறுபடியும் கணக்கு வழக்கில்லாமல் படமெடுப்பார். அவர் எடுக்கும் படங்களை வைத்து ஒரு மினி ஆல்பமே போடலாம். ஒரு நாள் அவரிடம், “அட்டையில் ஒரு படம்தான் போடுவார்கள்; உள்ளே, கறுப்பு வெள்ளையானாலும், கலரானாலும் இரண்டு, மூன்று படங்களுக்கு மேல் போட மாட்டார்கள். பத்திரிகையில் வெளியாகும் புகைப்படங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தானே உங்களுக்கு பணம் கொடுப்பார்கள். எனவே, குறைந்த எண்ணிக்கையில் படங்கள் எடுத்தாலே போதுமே!” என்று சொன்னேன்.
அதற்கு அவர், “பத்திரிகையில் நான்கு படங்கள்தான் போடுவார்கள் என்பதற்காக, சரியாக நான்கு படங்கள் எடுப்பது என்பது என்னால் முடியாது. படமெடுப்பது பத்திரிக்கையின் தேவைக்காக என்றாலும், அதைவிட முக்கியமாக என்னுடைய திருப்திக்காக. நான் எடுக்கிறதை எடுத்து கொடுத்துவிடுகிறேன். அதில் தேவையானதைப் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று பதில் சொன்னார். அதாவது, “எதைச்செய்தாலும் சிறப்பாக, ஆத்மார்த்தமாக செய்யவேண்டும்” என்பதுதான் யோகாவின் பாலிசி.
யோகாவுடன் இணைந்து உள்ளூரிலும், வெளியூர்களிலுமாக நிறைய அசைன்மென்ட்ஸ் செய்திருக்கிறேன். அவருடன் சேர்ந்து வெளியூர்களுக்குப் போவது என்பது மிகவும் ஜாலியான அனுபவம். குறிப்பாக
திரு. என்.டி.ராமராவ் முதலமைச்சராக இருந்த சமயத்தில் கல்கி வெளியிட்ட ஆந்திர மாநில சிறப்பிதழுக்காக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளுக்கும் மேற்கொண்ட சுற்றுப்பயணமும், என்.டி.ஆர். உடனான அதிகாலை நேர பேட்டியும் மறக்கவே முடியாத ஒன்று. உள்ளூர் அசைன்மென்ட்களைவிட, வெளியூர் பயணங்களின்போதுதான் நாங்கள் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வோம். அவர் ஏராளமான அரசியல் பிரமுகர்களை படமெடுத்திருந்தாலும், அரசியலில் அவருக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. எனவே, இலக்கியம், இசை தொடங்கி மற்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவார். நாளடைவில், அவர் மீதான அன்பும், மரியாதையும், மதிப்பும் எனக்கு அதிகரித்தன. அவர் எத்தனை மகத்தான மனித நேயர் என்பதும், பல்வேறு வகையான அனுபவங்களின் பொக்கிஷம் என்பதும் புரிந்தது.
ஆரம்ப காலத்தில் அவர் என்னைப்போன்ற பத்திரிகையாளர்களின் பேட்டிகளுக்காக கண்களால் கேமரா மூலம் எழுதிக்கொண்டிருந்த அதாவது புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அவர், அதன்பின், தான் சென்று வந்த இடங்கள் பற்றியும், பழகிய பிரபலங்கள் பற்றியும் பேனா பிடித்து கட்டுரைகள் எழுதத் துவங்கினார். அவைகள் பல்வேறு பத்திரிகைகளின் தீபாவளி மலர்களில் அவர் எடுத்த அழகிய வண்ணப்படங்களோடு பிரசுரமாயின. ஒரு கட்டத்தில், அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிடத் துவங்கினார். என் சக பத்திரிகையாளர்கள் பலர், அந்தக் கட்டுரைகளை பாராட்டியதுண்டு.
