0,00 INR

No products in the cart.

அந்தக் கேள்விக்கு பதில் என்ன?

அண்ணாத்தே வந்த பாதை – 7

எஸ்.பி.முத்துராமன்                எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி

ஜினியின் அதிரடி ஆக்‌ஷன் இமேஜுக்கு முற்றிலும் மாறுபட்டு, அழுத்தமான ஒரு கதையைப் படம் எடுக்கும் எண்ணத்தை எங்களுக்குள் ஏற்படுத்தியது ரஜினி நடித்த ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படம்தான். ஆனால், ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் நடிக்க ரஜினியைச் சம்மதிக்க வைப்பது சிரமமாக இருந்தது. அந்தப் படத்தில் தம்பி, தங்கைகளுக்காக தன்னுடைய வாழ்க்கையைத் தியாகம் செய்யும் அண்ணன் கதாபாத்திரம் ரஜினிக்கு. அண்ணனும், அண்ணியும் எவ்வளவுதான் உழைத்து, உதவிகள் செய்தாலும், கூடப் பிறந்தவர்கள் நன்றி மறந்து விடுகிறார்கள். “ஒரு அண்ணனாக உன்னுடைய கடமையைத்தானே செய்திருக்கிறாய்!” என்று எடுத்தெறிந்து கேள்வி கேட்பார்கள்.

“இவ்வளவு தியாகங்கள் செய்து வளர்த்து ஆளாக்கிய அண்ணனை, கூடப் பிறந்தவர்கள் இப்படி உதாசீனப்படுத்துவார்களா?  நிஜ வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்குமா? நம்பமுடியாததாக இருக்கிறதே!” என்றெல்லாம் ரஜினி கேட்டார். அவர் தன் அண்ணனை மிகவும் மதிப்பவர் என்பதால்,  ‘மரியாதைக்குரிய அண்ணனை, உடன் பிறந்தவர்கள் உதாசீனப்படுத்துவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்பதை நாங்கள் புரிந்துக்கொண்டோம். “உங்களைபோல அண்ணனை தெய்வமாக மதிக்கும் மனிதர்களாக உலகில் எல்லோரும் இல்லை” என்பதையும் அவருக்குப் புரிய வைத்தோம்.

ஐந்தாயிரம் அடி படம் எடுத்து, அதைப் போட்டுக் காட்டிய பிறகு, அந்த கேரக்டர் மீது ரஜினி இன்னும் அதிக ஈடுபாடு ஏற்பட்டு நடிக்க ஆரம்பித்தார்.

‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் ரஜினிக்கு மிக அழுத்தமான ஒரு கேரக்டர் என்றாலும், ரஜினி ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை ஓரளவுக்குப் பூர்த்தி செய்யும் விதமாக அவருக்கு ஒரு காதலியை உருவாக்கினோம்; ரஜினிக்கும் அவருடைய காதலியான (எம்.ஜி.ஆர்) சங்கீதாவுக்கும் ஒரு டூயட் பாடலும் உண்டு. “கண்மணியே..காதல் என்பது” என்ற இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவான பாடல் அற்புதமானதொரு மெலடி. அந்தப் பாடல் காட்சியை ஒளிப்பதிவாளர் பாபு படம் பிடித்த விதம் பெரிய அளவில் பேசப்பட்டது. காரணம் அந்தக் கலத்தில், இன்று இருப்பதுபோல கிராஃபிக்ஸ் வசதி கிடையாது. ஆனாலும், ஸ்பெஷலாக லைட்டிங் செய்தும், பிரத்யேகமான லென்ஸ்களையும், ஃபில்டர்களையும் பயன்படுத்தியும் , கேமரா மேன் பாபு புதுமையான வகையில் ஒளிப்பதிவு செய்தார். அந்தக் பாடல் காட்சியில் ரஜினி தன் கேரக்டரை உணர்ந்து, மிக மென்மையாகத் தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.

