0,00 INR

No products in the cart.

இசை இளவரசரின் 25

கவர் ஸ்டோரி

– எஸ். சந்திரமௌலி

 

மிழ் சினிமாவில் திரையிசையைப் பொறுத்தவரை மூன்று முக்கிய அத்தியாயங்கள் உண்டு. முதலாவது எம்.எஸ்.விஸ்வநாதன் காலம்.  அடுத்தது இளையராஜாவின் காலம். மூன்றாவது ஏ.ஆர். ரஹ்மானின் காலம். அதற்கு அடுத்து, தமிழ் திரையிசையை ஆக்கிரமித்துக் கொண்ட இசையமைப்பாளர் என்று எந்த ஒரு இசையமைப்பாளரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.  ரஹ்மானுக்குப் பிறகு இன்று ஏராளமான புதிய இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமா உலகில் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இசையில் உருவான பாடல்கள் பல சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருப்பதையும் மறுக்க முடியாது. இந்தக் காலக்கட்டத்தில் இயக்குனர்களின், ரசிகர்களின் கவனத்தை தன்னை நோக்கி ஈர்த்தவர், ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருப்பவர் என்று யுவன் ஷங்கர் ராஜாவைச் சொல்லலாம்.

1997 பிப்ரவரி 28ல் வெளியான சரத்குமார், நக்மா நடித்த  ‘அரவிந்தன்’ படத்தின் மூலமாக  இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் யுவன் ஷங்கர் ராஜா. தன் இசையின் ‘வெள்ளிவிழா’ என்று அண்மையில் பிரம்மாண்டமாக ஒரு பிரஸ் மீட்  நடத்தினார். தன் மனைவியுடன் அதில் கலந்துகொண்ட யுவன், படு ஜாலியான மூடில் கேள்விகளுக்கு பதில் சொன்னார். கொரோனா தடைஉத்தரவுகள்  தளர்த்தப்பட்ட பிறகு நடந்த இந்த பத்திரிகையாளர் சந்திப்பில்  பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள், இணைய தளங்கள், பண்பலைகள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டார்கள். “ஏன்னுடைய ஏற்றத்தாழ்வுகளை  அருகிருந்து கவனித்தவர்கள் நீங்கள்; எனவேதான் இந்த 25ஆம் ஆண்டு விழாவை உங்களோடு கொண்டாடுகிறேன்” என்றார்.

ஒரு இசையமைப்பாளராக முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் யுவன், நூற்றுக்கும் அதிகமான படங்கள், ஏராளமான ஹிட் பாடல்கள் கொடுத்தவர். அவரது திரைப்பட பின்னணி இசைகூட கவனம் ஈர்த்து, பாராட்டு பெற்றுள்ளன.  விஜய், அஜித், சூர்யா என பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு இசை அமைத்துவிட்டார். ஒரு தமிழ் (7ஜி ரெயின்போ காலனி)  மற்றும் ஒரு தெலுங்கு (ஓய்!)  படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம் ஃபேர் விருது பெற்றிருக்கிறார். ஆனால், “விருதுகள் எனது லட்சியமில்லை; பாட்டு ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆகி, அவர்கள் பாராட்டினால் போதும்” என்பதுதான் யுவனின் பாலிசி. அதை மீண்டும் இந்த பிரஸ் மீட்டில் உறுதிப்படுத்தினார் அவர்.

2018ல் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தின் மூலமாக திரைப்படத் தயாரிப்பாளரானார் யுவன். அடுத்து, டைரக்டராக அவதாரம் எடுக்கப்போகிறார். அதற்காக கதை ரெடி. ஹீரோ யார்? என்று கேட்டால், “அது ஹீரோயினை மையப்படுத்திய சப்ஜெக்ட். 2022 இறுதியில் அந்தப் பட வேலை ஆரம்பிக்கும்” என்று பதிலளித்தார்.

இந்தி தெரியாது டீஷர்ட் போட்டு, பரபரப்பு ஏற்படுத்தினீர்களே?
“எனக்கு நிஜமாகவே இந்தி தெரியாது. எனவே அந்த டீஷர்ட்டை அணிந்து கொண்டேன். மற்றபடி, யார் மனதையும் காயப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை”

ஒரு இசை அமைப்பாளராக எதற்காகவாவது நீங்கள் ஏங்கியதுண்டா?
“லதா மங்கேஷ்கர், எஸ்.பி.பி.  ஆகியோரை எனது இசையில் பாட வைக்காதது எனக்கு வருத்தமாக உள்ளது”

உங்கள் அப்பாவைப் போலவே உங்களுக்கும் ஆன்மிக நாட்டம் ஏற்பட்டிருக்கிறதே?
“எல்லா கம்போசர்களுக்கும் ஒரு கட்டத்தில் அந்த எண்ணம் தோன்றும் என்றுதான் நினைக்கிறேன். என் அம்மாவுடைய இழப்புதான், எனக்கு அந்தத் தேடலைத் துவக்கியது. அம்மாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை  என் மனைவி நிரப்பி வருகிறார்.”

