0,00 INR

No products in the cart.

பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்குமா ஆம் ஆத்மி கட்சி?

 கவர் ஸ்டோரி

– எஸ். சந்திரமௌலி

 

ஞ்சாபில் “வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டம்” என்ற களேபரம் முடிந்து அடுத்து தேர்தல் திருவிழா களைகட்டிவிட்டது.  வரும் பிப்ரவரி 14ஆம் தேதி நடக்கவிருந்த தேர்தலை, குரு ரவிதாஸ் ஜெயந்தி காரணமாக பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது தேர்தல் கமிஷன். மாநிலம் முழுக்க ஒரே கட்டமாக சட்ட மன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10.

பஞ்சாபில் மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில்  (மெஜாரிடிக்கு 59  தேவை) 77 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. கேப்டன் அம்ரிந்தர் சிங் முதலமைச்சர் ஆனார். ஆட்சியைப் பறிகொடுத்த அகாலி தளம் 15 இடங்களிலும், பா.ஜ.க. மூன்று இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற, புதுவரவாக ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களில் ஜெயித்து பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தினைப் பெற்றது.

இந்த ஐந்தாண்டுகளில் அங்கே ஏகப்பட்ட அரசியல் மாற்றங்கள். அம்ரிந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், காங்கிரசில் இருந்தும் விலகி, ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற தனிக்கட்சியை ஆரம்பித்துவிட்டார்.  ‘ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும்’ என்ற உத்வேகத்துடன் களமிறங்கி இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் – மாநில காங். தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மோதல் உலகப் பிரசித்தம்.  காங்கிரஸ் மேலிடம் சித்துவை ஆதரிக்க, கேப்டன்  அம்ரிந்தர் சிங்  முதலமைச்சர் பதவியையே தூக்கி எறிந்துவிட்டு, காங்கிரசில் இருந்து டேக் ஆஃப் ஆகிவிட்டார்.  ஆனால், காங்கிரசின் உட்கட்சிப் பூசல்கள் தீர்ந்தபாடில்லை.

தற்போது சரண்ஜித் சிங் சன்னி முதலமைச்சராக இருந்தாலும், தேர்தலுக்குப் பின் (தப்பித் தவறி) காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல்வர் நாற்காலி மீது ஒரு கண் வைத்திருகிறார் சித்து. ஆனால், காங்கிரஸ் மேலிடத்துக்கு அப்படி ஏதும் எண்ணமிருப்பதாகத் தெரியவில்லை. அண்மையில் காங்கிரஸ்கட்சி தனது டுவிட்டரில் வெளியிட்ட சிறு வீடியோவில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சன்னிதான் என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஊழலில் திளைத்த கட்சி + குடும்ப அரசியல் என்ற  அழியாத முத்திரை பெற்றது சிரோன்மணி அகாலிதளம் கட்சி. இப்போது மாயாவதியின் கட்சியோடு அது கூட்டணி வைத்துள்ளது.

 

புதுக் கட்சி துவக்கி இருக்கும் அம்ரிந்தர் சிங்கை கூட்டணிக்குள் வளைத்துப் போட்டு, ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கிறது பா.ஜ.க. பின்னணியில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், வேளாண் சட்டங்கள், அதற்கு எதிரான ஓராண்டுக்கும் மேலான தொடர் போராட்டம்,  சட்டங்கள் வாபஸ் இன்னபிற நடப்புகள் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை பலவீனமாக்கி உள்ளன. இரண்டு வருடங்களுக்குப் பின் தேர்தல் பேரணியில் கலந்துகொள்ள பஞ்சாப் வந்த  பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிக்கு காங்கிரசும், பா.ஜ.க.வும் அரசியல் சாயம் பூசி, தேர்தல் அரசியல் நடத்துகிறார்கள். ஆனால், இது பா.ஜ.க.வுக்கு எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பது தெரியவில்லை.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் நல்லாட்சி வழங்கி நல்ல பெயர் எடுத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து செயல்படுகிறது. கடந்த மார்ச் மாதமே அது தன் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டது. அது நடத்திய விவசாயிகள் மகா பஞ்சாயத்து பெரும் வெற்றி பெற்றது.  கடந்த ஜூன் மாதத்தில் சண்டிகரில் பேசும்போது, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால்,  எல்லா குடும்பங்களுக்கும் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார்.  கடந்த செப்டம்பரில், டெல்லியைப் போலவே, பஞ்சாப் மாநிலம் முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் “மொஹல்லா” கிளினிக்குகள்  துவக்கப்படும் என அறிவித்தார். இதற்கெல்லாம் கிளைமாக்ஸாக நவம்பர் மாதத்தில் அவர் செய்த அறிவிப்பு: ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், பஞ்சாபில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

