
ஒரு நிருபரின் டைரி – 12
டி.ஆர். கார்த்திகேயன் ஆங்கிலத்தில் எழுதிய ராஜிவ் காந்தி படுகொலைப் புலனாய்வுக் குறித்த புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு வெளியீட்டு விழா அமோகமாக நடந்து முடிந்த கையோடு எனக்கு ஒரு ஆசை வந்தது. அந்தப் புத்தகத்தின் ஆங்கில மூல நூலை, தில்லியில் ராஷ்டிரபதி மாளிகையில் வைத்து அப்போதைய ஜனாதிபது அப்துல் கலாம் வெளியிட்டார். அதுகுறித்த செய்தியையும், புகைப்படத்தையும் கார்த்திகேயன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். எனவே, தமிழ்ப் புத்தகத்தின் பிரதி ஒன்றை அப்துல் கலாமுக்கு அனுப்பி வைக்க விரும்பினேன்.
அந்த சமயம் பார்த்து கலாமின் நெருங்கிய நண்பரும், அவருடன் இணைந்து இந்தியா 2020 புத்தகத்தை எழுதியவருமான ய.சு.ராஜன் சென்னை வந்திருந்தார். கலாம் பற்றிய ஆவணப்படம் எடுத்த நண்பர் தனபால் மூலமாக அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் மூலமாகவே ராஜிவ் காந்தி புத்தகத்தை கலாமுக்குக் கொடுத்தனுப்பத் தீர்மானித்தேன். கலாமுக்கு ஒரு கடிதம் எழுதி, உடன் ராஜிவ் படுகொலை புலனாய்வு தமிழ்ப் புத்தகத்தையும் இணைத்து ராஜனிடம் அளித்தேன். அந்தக் கடித்தத்தில், என்னைப் பற்றிய அறிமுகத்துடன், எனக்கு தில்லி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால், தாங்கள் சென்னை வரும்போது, எனது குடும்பத்துடன் தங்களைச் சந்திக்க விரும்புகிறேன்" என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
சுமார் மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் கிண்டி ராஜ் பவனிலிருந்து போன் வந்தது. பாதுகாப்பு அதிகாரி பேசினார். "வரும் ஐந்தாம் தேதி (5 ஜனவரி 2007) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி சென்னைக்கு வருகிறார். அன்று இரவு ஒன்பது மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையக் கட்டிடத்தில் நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் அவரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று சொன்னபோது, என்னால் என் காதுகளை நம்பமுடியவில்லை.
அடுத்த ஒரு மணி நேரத்தில் என் வீட்டுக் காலிங்பெல் ஒலித்தது. தி.நகர் போலிஸ் ஸ்டேஷனிலிருந்து ஒருவர் நான் போனில் கொடுத்த விவரங்கள் அனைத்தும் சரிதானா என்று விசாரிக்க நேரில் வந்துவிட்டார். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த என் மகன் கௌதமுக்கும், மகள் மானஸாவுக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. "அப்பா நீ பெரிய ஆள்தான்!" என்று சொல்லி மாய்ந்துப்போனார்கள்.
அடுத்து எங்கள் அனைவரையும் துளைத்து எடுத்த ஒரு கேள்வி, ஜனாதிபதியோடு நின்று போட்டோ எடுத்துக் கொள்வது எப்படி? காரணம் பாதுகாப்புக் காரணமாக அவரைச் சந்திக்கச் செல்லும்போது கேமரா, மொபைல் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடியாதே! ராஜ் பவன் அதிகாரி, " கவலைப்படாதீர்கள்! ஜனாதிபதி கூட வரும் போட்டோகிராபரே உங்களைப் போட்டோ எடுப்பார். தில்லிக்குப்போனதும், அவை உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றார்.
வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணிக்குத்தான் அப்பாயின்ட்மென்ட் என்றாலும் மாலை ஆறு மணிக்கெல்லாம் விமான நிலையத்துக்குப் போய்விட்டோம். ஒருவேளை ஜனாதிபதி செல்வதற்காக நிறுத்தப்படும் டிராஃபிக்கில் நாங்கள் சிக்கிக் கொண்டு, அவரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டால் என்று ஒரு முன்னெச்சரிக்கைதான்! செக்யூரிடி கெடுபிடிகள் ஏகத்துக்கு இருக்கும் என்பதால் அவரைச் சந்திக்கும்போது வித்தியாசமான, பிரச்னை இல்லாமல் உள்ளே எடுத்துக் கொண்டு செல்லும்படியாக ஏதாவது ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். பலமாக யோசித்தேன். ஒரு ஐடியா வந்தது. ஓவியர் கோபுலுவிடம் விஷயத்தைச் சொல்லி "அப்துல் கலாமை ஒரு கார்ட்டூனாக வரைந்து கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டு அரைமணியில் அவர் வீட்டில் இருந்தேன். சூப்பரான கார்ட்டூன் ஒன்று தயாராக இருந்தது. அந்தக் கார்ட்டூனை ஒரு ஜெராக்ஸ் பிரதி எடுத்துக் கொண்டேன்.
சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் பலமான பாதுகாப்புப் பரிசோதனைகள் நடந்தன. உள்ளே சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் சென்னையின் பல பிரபலங்கள் ஒவ்வொருவராக அங்கே வந்து சேர்ந்தார்கள். ஒரு லிஸ்டை வைத்துக் கொண்டு அவ்வப்போது வந்து எல்லோரும் இருக்கிறார்களா என்று ஒரு அதிகாரி சரிபார்த்துவிட்டுப் போனார். சென்னை மாநகர காவல் துறையின் 150வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, அவர் விமான நிலையம் வந்து சேர்ந்தபோது இரவு சுமார் பத்து மணி.
ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டோம். என் முறை வந்தபோது குடும்பத்துடன் உள்ளே சென்றோம். வணக்கம் சொன்னபோது ஜனாதிபதியின் கையில் மூன்று மாதங்களுக்கு முன் நான் அவருக்கு எழுதிய கடிதம் இருந்ததைக் கவனித்தேன். என் மனைவி பாரதி, படிக்கிற வயசில் பிஞ்சு மனங்களில் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் எப்படி சிறிது, சிறிதாக நஞ்சை ஊட்டுகின்றன என்று ஆதங்கப்பட்டு, சேனல்களுக்கு சமூகப் பொறுப்புணர்வு அவசியம் என்பதை வலியுறுத்தி எழுதி எடுத்துக் கொண்டு வந்த கடிதத்தை கலாமிடம் கொடுத்தார்.
"நான் என் மகனை அறிமுகப்படுத்தி, "இவனுக்கு பைலட் ஆகணும்னு ரொம்ப ஆசை" என்றேன். உடனே அவர், "நான் கூட பைலட் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்; ஆனா என்னை செலக்ட் பண்ணலை" என்று சிரித்துக்கொண்டே சொன்னார். என் மகளைப் பார்த்து, " உனக்கு என்ன ஆகணும்னு ஆசை?" என்று கேட்டபோது," ஃபேஷன் டிசைனர்" என்றதும், "நிறைய கிரியேடிவிடி வேணும்; நிறையச் சம்பாதிக்கலாம்" என்றார்.
அவரிடம் கோபுலு வரைந்த கார்ட்டூனைக் கொடுத்தேன். சில வினாடிகள் அதை ரசித்துப் பார்த்துவிட்டு, "மூக்கு ரொம்ப நல்லா போட்டிருக்கார்" என்று சொன்னார். கையோடு எடுத்துச் சென்றிருந்த கார்ட்டூனின் ஜெராக்ஸ் பிரதியில் ஆட்டோகிராப் கேட்டேன். "டியர் கோபுலு. என்று எழுதிவிட்டு, சட்டென்று என்னைப் பார்த்து, " அவருக்கு இப்போ எத்தனை வயசு இருக்கும்?" என்று கேட்டார். "எண்பது பிளஸ்" என்று நான் சொன்னதும், டியர் கோபுலு… சார்" என்று சேர்த்து எழுதி அதற்குக் கீழே "கிரேட் கார்ட்டூன். தேங்ஸ்" என்று எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
அடுத்து அவரோடு நாங்கள் நிற்க, ஜானாதிபதி மாளிகையின் போட்டோகிராபர் சில போட்டோக்கள் எடுத்தார். விடை பெற்றுக்கொண்டு அந்த ஹாலை விட்டு வெளியில் வந்தவுடன், போட்டோகிராபர் தன் விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்து, அடுத்த சில தினங்களில் ஜனாதிபதியுடனான உங்கள் போட்டோ உங்களுக்கு வந்து சேரும்" என்றார். மறுநாள் கலாம் ஆட்டோகிராப் போட்ட கார்ட்டூன் பிரதியை கோபுலுவிடம் கொடுத்தபோது, அவர் குழந்தை போலக் குதூகலமடைந்தார்.
அடுத்த வாரமே ஜனாதிபதியுடனான என் சந்திப்பு பற்றி கல்கியில் எழுத வேண்டி இருந்தது. அதற்கு அவசரமாக போட்டோ தேவைப்படவே, ஜனாதிபதி மாளிகைக்கு போன் செய்தேன். ஒரு ஈ மெயில் அனுப்பும்படிச் சொன்னார்கள். ஈ மெயில் அனுப்பி வைத்த மறுநாள் மெயிலில் புகைப்படங்கள் வந்து சேர்ந்தன. ஒரு வாரம் கழித்து ஸ்பீடு போஸ்ட்டில் இரண்டு போட்டோ பிரதிகளும் வந்து எங்களை ஆச்சரியப்படுத்தின.