யோகாவைப் பொறுத்தவரை அவர் தன்னைத்தானே செதுக்கொண்ட ஒரு சிற்பி என்றால் அது மிகையில்லை. அவரது இளைமைப் பருவம் பற்றி நான் தெரிந்துகொண்டபோதுதான் இது புரிந்தது. அவர் பிறந்தது பெங்களூரு. அவர் தன் அம்மாவின் வயிற்றில் இருந்தபோதே, அவரது அப்பா, பெங்களூரில் நடந்த ஒரு மதக்கலவரத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். ஆக, அப்பாவின் மரணத்துக்குப் பின், இந்த உலகத்தில் பிறந்தவர் அவர். எனவே, குடும்பத்தில் அவரது வரவு பெரிய அளவில் மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை. காஞ்சிபுரத்தில் பள்ளிப்படிப்பு. நண்பர்களின் அன்பும், அரவணைப்பும்தான் அப்போது அவருக்குக் கிடைத்த பெரும் ஆறுதல். காஞ்சிபுரத்தில் அவர் அதிக நேரம் செலவிட்டது சினிமா தியேட்டர்களில்தான். ஒரு தீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்துக் குளித்துவிட்டு, தின்பண்டங்கள் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டவர் நள்ளிரவுக்குப் பிறகுதான் வீடு திரும்பினார். அன்று மட்டும் அவர் பார்த்த சினிமாக்கள் ஐந்து. இதில் ’கர்ணன்’ படத்தை இரண்டு தடவை பார்த்திருக்கிறார். அப்போதிருந்தே அவருக்கு சினிமா மீது ஓர் ஈர்ப்பு உண்டு. யாராவது சினிமா டைரக்டர் அல்லது ஒளிப்பதிவாளரிடம் உதவியாளராகச் சேர்ந்து பணியாற்ற அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
ஸ்கூல் முடித்தவுடன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.யூ.சி. அதன் பிறகு பி.எஸ்சி. சென்னை பாண்டிபஜாரில் ஜெனித் ஸ்டூடியோ நடத்தி வந்த சங்கர் அவருக்கு ஒன்றுவிட்ட சகோதரர். கல்லூரி நேரம் தவிர மற்ற நேரங்களில் அவரது ஸ்டூடியோவில்தான் இருப்பார். அங்கே பல்வகை புகைப்படக் கலை தொழில்நுட்பங்களையும், கேமராவை கையாளும் முறைகளையும் கற்றுக்கொண்டார். சங்கருக்கு உதவியாளராக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் புகைப்படம் எடுக்கப் போக ஆரம்பித்தார். நடிகர் ஜெமினி கணேசன் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு புகைப்படமெடுக்கச் சென்றபோது, இவர் கையிலும் ஒரு கேமராவையும் இரண்டு ஃபிலிம் ரோல்களையும் கொடுத்து படம் எடுக்கச் சொன்னார். யோகா எடுத்த புகைப்படங்கள் நன்றாக வந்திருந்தன. “போட்டோக்களைப் பார்த்துவிட்டு, அண்ணன் சங்கர் என்னை பாராட்டினார். நானும் ஒரு புகைப்படக் கலைஞரானேன்” என்று நினைவு கூர்ந்தார் யோகா.
ஜெனித் ஸ்டூடியோ சங்கர் உபயத்தில், ஒரே காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி என மூன்று பெரிய ஸ்டார்களை தினமும் படமெடுக்கும் பாக்கியம் பெற்றவர் யோகா. அந்த அனுபவங்களை அவரே சொல்லக் கேட்போமா?
“நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்தில் அவரைக் காண தினமும் காலையில் ஏராளமான ரசிகர்கள் அவரது வீட்டுக்கு வருவார்கள். ஜெனித் ஸ்டுடியோ சார்பில் ரசிகர்களை சிவாஜியுடன் போட்டோ எடுப்பதற்காக தினமும் அவர் வீட்டுக்குப் போவேன். சரியாக ஏழரை மணிக்கு மாடியிலிருந்து இறங்கி வந்து ரசிகர்களை சந்திப்பார் சிவாஜி. ’நேரம் தவறாமை’ என்ற பாடத்தை நான் அவரிடம் கற்றுக் கொண்டேன்.
ஒரு முறை எம்.ஜி.ஆரை படமெடுத்துக் கொண்டிருந்தபோது, கேமராவில் சிறு கோளாறு ஏற்பட்டு கேமராவை கிளிக் செய்ய முடியவில்லை. எனக்கு ரொம்ப பதட்டமாகிவிட்டது. வியர்வை பெருக, கைகள் நடுங்கின. என் பதட்டத்தை கவனித்துவிட்டார் எம்.ஜி.ஆர். என்னைப் பார்த்து, “எதற்காகப் பதட்டம்? இப்போது என்ன ஆகிவிட்டது?” என்று சொல்லிவிட்டு, என்னிடமிருந்த கேமராவை வாங்கி இப்படியும், அப்படியும் அசைத்தார். லேசாகத் தட்டினார். அவர் கிளிக் செய்ய கேமரா சரியாகிவிட்டது. என்னிடம் அவர் கேமராவைக் கொடுக்க, நான் படமெடுக்க ஆரம்பித்தேன். அப்போது நான் கற்றுக் கொண்ட பாடம்: எதற்கும் பதட்டப்படக் கூடாது; பதட்டம் பிரச்னையை மேலும் சிக்கலாக்கும்.
