0,00 INR

No products in the cart.

ஶ்ரீலங்கா மக்களுக்கு விடியல் எப்போது?

கவர் ஸ்டோரி

ஸ்ரீலங்காவில் என்ன சிக்கல்?

– எஸ். சந்திரமௌலி

 

1965ல் மலேசியாவில் இருந்து பிரிந்து சிங்கப்பூர் தனிநாடானபோது அதன் முதல் பிரதமரான லீ குவான் யூ என்ன சொன்னார் தெரியுமா?

“சிங்கப்பூரை வளர்ச்சி பெறச் செய்து இன்னொரு ஸ்ரீலங்கா ஆக்குவோம்” என்றார்.

ஸ்ரீலங்காவை முன்னுதாரணமாகக் காட்டிய லீ குவான் யூ, சிங்கப்பூரை உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு வளர்ச்சியடையச் செய்தார். ஆனால், அன்றைக்கு கனவு தேசமாக பார்க்கப்பட்ட ஸ்ரீலங்கா இன்று பொருளாதாரச் சிக்கலில் மீளவே முடியாத அளவுக்கு மூழ்கிப் போய் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சி பாதிப்பு, அன்னியச் செலவாணி தட்டுப்பாடு, கடுமையான விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்தி, தெருவில் இறங்கிப் போராடும் மக்கள் என ஸ்ரீலங்காவின் இன்றைய பிரச்னைகளை அன்று சீதையைத் தேடிக்கொண்டு இலங்கை சென்ற அனுமாரின் வால் போல நீண்ட பட்டியல் போடலாம். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஸ்ரீலங்காவில் நடப்பதை அவர்கள் உள்நாட்டுப் பிரச்னை என்று நாம் வெறுமனே கடந்து சென்றுவிட முடியாது.

“ஸ்ரீலங்காவில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய சிக்கலுக்கு என்ன காரணம்?” என்ற கேள்வியை ஈழத் தமிழரும், ஐ.நா.வில் பணியாற்றிய அதிகாரியுமான மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் முன் வைத்தோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீலங்காவில் இருந்துவிட்டு, தற்போது சென்னை வந்திருக்கும் அவர்,

“கடந்த 75 ஆண்டுகளாக ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தறாமல், சிங்கள, புத்த மேலாதிக்கத்துக்கு அதீத முக்கியத்துவம் அளித்ததுதான் அடிப்படை காரணம்” என்று ஒரே போடாய் போடுகிறார்.

ஸ்ரீலங்காவின் தற்போதைய பொருளாதார சிக்கலைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், கடந்த 75 ஆண்டு கால ஸ்ரீலங்காவின் சரித்திரத்தை நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியின்போது, சிங்கள மக்கள், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவர்கள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வேலை செய்ய மறுத்தார்கள். அதனால், மலைத் தோட்டப் பயிர்கள் செழித்த மலையகப் பகுதிகளில், இருந்த எஸ்டேட்களில் பணி செய்ய ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து ஏராளமான தொழிலாளர்களை அழைத்துவந்து, பணியில் அமர்த்தினார்கள். தொடர்ந்து, தமிழர்கள் பூர்வீகமாக வசித்த இலங்கையின் வடக்கு, மற்றும் கிழக்குப் பகுதிகளில் புதிதாக டீ, காபி எஸ்டேட்களையும் உருவாக்கினார்கள். இதன் காரணமாக, சிங்கள மக்களுக்கு தமிழர்கள் மீதான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. போதாக்குறைக்கு, தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆங்கிலக் கல்வி கற்கும் வாய்ப்புகளை அதிகரித்து, தமிழர்கள் ஸ்ரீலங்காவின் அரசு பணியில் அனைத்து மட்டங்களிலும் ஆக்கிரமிப்பு செய்ய அனுசரணையாக இருந்தது பிரிட்டிஷ் அரசு. 1948ல் ஆங்கிலேயர்கள், ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறியபோது, ஒரு ஒப்பந்தம் மூலமாக சிறுபான்மையினரான தமிழர்களின் நலனைப் பாதுகாக்க வழி செய்தனர். அதன் காரணமாக, சிங்கள இனத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் மெஜாரிடி சிங்கள மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழர்களின் உரிமைகளை பறிக்க முயற்சிகள் செய்தபோதெல்லாம், ஈழத் தமிழர்கள் லண்டனின் பிரிவியூ கவுன்சில் வரை சென்று தங்களது பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்தனர்.