அது மட்டுமில்லை. தங்கள் கட்சி ஆட்சியைப் பிடித்தால்  “யார் முதலமைச்சர்” என்பதை முடிவு செய்வதில் கூட ஒரு புதுமையைக் கடைபிடித்தது ஆம் ஆத்மி கட்சி.  யார் முதல்வர் என்பதைத் தீர்மானிக்கும் முடிவினை மக்களுக்கே வழங்கியது அந்தக் கட்சி.  பொது மக்கள், ஆம் ஆத்மி சார்பில் யார் முதலமைச்சராக வரவேண்டும் என்பதை தெரிவிக்க ஏற்பாடு செய்தது.  அதற்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்.   24 மணி நேரத்தில் மூன்று லட்சம் வாட்ஸாப் தகவல்கள்,  4 லட்சம் டெலிபோன் கால்கள், 50 ஆயிரம் குறுஞ்செய்திகள் வந்து குவிந்துவிட்டன. அவற்றின் அடிப்படையில்தான் “ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவத் மான் அறிவிக்கப்பட்டிருக்கிறார்” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரான  வசீகரன். கட்சி நடத்திய டெலிவோட்டிங்கில் 93% பேர் இவரை ஏகோபித்து முன்மொழிந்துள்ளனர்.

யார் இந்த பகவத் மான்? கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, தனது நகைச்சுவை பேச்சுக்கள் மூலமாக பிரபலமானவர் 48 வயது பகவத் மான். ஆரம்ப காலத்தில் “குல்ஃபி கர்மா கரம்” (சூடான குல்ஃபி ஐஸ்) என்ற இவரது காமெடி கேசட் பஞ்சாபின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலித்தது. அரசியல் சடயர் கலந்த இவரது காமெடிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, இவரை பெரும் பிரபலமாக்கியது. வயலில் டிராக்டர் ஓட்டும் விவசாயி கூட டேப் ரெக்கார்டரில் இவருடைய கேசட்களைக் கேட்டுக் கொண்டே வேலையை கவனிப்பார். டீ.வி. சேனல்களில் காமெடி ஷோக்கள் இவரை மேலும் பிரபலமாக்கின. அரசியல்வாதிகளை நக்கலடித்தே பிரபலமான இவர் 2011ல் பஞ்சாப் மக்கள் கட்சியில் சேர்ந்தார். 2017ல் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.  இவர் தற்போது லோக்சபா எம்.பி.ஆக இருக்கிறார்.

“டெல்லியில் ஊழலற்ற ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த முறை பஞ்சாப் மக்கள் நிச்சயம் ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள். மக்களுக்கு  காங்கிரஸ் ஆட்சியின் மீது கடும் அதிருப்தி உள்ளது. பா.ஜ.க.வின் பொய் பிரசாரங்களை இனியும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஆனால் இரண்டு கட்சிகளுமே மற்ற எந்த கட்சியும் வருவதை விரும்பவில்லை. ஆனால், வரும் தேர்தலில், பஞ்சாப் மக்கள் இரு கட்சிகளுக்கும் பாடம் புகட்டுவார்கள். பஞ்சாபில் வெற்றி பெறுவதன் மூலமாக ஆம் ஆத்மி கட்சி ஒரு தேசியக் கட்சியாக எழுச்சி பெறும்” என்று சொல்கிறார் வசீகரன்.

