0,00 INR

No products in the cart.

நீங்கள் எவ்வளவுதான் பிசியான வேலையில் இருந்தாலும், உங்களுடைய மனைவி, மக்களுக்காக  நேரம் ஒதுக்குங்கள்

அண்ணாத்தே வந்த பாதை – 11

 

எஸ்.பி.முத்துராமன்    /   எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி

 

“ஏவி.எம்.மின் “ராஜா சின்ன ரோஜா”  படப்பிடிப்பின்போது ரஜினி, கௌதமி மற்றும் குழந்தைகள் மட்டுமில்லாமல் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கூட முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தாலும், எங்களுடன் ஒத்துழைக்க மறுத்தவர் யார் தெரியுமா? திருவாளர் வானிலைதான்! படத்தின் பெரும்பாலான பகுதிகளை ஊட்டியில்தான் படம் பிடித்தோம். முதல் முறை மொத்த படப்பிடிப்புக் குழுவும் ஊட்டிக்குப் போய் இறங்கிவிட்டோம். ஆனால் திட்டமிட்டதுபோல படப்பிடிப்பை  நடத்தி முடிப்பதற்கு ஏற்ற வானிலை இல்லை. எனவே  திட்டமிட்டதில் பாதியைத்தான் முதல் ஷெட்யூலில் படம் பிடிக்க முடிந்தது. ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டது.

அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்காக ஊட்டி புறப்பட்டோம். “இந்த ஷெட்யூலில் வானிலை நன்றாக இருக்கும்; முதல் ஷெட்யூலில் எடுக்க முடியாமல் போன காட்சிகளையும்,  சேர்த்து எடுத்து முடித்துவிடலாம்” என்று நம்பினோம்; இந்த தடவை, வானிலை எங்களை மோசம் செய்யவில்லை என்றாலும், எடுக்கவேண்டிய காட்சிகள் அனைத்தும் எடுக்க முடியவில்லை; மூன்றாவது முறை ஊட்டி சென்றபோது மீதமுள்ள காட்சிகளை எடுத்து முடித்தோம். இதுபோன்ற எதிர்பாராத காரணங்களால் படப்பிடிப்பு தடைப்படும்போது, பலவிதமான சிக்கல்கள் ஏற்படும். மறுபடியும் நட்சத்திரங்களின் கால்ஷீட் கிடைப்பதில்  பிரச்னை ஏற்படும்; தயாரிப்பாளருக்கு செலவு மிக அதிகமாகிவிடும். சில சமயங்களில் படத்தை எடுத்து முடிப்பது தாமதமாகி, ரிலீஸ் தள்ளிப்போய், பைனான்ஸ் சம்மந்தப்பட்ட சிக்கல்களில் கூடக் கொண்டுபோய் விட்டுவிடும். வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப்பார் என்பதைப் போல சினிமா எடுத்துப் பார்த்தால்தான்  அதன் சிரமம் தெரியும்.

குழந்தைகளை வைத்து, குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட ரஜினி படமான ராஜா சின்ன ரோஜா குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையும் கவர்ந்து, வெள்ளி விழா கொண்டாடியது.

“நான் பல்வேறு தயாரிப்பாளர்களுக்காகவும், பலவிதமான கதைகள் கொண்ட படங்களை இயக்கி இருக்கிறேன் என்றாலும், சொந்தமாக ஒரு படம் தயாரிக்க வேண்டும்” என்ற எண்ணம் எனக்கு வந்ததில்லை. காரணம் எனக்கு அமைந்த தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்கமானவர்கள். நான் அதிக எண்ணிக்கையில் படங்கள் இயக்கிய எனது தாய் வீடான ஏவி.எம். எனது இனிய நண்பரான பஞ்சு அருணாசலத்தின் பஞ்சு ஆர்ட்ஸ் புரொடெக்‌ஷன்ஸ், இயக்குனர் சிகரத்தின் கவிதாலயா போன்ற பெரிய நிறுவனங்கள்   மட்டுமின்றி எல்லாருமே என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு முழுமையான சுதந்திரம் அளித்தார்கள். ஆனாலும், தயாரிப்பாளராகவேண்டும் என்கிற சூழ்நிலை ஒரு கால கட்டத்தில் ஏற்பட்டது. அது ஏன்?