1972ல் இலங்கை ஒரு குடியரசானது. அடுத்தடுத்து  வந்த ஆட்சியாளர்கள், மைனாரிடி தமிழ் மக்களை ஒடுக்கி, சிங்கள மொழிக்கும், சிங்கள மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கத் துவங்கினார்கள். மலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஸ்ரீலங்கா குடியுரிமையை மறுத்தது, மேற்படிப்பில் சேர, தமிழ் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மார்க் 75 என்றும், சிங்கள மாணவர்களுக்கு 50 போதும் என்றும் நிர்ணயித்தது என பல அதிரடி, அநியாய நடவடிக்கைகளை எடுத்தார்கள். இதற்கிடையே, மலைத் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களையும், வடக்கு, கிழக்கு பூர்வீக தமிழர்களையும் பிளவு படுத்திய நடவடிக்கைகளும் நடந்தேறின.

1958, 1961, 1977, 1983 என நான்கு காலகட்டங்களில் தமிழர்கள் நலன்களுக்கு எதிரான கடுமையான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. கொழும்பு நகரிலிருந்த மிகப் பெரிய தமிழ் தொழில் அதிபர்களின் நிறுவனங்கள் குறிவைத்து சூறையாடப்பட்டன. அவர்கள் பலரும் மீண்டும் தலையெடுக்கவே முடியாத நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்தார்கள். சாத்வீக போராட்டங்களால் பயனில்லை என்ற சூழ்நிலையில், போராளிக் குழுக்கள் உதயமாயின. ஜெயவர்தனா காலத்தில், அவருக்கு அமெரிக்கா, ஜப்பான் போன்ற சில நாடுகளுடனான நல்லுறவு காரணமாக ஓரளவுக்கு அன்னிய முதலீடு கிடைத்தது. ஆனாலும், இனப்போராட்டம் ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. தமிழர்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைக்குப் பின், சற்றே பொருளாதார ரீதியில் தலை நிமிர்ந்தது ஸ்ரீலங்கா. ஆனால் கொரோனா தாக்கத்தால் மீண்டும் சுருண்டு விழுந்தது.

மொத்தத்தில், புத்த பிக்குக்களின் கட்டுப்பாட்டில் ஸ்ரீலங்கா அரசு இயங்கியது; தமிழர்களின் நலனைப் புறக்கணித்து, அந்த இனத்தையே முற்றிலுமாக அழித்தொழிக்க முயன்றது. ஸ்ரீலங்காவின் வளர்ச்சியைவிட தமிழ் இன ஒழிப்பே ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. இதுதான் இன்றைய ஸ்ரீலங்கா சிக்கலின் முன் கதைச் சுருக்கம்” என்று கூறுகிறார் சச்சிதானந்தம்.

“மூன்று “டீ” க்கள்தான் ஸ்ரீலங்காவின் பொருளாதார அடித்தளங்கள். அவை டீ (தேயிலை), டெக்ஸ்டைல் (ஆயத்த ஆடைகள்) மற்றும் டூரிசம் (சுற்றுலா). இவை மூன்றும் பெரும்பாதிப்புக்குள்ளான காரணத்தால்தான் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டு இருக்கிறது. இவை தவிர, ராஜபக்சே அரசின் ஒரு சில தவறான கொள்கைகளும் எரியும் நெருப்பில் ஊற்றிய எண்ணெய் ஆயின. “இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறோம்” என்று சொல்லி, விவசாய உரங்களின் இறக்குமதியை தடை செய்தார். ரசாயன உரப் பயன்பாட்டில் இருந்து, இயற்கை விவசாயத்துக்கு மாறுவது என்பது ஒரே நாளில் செய்யும் காரியமில்லை. படிப்படியாக செய்ய வேண்டியது. திடீரென்று உர இறக்குமதி தடை செய்யப்பட்டதால், விவசாய உற்பத்தி கடுமையாக பாதிப்புக்குள்ளாகி, இன்று உணவுத்தட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது” என்கிறார் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