தேர்தல் கமிஷன் பெரிய அளவில் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் பேரனிகளுக்குத் தடை விதித்துள்ள நிலையில், பா.ஜ.க. ஹை டெக்க் பிரச்சார வியூகத்தை வகுத்துள்ளது. பா.ஜ.க.வின் பல்வேறு  முக்கிய தலைவர்களும் சிறிய அவிலான கூட்டங்களில் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்வார்கள். அந்த  பிரச்சார உரைகல் அதே நேரத்தில் அந்த மாநிலத்தின் பல்வேறு ஊர்களிலும் நேரடியாக குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள்  மத்தியில் ஒளிபரப்பப்படும்.

தேர்தல் களேபரங்களுக்கு மத்தியில் முதலமைச்சர் சன்னியின் உறவினரான புபிந்தர் சிங் ஹனி வீட்டில் அமலாக்கப்பிரிவினரது அதிரடி சோதனை நடந்தேறியுள்ளது. பத்து இடங்களுக்கு மேல் நடந்த ரெய்டில் நாலு கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

பஞ்சாபைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் மூன்று முனைப் போட்டி நிலவுகிறது.  ஆட்சியைப் பிடிக்கும் ரேசில் ஆம் ஆத்மி, மற்ற இருவரை விட சற்றே முந்தியிருப்பதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

1 COMMENT

  1. பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ. வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் சுழன்றாலும் , ஆம் ஆத்மி கட்சி அமைக்கும் தேர்தல் வியூகங்கள் மலைக்க வைக்கின்றன. அள்ளி வீசியுள்ள வாக்குறுதிகள் மக்களை அசைத்து பார்க்கிறது. முதலமைச்சரை மக்களே தேர்வு செய்யலாம் என்பது டிஜிட்டல் இந்தியாவில் புது வரவு. அதற்கு கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ்
    பல்லே …பல்லே. பகவத் மான் மாண்புமிகு பஞ்சாப் முதல்வர் ஆவாரா என்பது மார்(க்)ச் ரிசல்டில் தெரிந்து விடும்.

    ஆ. மாடக்கண்ணு,
    பாப்பான்குளம்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

புதிய முயற்சிகளை ரசிகர்கள் வரவேற்கிறார்கள்

0
 நேர்காணல் - ஆதித்யா   “தேசபக்திப் பாடல்களால் மட்டுமே ஒரு கச்சேரி” என்ற  எண்ணம் எப்படி எழுந்தது? ஆண்டுதோறும் அமரர் கல்கியின் நினைவுநாளைக் கொண்டாடும்  கல்கி அறக்கட்டளை அந்த நிகழ்ச்சியில் ஒரு பாரம்பரிய பாணி  இசைக்கலைஞரின்  இசைக்கச்சேரி நடைபெறும்.  இந்த ஆண்டு அந்தப்...

“அந்தப் பாராட்டு வாழ்வில் மறக்கமுடியாதது.”

                           தமிழக  நாடகக் கலைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர் திருமதி. லாவண்யா வேணுகோபால்.  இவர் அடிப்படையில்...

ஶ்ரீலங்கா மக்களுக்கு விடியல் எப்போது?

1
கவர் ஸ்டோரி ஸ்ரீலங்காவில் என்ன சிக்கல்? - எஸ். சந்திரமௌலி   1965ல் மலேசியாவில் இருந்து பிரிந்து சிங்கப்பூர் தனிநாடானபோது அதன் முதல் பிரதமரான லீ குவான் யூ என்ன சொன்னார் தெரியுமா? “சிங்கப்பூரை வளர்ச்சி பெறச் செய்து இன்னொரு...

ரன் அவுட் ஆன இம்ரான் கான்!

1
- எஸ். சந்திரமௌலி   நம்ம ஊரு தி.மு.க.வைப் போலவே பாகிஸ்தானில் இருளைப் போக்கி, விடியல் தரப்போவதாக கடந்த 2018ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்தார் இம்ரான் கான். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம்  342...

இசை இளவரசரின் 25

0
கவர் ஸ்டோரி - எஸ். சந்திரமௌலி   தமிழ் சினிமாவில் திரையிசையைப் பொறுத்தவரை மூன்று முக்கிய அத்தியாயங்கள் உண்டு. முதலாவது எம்.எஸ்.விஸ்வநாதன் காலம்.  அடுத்தது இளையராஜாவின் காலம். மூன்றாவது ஏ.ஆர். ரஹ்மானின் காலம். அதற்கு அடுத்து, தமிழ்...