யுவன் ஷங்கர் ராஜா முறைப்படி இசைப்பயிற்சி பெற்றவர் இல்லை. ஆனாலும் உயிர்ப்பான இசையை அவரால் தரமுடிகிறது. அவரது சில பாடல்களில் கர்நாடக இசையின் தாக்கத்தை கவனிக்க முடிகிறது. இது எப்படி சாத்தியமாகிறது?
 “எங்கள் வீட்டில் நவராத்திரி சமயத்தில் தினமும் சங்கீத வித்வான்கள் வந்து பாடுவார்கள். அவர்கள் பாடுகிற கீர்த்தனைகளை நான் லயித்துக் கேட்பேன். அதெல்லாம் எனக்குள்ளே இறங்கி இருக்கும் என்று நினைக்கிறேன். அதுதான் அவ்வப்போது என்னையும் அறியாமல், எனது இசையில் வெளிப்படுகிறது. காரணம், நான் ‘இன்ன ராகத்தில், இந்தப் பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும்’ என்று தீர்மானித்துக் கொண்டு இசையமைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், ‘எந்த இசையமைப்பாளருமே, அப்படிச் செய்யமாட்டார்கள்’ என்றுதான் நினைக்கிறேன். அவர்களுக்கு உள்ளே இருக்கும் இசை ஞானம், அந்த நேரத்தில் அப்படிப் பிரவாகிக்கிறது” என்கிறார்.

இளையராஜா இசையில் யுவனும், யுவன் இசையில் இசையராஜாவும் பாடி இருக்கிறார்கள்.  அந்த அனுபவம் பற்றிக் கேட்டால்,
“நான் இசையமைக்கும் படங்களில் சில பாடல்களுக்கு அப்பா பாடினால் நன்றாக இருக்கும் என நான் நினைப்பேன். டியூன் போட்டு,  பாடல் எழுதப்பட்டவுடன், அவரிடம் சொன்னால், பாடுவதற்கு வருவார். காதல் பாடல் என்றாலும், உனக்காக நான் உயிரை விடுவேன் என்பது போன்ற வார்த்தைகள் பாடலில் இருந்தால், தவிர்த்துவிடும்படி சொல்லுவார். அந்த வார்த்தைகளை மாற்றியதும், மடமடவென்று பாடிக்கொடுத்துவிடுவார். அவருடைய இசையில் நான் பாடவேண்டும் என்றால், எனக்கு சொல்லுவார். ஆனால், அவர் எதிரில் இருந்தால், எனக்கு ரொம்ப நெர்வசாக இருக்கும். அது ஏனென்று எனக்கே தெரியாது.  “அப்பா! நீங்க போங்க! நான் பாடி முடிச்சிட்டு சொல்றேன்!” என்று சொல்லிவிடுவேன்.  அதன் பின் நான் நார்மல் ஆகிவிடுவேன்; பாட்டை பாடி முடித்துவிடுவேன்.

கவிப்பேரரசு வைரமுத்துவுடன் ஒரு பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்ற அளவிலான உறவுதான் என்று குறிப்பிட்டாலும்,  மற்ற இளம் பாடலாசிரியர்களோடு நல்ல நட்புறவு கொண்டிருக்கிறார். குறிப்பாக பாடலாசிரியர் நா. முத்துகுமாரை ரொம்பவே மிஸ் பண்ணும் யுவன், “அவரின் இழப்பு மறக்க முடியாத ஒன்று. நா.முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரும் நானும் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றியிருக்கோம். நாங்கள்  ஸ்டூடியோவில் கம்போஸ் செய்துகொண்டிருக்கும்போது,  பாடலில் இந்த வரியை அல்லது வார்த்தையை மாற்றலாமா? என ஆரம்பிக்கும்போதே, “கொஞ்சம் இருங்க! இதோ வந்திடறேன்!” என்று சொல்லிவிட்டு அடுத்த அறைக்குப் போவார்; வரும்போது, பாடலில் நாம் விரும்பிய மாற்றம் இருக்கும்! உடனே ரெக்கார்டிங்கிற்குப் போய்விடுவோம். நாங்கள் இணைந்து பணியாற்றிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி இருக்கின்றன” என நினைவு கூர்ந்தார்.