நான் சுமார் 75 படங்களை இயக்கி இருந்தாலும் பாபு, வினாயகம் என்ற இரண்டே இரண்டு ஒளிப்பதிவாளர்கள்தான் என்னுடன் பணியாற்றி இருக்கிறார்கள். 75 படங்களுக்கும் ஒரே எடிட்டர் ஆர். விட்டல். அதேபோலத்தான் ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர், காஸ்டியூமர் என்று அனைவருமே ஒரு குழுவாக, குடும்பமாகத்தான்  பணியாற்றுவோம். அதனால்தான் எங்கள் அனைவரையும் சேர்த்து தமிழ்த் திரை உலகில் “எஸ்பி.எம். யூனிட்” என்று குறிப்பிடுவார்கள். நான் எந்தப் படத்தை இயக்க ஒப்புக்கொண்டாலும், என் யூனிட்டைச் சேர்ந்த அனைவருமே அந்தப் படத்தில் பணியாற்றுவார்கள் என்பது எழுதப்படாத விதி என்றே சொல்லலாம். நான் இயக்கிய படங்கள் வெற்றி பெறும்போது அது எங்கள் “யூனிட்டின் வெற்றி ” என்று நான் எப்போதும் தவறாமல் குறிப்பிடுவேன்.

அரசாங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றால் பிராவிடெண்ட் ஃபண்டு, கிராசூட்டி, பென்ஷன் எல்லாம் கிடைக்குமில்லையா?ஆனால் சினிமாத்துறையில் அப்படி எந்த ஏற்பாடும் இல்லை. எனவே, என்னுடன் கூடவே சுமார் இருபது ஆண்டு காலம் பணியாற்றிய டெக்னிஷியன்களுக்கு நான் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வெகு நாட்களாகவே இருந்தது. அப்படி ஏதாவது செய்யாதுபோனால் அவர்களது உழைப்பைப் பயன்படுத்திக்கொண்டு என்னை  மட்டும் உயர்த்திக்கொண்டுவிட்டதாக ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டுவிடும் என நான் நினைத்தேன்.

ஒரு நாள் ரஜினியிடம், “நீங்கள் எனக்கு ஒரு படம் நடித்துக் கொடுத்தால், அதை நானே தயாரித்து, அதில் கிடைக்கும் லாபத்தை என்னுடைய யூனிட்டில் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து என் ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ளுவேன்” என்று கூறினேன். ரஜினி என் எண்ணத்தைப் பாராட்டியதுடன், “கண்டிப்பா உங்கள் யூனிட்டிற்காக ஒரு படம் பண்ணறேன் சார்!” என்று உறுதியளித்தார்.

அந்த சமயத்தில், ஏவி.எம்.நிறுவனம் ரஜினி நடிக்க ஒரு படத்தைத் தயாரிப்பது என்றும், அந்தப் படத்தின் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் என்றும் முடிவானது. வழக்கமாக ஏவி.எம். படங்களை நான்தான் இயக்குவேன் என்பதால், அதற்கு மாறாக ஆர்.வி. உதயகுமார் இயக்கப் போகும் விஷயத்தை என்னிடம் எப்படிச் சொல்லுவது என்று அவர்கள் தயங்கினார்கள். அப்போது ரஜினி, “எஸ்பி. எம். சாரிடம் இதை நானே சொல்லிவிடுகிறேன்; அவர் நிச்சயம் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்” என்று கூறி இருக்கிறார். உடனே, சரவணன் சார், “நீங்கள் முத்துராமனுக்காக நடிக்கவிருக்கும் படம் முடிந்த பிறகு, ஆர்.வி. உதய குமார் இயக்கத்தில் எங்களுக்கு கால்ஷீட் கொடுங்கள். அப்படிச் செய்தால்தான் எங்களுக்கு மனத்திருப்தி ஏற்படும்” என்று பெருந்தன்மையுடன் கூற, ரஜினியும் அப்படியே செய்தார்.