இவர், ஸ்ரீலங்கா குறித்த ஆழ்ந்த ஞானம் கொண்டவர். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர்.
அவர் மேலும் கூறுகையில், “இன்னொரு பக்கம், ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் ஸ்திரமின்றி உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு, கடனுதவி, மேம்பாட்டு கட்டுமானப் பணிகளில் உதவி என்ற போர்வையில் கந்துவட்டிக்காரன் போல சீனா ஸ்ரீலங்காவிற்குள்ளே புகுந்தது. ஸ்ரீலங்காவின் அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகப்பகுதிகளை 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு அளித்தது, ஸ்ரீலங்காவின் இறையாண்மையையே அடகு வைக்கும் செயலாகும்.

மாவீரன் நெப்போலியன் கொழும்பு துறைமுகத்தின் அமைவிடம் மிக முக்கியமானது. அதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்பவரே தென் கிழக்கு ஆசியாவின் முக்கிய ஆளுமையாக இருப்பார்” என்று சொல்லி இருக்கிறார். அத்தகைய கொழும்பு துறைமுகத்தை ஸ்ரீலங்கா, சீனாவுக்கு தாரை வார்த்துவிட்டது என்பது அந்நாட்டுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
தமிழ் இன ஒழிப்பு என்பதைத் தன் லட்சியமாகக் கொண்டு ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். திரிகோணமலையில் உள்ள சிவன் கோவில் சம்மந்தர் பெருமானால் பாடப்பட்ட தலம். ஆனால், அதன் வெகு அருகாமையில் பிரம்மாண்டமான ஒரு புத்தர் சிலையை நிறுவி இருக்கிறார்கள் என்பதை சிங்கள புத்த இனவாத மேலாதிக்கம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல? “பொதுவாகவே ஈழத்தமிழர்கள் கல்வி அறிவு படைத்தவர்கள்; கடும் உழைப்பாளிகள். ஆனால், சிங்கள மக்கள் எப்போதுமே கடும் உழைப்பினை விரும்பாதவர்கள். கல்வியிலும், தமிழர்களுக்கு இணையாக அவர்களால் போட்டி போட முடியாது.

 தற்போது ஸ்ரீலங்காவில் அரசியல் ரீதியாக ராஜபக்சே குடும்பத்தினர் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ளனர். ராஜபக்சே, ஊழல் செய்து கோடி கோடியாக சம்பாதித்து, அயல்நாட்டு வங்கிகளில் சேமித்து வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஆளும் தரப்பில் இடம்பெற்றுள்ள கூட்டணிக்கட்சிகளும், ராஜபக்சேவுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தெருவில் இறங்கி, ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பை மக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வேறுவழி இன்றி, ராஜபக்சே ஆட்சி கவிழலாம். தேர்தல் மூலமோ, தேர்தல் அல்லாமலோ புதியவர்கள் ஆட்சிக்கு வரலாம். ஆனால், பொருளாதார, நிதிச் சுழலில் சிக்கி, மூழ்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா மீளுமா? மக்களுக்கு விடியல் எப்போது? என்பது கேள்விக் குறிதான்.

1 COMMENT

  1. சுருக்கமாக ஓரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் போரில் இறநத அப்பாவி ‘ தமிழ் மக்கள் உயிர்களின் சாபம்தான்
    திருவரங்க வெங்கடேசன் பெங்களுரு

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...