இஸ்லாமுக்கு மாறி தன் பெயரை ‘அப்துல் ஹாலிக்’ என மாற்றிக் கொண்டுவிட்டாலும், சினிமாவைப் பொறுத்தவரை ‘யுவன் ஷங்கர் ராஜா’ என்ற பெயரில்தான் தொடர்கிறார்.

இயக்குனர் வஸந்த் சாய்  இயக்கிய ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘சத்தம் போடாதே’, ‘மூன்று பேர்; மூன்று காதல்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜாதான்.

வஸந்திடம் யுவனின் பிளஸ் பாயிண்ட்ஸ் என்ன? “ என்று கேட்டபோது,

“யுவன் ரொம்ப ஃப்ரெண்லியானவர்;  எளிமையானவர். அவரது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்  ஏதாவது புதுசாக செய்து   பார்க்கலாமே என்று சொன்னால், உடனே அது சரியாக வருமா? என சந்தேகம்  எழுப்பாமல், “ ஓ! தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாமே!” என்று பாசிடிவான அணுகுமுறையைச் சொல்லலாம்.

‘சத்தம் போடாதே’ படத்துக்காக ‘பேசுகிறேன்…பேசுகிறேன்” பாடலுக்கு முதலில்  வடக்கே மிகவும் பிரபலமான பாடகியான சுபா முட்கலைப்  பாட வைக்கலாம் என்று சொன்னபோது உடனடியாக “ஓ.கே! அவரைக் கேட்கலாம்!” என்று சொன்னார். ஆனால், அவர் பாடமுடியாத சூழ்நிலையில்  “தமிழுக்கு முற்றிலும் புதியவரான நேகா பேசினை பாட வைக்கலாம்” என்று சொன்னேன். அவரையே பாடவைத்தார். நேகாவின்  மாறுபட்ட குரலில் அந்தப் பாட்டு பெரிய ஹிட் ஆனது. அவர் மெலடியில் கலக்குகிறார். அவர் தொட்டால் டியூன்ஸ் கொட்டுகிறது.

இப்போது தனிப்பட்ட ஆல்பம் வெளியிடப்போகிறர் என கேள்விப்பட்டேன்.  பிரபலமாகிவிட்ட இசையமைப்பாளர்கள், பொதுவாக தனி ஆல்பம் எல்லாம் வெளியிடுவதில்லை. ஆனால், ‘ஒரு புது முயற்சி’ என்ற அளவில் தயக்கமில்லாமல் அதை செய்கிறார் யுவன். அவரது சில்வர் ஜூபிளிக்கு என் வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டார் இயக்குனர் வஸந்த சாய்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

புதிய முயற்சிகளை ரசிகர்கள் வரவேற்கிறார்கள்

0
 நேர்காணல் - ஆதித்யா   “தேசபக்திப் பாடல்களால் மட்டுமே ஒரு கச்சேரி” என்ற  எண்ணம் எப்படி எழுந்தது? ஆண்டுதோறும் அமரர் கல்கியின் நினைவுநாளைக் கொண்டாடும்  கல்கி அறக்கட்டளை அந்த நிகழ்ச்சியில் ஒரு பாரம்பரிய பாணி  இசைக்கலைஞரின்  இசைக்கச்சேரி நடைபெறும்.  இந்த ஆண்டு அந்தப்...

“அந்தப் பாராட்டு வாழ்வில் மறக்கமுடியாதது.”

                           தமிழக  நாடகக் கலைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர் திருமதி. லாவண்யா வேணுகோபால்.  இவர் அடிப்படையில்...

ஶ்ரீலங்கா மக்களுக்கு விடியல் எப்போது?

1
கவர் ஸ்டோரி ஸ்ரீலங்காவில் என்ன சிக்கல்? - எஸ். சந்திரமௌலி   1965ல் மலேசியாவில் இருந்து பிரிந்து சிங்கப்பூர் தனிநாடானபோது அதன் முதல் பிரதமரான லீ குவான் யூ என்ன சொன்னார் தெரியுமா? “சிங்கப்பூரை வளர்ச்சி பெறச் செய்து இன்னொரு...

ரன் அவுட் ஆன இம்ரான் கான்!

1
- எஸ். சந்திரமௌலி   நம்ம ஊரு தி.மு.க.வைப் போலவே பாகிஸ்தானில் இருளைப் போக்கி, விடியல் தரப்போவதாக கடந்த 2018ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்தார் இம்ரான் கான். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம்  342...

காற்று வெளியிடை

கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன்   சில நாட்களுக்கு முன் சால் மரத்திலிருந்து விழும் விதைகளின் காணொளி ஒன்று கண்ணில் பட்டது.  குட்டி டிரோன் மாதிரி அவைகள் விழும் காட்சியைப் பார்க்கும்போது தற்போது பெங்களூருவில் பிங்க் நிறப்...