சொந்தக் கம்பெனிக்கு என்ன பெயர் வைப்பது என்ற கேள்வி எழுந்தபோது, என்னுடைய தாயார் பெயரில் “விசாலம் புரொடக்‌ஷன்ஸ்” என்றே வைக்கும்படி ரஜினி ஆலோசனை கூறியதோடு மட்டுமில்லாமல், தன் நண்பர் பிரபாகரன் என்பவர் கன்னடத்தில் எடுத்த ஒரு வெற்றிப் படத்தையே தமிழில் நீங்கள் எடுங்கள்” என்றும் கூறி அதற்கான உரிமையை வாங்கிக் கொடுத்தார். அந்தப் படம்தான் “பாண்டியன்”. படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபாகரன்தான். என்னுடைய ‘பெத்த மனம் பித்து’ என்ற படத்தில் ஒரு சாதாரண ரோலில் அறிமுகமாகி, பின்னர் பேரும் புகழும் பெற்ற ஜெயசுதா, ரஜினிக்கு சகோதரியாக நடித்தார்.

பாண்டியன் படத்தில் ரஜினிக்கு ஜோடி குஷ்பு. அவரிடம் “எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும்?”  என்று கேட்டபோது, ” உங்களிடம் நான் சம்பளம் கேட்கலாமா?” என்று கூறினார். கடைசியில் சரவணன் சார் ஆலோசனைப்படி, அவர் அதற்கு  முன் நடித்த படத்துக்கு  வாங்கிய  சம்பளத்தையே கொடுத்தோம்.

படத்துக்கு இசை இசைஞானி இளையராஜா. அவர் ஒரு நாள் ஒரு டியூனைப் போட்டுக் காட்டி எப்படி இருக்கிறது என்று கருத்துக் கேட்டார். அந்த டியூன் மிகவும் அற்புதமாக இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது, அந்த டியூனை உருவாக்கியவர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா என்று. அந்த டியூனை பாண்டியன் படத்தில் பயன்படுத்திக் கொண்டதுடன், ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, கார்த்திக் ராஜாவை அறிமுகப்படுத்தி வைத்தோம். அந்த டியூனுக்கு எழுதப்பட்ட பாட்டு மிகப் பெரிய அளவில் ஹிட்டாயிற்று. அதுதான் “பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா!”

படத்தை தயாரிப்பது என்று இறங்கி விட்டேனே தவிர பட வியாபாரம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அது மட்டுமில்லை; என் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் என்ன சம்பளம் வாங்குகிறார்கள் என்று கூட எனக்குத் தெரியாது. எனவே, நேரே, சரவணன் சாரிடம் சென்று, “நான் பெயருக்குத்தான் பாண்டியன் படத்தின் தயாரிப்பாளர்; மற்றபடி எனக்கு பிசினஸ் பேசத் தெரியாது என்பதால், நீங்கள் தான் படத் தயாரிப்பையும், வியாபாரத்தையும் கவனித்துக் கொண்டு எனக்கு உதவி செய்ய வேண்டும்”  என்று கேட்டுக் கொண்டேன். சரவணன் சார் முழுமனதோடு  சம்மதம் தெரிவித்தார். சொன்ன மாதிரியே சரவணன் சாரும், குகன் சாரும்  முழுமையாக தயாரிப்பு சம்மந்தப்பட்ட விஷயங்களையும், வியாபாரத்தையும் கவனித்துக் கொண்டார்கள். அதன் காரணமாகத்தான் பாண்டியன் படத்தில் லாபம் கிடைத்தது. லாபத்தை அனைவரும் சமமாகப் பிரித்துக் கொண்டோம். அதில் எனக்கு மிகுந்த திருப்தி. நாம் உயரக் காரணமானவர்களை நாம் உயர்த்த வேண்டும். எனது யூனிட்டை சேர்ந்த அனைவரும் இன்று சௌகரியமாக வாழ்கிறோம்.