கலாமின் நண்பர் ய.சு.ராஜனை பேட்டி கண்டபோது அவர் சொன்ன ஒரு சம்பவம்: "கலாமுக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டபோது, அந்த விழாவுக்கு என்னுடைய அப்பாவும் கண்டிப்பாக வரவேண்டும் என்று கலாம் விரும்பினார். விழாவுக்கு, கலாமின் அண்ணனும் வந்திருந்தார். விழா முடிந்து அவர்கள் ஊருக்குப் புறப்பட்ட பிறகு, அவருடைய அண்ணனையும், என் அப்பாவையும் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்காமல் விட்டு விட்டோமே என்று மிகவும் வருந்தினார். பின்னர், கலாம் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டபோது, பதவி ஏற்பு விழாவுக்கு என் அப்பாவும், அவருடைய அண்ணனும் வந்திருந்தார்கள். அப்போது, மறக்காமல் இருவரையும் சேர்த்து ஒரு போட்டோ எடுக்கச் சொல்லி சந்தோஷப்பட்டார்."
அப்துல் கலாம் பற்றி "ஒரு சின்னக் கனவு" என்ற ஆவணப படத்தை எடுத்தவர் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட இளைஞர் தனபால். கோவையைச் சேர்ந்த எலெக்டிரிகல் இஞ்சினியர். அவர் அப்துல்கலாம் சம்மந்தப்பட்ட பல இடங்களுக்கும் நேரில் சென்றும், பலரைச் சந்தித்தும் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, அவரைப் பேட்டி கண்டபோது அவர் சொன்ன சுவாரசியமான அனுபவங்கள்:
"கலாமின் அண்ணனை, ராமேஸ்வரத்தில் சந்தித்துப் பேட்டி கண்டேன். ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டபோது, கலாம் தன் அண்ணனையும் மற்றும் குடும்பத்தினர்களையும் தன்னுடைய சொந்தச் செலவில்தான் தில்லிக்கு வரவழைத்தார் என்று தெரிவித்தார். ஜனாதிபதியின் வேறு சில உறவினர்கள் இன்னமும் ராமேஸ்வரத்தில் கூரை வேய்ந்த வீடுகளில்தான் வசிக்கிறார்கள். அவர்கள் கலாமின் அன்பைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதைக் கண்டு நான் வியந்தேன்.
நான் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்று அவரைச் சந்தித்த ஒவ்வொரு முறையும், அதிகாரிகள் பதினைந்து முதல் முப்பது நிமிடங்கள் வரை நேரம் ஒதுக்கித் தருவார்கள். ஆனால், ஜனாதிபதியோ என்னுடன் குறைந்தது ஒரு மணி நேரமாவது பேசிக் கொண்டிருப்பார். ஒரு முறை, "வாருங்கள்… உங்களுக்கு மொகல் கார்டனைச் சுற்றிக் காட்டுகிறேன்" என்று அழைத்துக் கொண்டு போனார். அங்கே ஒரு குடிசையைக் காட்டி, " இதற்கு நான் சூட்டியுள்ள பெயர் "ஞானக் குடில்" இங்கே அமைதியாக உட்கார்ந்திருந்தால் புதுப்புது சிந்தனைகள் வரும்" என்று கூறினார்.
ஒவ்வொரு முறையும், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழையும்போது, ஜனாதிபதி என்ற பெரிய மனிதரைச் சந்திக்கப் போகிறோம் என்ற பிரமிப்பு இருக்கும். ஆனால், வெளியே வரும்போது, பண்பாடு மிக்க, எளிய, பாசமுள்ள சொந்த தாத்தாவைப் பார்த்து விட்டு வருவது போன்ற உணர்வுதான் மேலோங்கி நிற்கும்." என்று தன் அனுபவங்களை அசைபோட்டார் தனபால்.
டாக்டர் கலாமின் ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்த பிறகு, ஒரு முறை தில்லி சென்றபோது அவரை மீண்டும் சந்தித்தேன். அப்போது "அரசியல் என்பது நாட்டின் வளர்ச்சிக்கான ஒன்றாக இருக்க வேண்டும். அதுதான் டெவலப்மென்டல் பாலிடிக்ஸ்" என்று விரிவாகப் பேசினார். இந்திய ஜனாதிபதிகளில் மக்கள் மனத்தில் என்றும் வசிக்கும் "மக்கள் ஜனாதிபதி"யாகத் திகழ்பவர் டாக்டர் கலாம் என்றால் அது மிகையில்லை.
(தொடரும்)