தமிழ்நாடு அரசின் வனத்துறையில் நான் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் கிளார்க்காக வேலைக்குச் சேர்ந்த பிறகு, அங்கே புகைப்படக்காரருக்கான வேலை ஒன்று காலியாக இருப்பது தெரியவந்தது. மேலதிகாரிகளுக்கு நான் ஒரு போட்டோகிராபர் என்பது தெரியுமாதலால், “ நீ ஒரு புகைப்படக்காரன் என்பதற்கான சர்டிஃபிகேட் ஏதாவது இருக்கிறதா?’ இல்லையெனில் யாராவது ஒரு பிரபலமான மனிதரிடமிருந்து ஒரு சர்டிஃபிகேட் வாங்கி வர முடியுமா? என்று கேட்டார்கள். நான் ஜெமினி கணேசனிடம் என் தேவையைச் சொன்னேன். அவர் மறுநிமிடமே, தன் லெட்டர்பேடில் “யோகானந்த்” ஒரு நல்ல போட்டோகிராபர். கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து முடிக்கும் திறமைசாலி” என்று தன் கைப்பட எழுதி, கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அதைக் கொடுத்துவிட்டு நான் வனத்துரை போட்டோகிராபரானேன்.
தி.மு.க. தலைவர் கலைஞர் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் யோகா. அவர் மீது யோகாவுக்கு பெரும் மதிப்பும், மரியாதையும் உண்டு. அவருக்கும் இவர் மீது தனிப்பாசம். கலைஞருக்கு யோகா புகைப்படங்கள் எடுத்தால் ரொம்பப் பிடிக்கும், சில சமயங்களில் “படமெடுக்க யோகாவை வரச்சொல்லுங்கள்” என்று அவரே சொல்லி இருக்கிறார். ஒரு முறை அவர் வீட்டிற்குப் புகைப்படங்கள் எடுக்கச் சென்றிருந்தேன். போஸ்டரில் இடம்பெறுவதற்காக, அவர் நடந்து வருவது போல படமெடுக்க வேண்டி இருந்தது. அவர் நடந்துவரும்போது நேர் நேராக நின்று கொண்டு எடுக்கும் புகைப்படத்தில் அவருடைய இரு கால்களும் தெளிவாகத் தெரியாது. , அப்போது பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார் ஸ்டாலின். யோகா, ரொம்பக் கேஷுவலாக, (ஸ்டாலினைச் சுட்டிக் காட்டி) “தம்பியைப் பார்த்து நடந்து வாங்க!” என்று என்று சொல்லிவிட்டார். அடுத்த விநாடியே கலைஞர் பளீரென்று, “நான் ஸ்டாலினைப் பார்த்து நடக்கக் கூடாது; ஸ்டாலின்தான் என்னைப் பார்த்து நடக்கணும்” என்று சொன்னாரே பார்க்கலாம்! இது போல நிறைய அனுபவங்களை என்னிடம் சொல்லி இருக்கிறார் யோகா.
ஒரு புகைப்படக்காரராக அறிமுகமாகி, எனக்கு நல்லதோர் நண்பராகி, எங்கள் குடும்ப நண்பராகி, ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் நாளில் என் மனைவி பாரதி, அவருக்கு தவறாமல் ராக்கி கட்டிவிடும் அளவுக்கு எங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே ஆகிவிட்டவர். (என்ன ஒன்று! எங்கள் வீட்டு ரேஷன் கார்டில் அவர் பெயர் விட்டுப் போய்விட்டது. சேர்க்க முயற்சி செய்துக்கொண்டிருக்கிறேன்) இந்த பிப்ரவரியில் அவருக்கு வயது 75. ஆகவேதான், அவரது பாதை ராஜாவைப் பற்றிய புத்தகமொன்றுக்கு என்னை “அணிந்துரை” எழுதித்தரச் சொன்னபோது, நான் “நட்புரை” எழுதிக் கொடுத்தேன்.
(தொடரும்)
கட்டுரை அருமை. கலைஞரின் காமெடியும், கட்டுரை ஆசிரியர், யோகாவின் பெயரை தன் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க முயற்சிப்பதாக கூறியதும் ரசிக்க வைத்தது.
‘யோகானந்’ ஒரு நல்ல ஃபோட்டோகிராபர்
கொடுத்த வேலையை சிறப்பாக செய்து
முடிக்கும் திறமைசாலி என்று கையெழுத்து
கொடுத்து வனத்துறை ஃபோட்டோகிராபர்
ஆனது மகிழ்ச்சியை தருகிறது.