பாண்டியன் படம் மூலமாக எனது யூனிட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவ முடிந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றாலும், அதே நேரம் வாழ்க்கையில் ஒரு பெரும் சோகத்தையும் நான் சந்திக்க நேரிட்டது.  நான் படம் இயக்க ஆரம்பித்தது முதலே சிவாஜி, ரஜினி, கமல், முத்து ராமன், ஜெய்சங்கர், சிவகுமார், விஜயகாந்த், பிரபு, சத்திய ராஜ் என்று பிசியான நடிகர்களின் படங்களை ஆண்டுக்கு மூன்று, நான்கு படங்கள் என்று தொடர்ந்து இயக்க வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்ததால் என்னுடைய குடும்பத்தை பற்றி நினைக்கவே எனக்கு நேரமில்லை. காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டால், இரவு படுப்பதற்குத்தான் வீடு திரும்புவேன். ஒரு குடும்பத் தலைவன் என்ற முறையில் நான் சரிவர கடமையாற்றத் தவறி விட்டேன்.

ஒரு முறை ரஜினி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “ஒரு நாள் ராத்திரி எட்டு மணிக்கு முத்துராமன் சார் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டப் போறாரு! அவருடைய மனைவி, கதவைத் திறக்காமலேயே, ” சார் ஏவி. எம். ஸ்டுடியோவிலே இருக்காரு” ன்னு சொல்லப் போறாங்க” என்று தமாஷாகக் குறிப்பிட்டார். என் மனைவி, மக்களின் நியாயமான வருத்தத்தைப் போக்க வேண்டும் என்று விரும்பினேன். ஒரு நாள் அவர்களிடம், “பாண்டியன் படம் முடிந்ததும், யூனிட் நண்பர்களுக்கு உதவி செய்த திருப்தி  ஏற்படும். அதன் பிறகு, வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டும் ஒப்புக்கொண்டு, உங்களுடன் நிறைய நேரம் செலவிடப் போகிறேன்! இவ்வளவு நாள் நான் செய்த தவறுக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன்;   படம் முடிந்தவுடன், நாம் அனைவரும் சிங்கப்பூர், மலேசியா என்று ஒரு டூர் போகலாம்” என்று சொன்னதும், குடும்பத்தினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

பாண்டியன் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் என் மனைவி நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். இதய சிகிச்சை நிபுணர்,  “ஆபத்து ஏதுமில்லை; இன்னும் மூன்று மாதங்கள் கழித்து மறுபடியும் ஆஞ்சியோகிராம் எடுத்துப் பார்த்து, அவசியமானால் அறுவை சிகிச்சை செய்யலாம்” என்று  சொல்லிவிட்டார். இரவு, சென்னை துறைமுகத்தில் சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு. புறப்படுவதற்கு முன்பு, வீட்டுக்கு போன் செய்தேன். “நான் நன்றாக இருக்கிறேன்; கவலைப்படாமல் ஷூட்டிங்கிற்குப் போங்கள்” என்று என் மனைவியே பேசினார். நான் துறைமுகத்தை அடைந்தேன். படப்பிடிப்பு நடக்கவிருந்த இடம், துறைமுகத்தின் உள்ளே வெகுதூரம் தள்ளி  இருந்தது. போகிற வழியில் ஒரு ஏற்றுமதி-இறக்குமதி அலுவலகம் என் கண்ணில் பட்டது. உள்ளே சென்று என் வீட்டுக்கு போன் செய்து “அவசியமானால் இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள்” என்று அந்த அலுவலக எண்ணைக் கொடுத்தேன்.(அது செல் இல்லாத காலம்) அந்த அலுவலகத்தில் இருந்தவர்களிடமும், எங்கள் வீட்டிலிருந்து போன் வந்தால் எனக்கு தகவல் சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டேன். வழக்கமாக வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டால் நான் எங்கே செல்கிறேன், எப்போது வீடு திரும்புவேன் என்றெல்லாம் வீட்டில் சொல்லுகிற பழக்கம் எனக்குக் கிடையாது.  அன்றைக்கு அபூர்வமாக ஏதோ தோன்றியதால், இப்படிச் செய்தேன்.

படப்பிடிப்பு ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆகி இருக்கும். ஏற்றுமதி-இறக்குமதி அலுவலக ஊழியர் ஒருவர் ஓடி வந்தார். உடனே வீட்டுக்கு வரும்படி தகவல் வந்ததாகத் தெரிவித்தார். எடுத்துக்கொண்டிருந்த சண்டைக் காட்சியை எப்படி எடுத்து முடிக்க வேண்டும் என்று ஜூடோ ரத்தினம் மாஸ்டரிடமும், கேமராமேன் வினாயகத்திடமும் சொல்லிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். வேகம் வேகமாக வந்தும் வீட்டுக்குள் நுழைந்தபோது என் மனைவியின் உயிரற்ற உடலைத்தான் என்னால் பார்க்க முடிந்தது. எதிர்பாராத விதமாக ஹார்ட் அட்டாக் தாக்குதலுக்குள்ளாகி ஆஸ்பத்திரிக்குச் செல்லும் போதே உயிர் பிரிந்துவிட்டது. அது என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய சோகம்.

வீட்டைப் பற்றிய எந்த நினைவோ, கவலையோ இல்லாமல் சினிமாவுடன் ஒன்றிப் போன எனது வாழ்க்கையில், முழுமையாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு எனக்கு பக்கபலமாக இருந்தார் எனது மனைவி கமலா. என் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று கூட எனக்குத் தெரியாது. அவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் அழைத்துச் சென்றது கிடையாது; அவர்களுக்கு   திருமண ஏற்பாடுகள் எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது.  என் வாழ்க்கையில் குடும்பப் பொறுப்பு என்ற பாரத்தை எனக்கு எந்தவித சிரமும் அளிக்காமல் முழுமையாக தானே சுமந்தார் அவர்.

இந்த சோகம்  ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அடுத்த பத்து நாட்களில் பாண்டியன் படம் வெளியாக வேண்டும். சிங்கப்பூரிலிருந்து ரஜினி போன் செய்து, “இப்படிப்பட்ட சோகமான சூழ்நிலையில், பட  ரிலீஸ் பற்றி கவலைப்படாதீர்கள். ரிலீஸ் தேதியை ஒத்திவையுங்கள்;  அதனால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்பட்டாலும் அதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம்” என்று அக்கறையுடன் ஆலோசனை கூறினார்.  அந்த துக்கம் நிகழ்ந்தது முதல் ஒரு சகோதரர் போல என் கூடவே இருந்து ஆறுதல் கூறியவர் சரவணன் சார். சில நாட்கள் கழித்து ‘வினியோகஸ்தர்கள் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாவிட்டால் பெரும் அளவில் நஷ்டப்பட நேரிடும் என்று நினைக்கிறார்கள்’  என்று அவர் என்னிடம் தெரிவித்து “என்ன செய்யலாம்?” என்று கேட்டார். “என் சோகத்தால், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. சொன்ன தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்து விடலாம்; உடனடியாக அதற்கான வேலைகளை ஆரம்பித்து விடுகிறேன்” என்று சொன்னேன், “திட்டமிட்டபடி, குறித்த தேதியில் படம் வெளியானால்தான் என் மனைவியின் ஆன்மா சாத்தியடையும்” என்று எனது மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு, சோகத்தை எனக்குள்ளே அடக்கிக் கொண்டு, என் அன்புக்குரிய மனைவியை இழந்த நாலாவது நாளிலிருந்து பாண்டியன் படத்தின் இறுதி கட்டப் பணிகளில் மூழ்கினேன்.

நான் என் மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு இப்படி ஒரு முடிவை எடுக்கப்பதற்குக் காரணம் தேவக்கோட்டை டி. பிரிட்டோ பள்ளியில் படித்தபோது அங்கே ஆசிரியராக இருந்த நல்லமுத்து என்பவர்தான். அவர் வருடத்தில் ஒரு நாள் கூட லீவு எடுத்தது கிடையாது. பள்ளி நிர்வாகத்தினர் ஆண்டுதோறும் அதற்காக அவரை கௌரவிப்பார்கள். ஒரு நாள் பிற்பகலில் அவரது மனைவி இறந்துவிட்டார். பல வருடங்கள் லீவு எடுக்காத அந்த ஆசிரியர் மறுநாள் லீவு எடுக்கும்படி ஆகிவிட்டதே என்று அனைவரும் கவலைப் பட்டார்கள். ஆனால், மறுநாள் காலை அவரை பள்ளியில் பார்த்தபோது எல்லோருக்கும் எதிர்பாராத அதிர்ச்சி என்றே சொல்லலாம்! வீட்டில் சும்மா உட்கார்ந்து சோகத்தில் மூழ்கி இருப்பதைவிட எனது மாணவர்களுக்கு  பாடம் சொல்லிக்கொடுப்பதுதான் எனக்கு ஆறுதல்” என்று அவர் விளக்கம் அளித்தார். இந்த சம்பவம்தான் எனது நினைவுக்கு வந்தது. அதுவே  என்னை எனது பணியில் தொடர்ந்து ஈடுபடவைத்தது. பாண்டியன் படம் திட்டமிட்டபடியே தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது.

இந்த சமயத்தில் நான் வாசகர்களுக்கு ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவுதான் பிசியான வேலையில் இருந்தாலும், உங்களுடைய மனைவி, மக்களுக்காக  நேரம் ஒதுக்குங்கள். அவர்களோடு மகிழ்ச்சியாக இருந்து, அவர்களை மகிழ்ச்சியடைய செய்யுங்கள். என் மனைவி இருந்தபோது, ஒரு கணவராக அவருக்கு உதவ முடியவில்லை; இப்போது  நான் ஓய்வாக இருக்கிறேன்; என் மனைவியின் துணை அவசியம் என உணருகிறேன்; ஆனால் என் கூட என் மனைவி இல்லையே என ஏங்குகிறேன்!  இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள்  ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்!

(அண்ணாத்தே வந்த பாதையின் பயணம் :   பகுதி 1 நிறைவடைந்தது)

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...

தமிழனுக்கு ஓர் இயல்பான வாழ்வியல் அமைதியைத் தருகிறது…

1
 உலகக் குடிமகன் - 32  நா.கண்ணன்   நான் கொரியா செல்வேன் எனக் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், என் ஜப்பானிய ஆய்வை அமெரிக்கர்களும், கனடாக்காரர்களும், ஜெர்மானியரும், ஆங்கிலேயரும் கவனித்தது போல் கொரியர்களும் கவனித்து வருகிறார்கள் என...

சலூன் கிரி மாமா

0
மகேஷ் குமார்   கிரி மாமாவின் நிஜப்பெயர் அதுதானா என்பது எனக்குத் தெரியாது. அவரை முதல் முதலாகப் பார்த்த சலூனின் பெயர் ‘கிரி சலூன்’. அதிலிருந்து அவர் பெயர் கிரி மாமா. நல்ல உயரமும் உடலுமாக,...

குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்   அன்று நள்ளிரவில் அவன் வீடு திரும்பியதும் அவனுக்கு சாப்பாடு போட டேபிளில் தட்டு வைத்தாள். “எனக்கு வேண்டாம்” “ஏன்?” “வெளிய சாப்பிட்டேன்” “ஹோட்டல் உணவு உடம்புக்கு நல்லதில்லை” “நாம தனியா போன பிறகு உன் கையால் சாப்பிடுகிறேன். அதுவரை...

அப்ரைசர் முத்துசாமி

0
மகேஷ் குமார்   திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மெயின் ரோட்டில் இருக்கும் அந்த வங்கியின் வாசலில் காலை 9 மணிக்கே கூட்டம் நெரியும். அந்த இரண்டு தினங்களில்தான் நகைக்கடன் கொடுக்கப்படும். பெரும்பாலானோரின் கையில் ஒரு...