துடுக்குத்தனம் மிகுந்த
கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமானவர் என்று கருதப்பட்ட படாபட் ஜெயலட்சுமிதான் ரஜினியின் மனைவியாக நடித்தார். ஆனால், இந்தப் படத்தில் ஒரு ஏழை குடும்பத்தலைவி ரோலை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு நடித்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒரு காட்சியில், குழந்தை பாலுக்கு அழும். குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக பால் பவுடர் டப்பாவைத் திறந்தால் அது காலியாக இருக்கும். அந்த டப்பாவில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக் கரைத்து அதைக் குழந்தைக்குக் கொடுப்பார். ஆனால் குழந்தை அதைக் குடிக்காமல் துப்பிவிட்டு பசியில் துடிக்கும். அதைத் தாங்கிக் கொள்ள முடியாத தாயாக படாபட்டின் நடிப்பு, பார்க்கிறவர்களைக் கலங்க வைக்கும்.

வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களையும், அவமானங்களையும், வேதனைகளையும் அனுபவித்துவிட்டு, ஒரு எழுத்தாளராக தன் வாழ்க்கைக் கதையை எழுதுகிறபோது, மக்கள் மத்தியில் அந்தக் கதைக்கு மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவரது எழுத்துக்கு விருது அளித்து அங்கீகரிக்கப்படுகிறது. அப்போது, தன் அண்ணனுடைய பெருமையை உணர்ந்து, அவரது தம்பியும், தங்கையும் அவரிடம் திரும்பி வருகிறார்கள். நன்றிகெட்ட தம்பி, தங்கைகளை ரஜினி ஆடும் நாற்காலியில் அமர்ந்து ஆடிக்கொண்டே பார்க்கிறார்.  ‘கஷ்டப்படும்போது பார்க்க வராதவர்கள் வெற்றி பெறும்போது வருகிறார்களே’ என்ற எண்ணத்தில் சிரிக்கிறார். சிரித்தபடியே, ‘இதுதான் உலகம்’ என்ற தத்துவத்தை உணர்ந்த நிலையில் உயிர் பிரிகிறது. ஆடும் நாற்காலியின் ஆட்டம் நிற்கிறது. சோகம் சூழ்கிறது.

படத்தைப் பார்த்துவிட்டு, சில விநியோகஸ்தர்கள், படம் ரொம்ப நல்லா இருக்கு; ரஜினியின் அமைதியான நடிப்பு ரொம்ப வித்தியாசமா, இதுவரை பார்க்காத ஒரு விஷயம்; ஆனால், கமர்ஷியலாக படம் ஓடுமா? ரஜினி ரசிகர்கள் இப்படி ஒரு படத்தை ஏற்றுக்கொள்ளுவார்களா? என்று படத்தின் வெற்றியைப் பற்றி லேசான அவநம்பிக்கையோடு பேசினார்கள். அதற்கு நாங்கள், “வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆகிறது? முதல் மூணு நாட்கள் அதாவது, ஞாயிற்றுக் கிழமை வரை விட்டு விடுங்கள்; ரஜினி ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு ஏமாற்றம் அடைவார்கள்; சிலர் கலாட்டாகூட பண்ணலாம்; அதுபற்றியெல்லாம் எங்களுக்குத் தகவல் சொல்லவே வேண்டாம். ஆனால், “திங்கட்கிழமையிலிருந்து படத்துக்குப் பெண்கள் கூட்டம் வருகிறதா என்று எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று சொன்னோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே, திங்கட்கிழமையிலிருந்து பெண்கள் கூட்டம் தியேட்டரில் அலைமோத ஆரம்பித்தது. படம் வெற்றி என்பதைச் சொல்லவும் வேண்டுமா? சொல்லப்போனால். ரஜினிக்கு மிக அதிக அளவில் பெண்கள் கூட்டம் வர ஆரம்பித்தது இந்தப் படத்துக்குப் பிறகுதான்.

படத்தின் வெற்றிக்கு இன்னொரு முக்கியக் காரணம் பத்திரிகை நண்பர்கள். அவர்கள் எல்லோருமே, படத்தைப் பார்த்த்துவிட்டு, கைத்தட்டிப் பாராட்டியதுடன் இல்லாமல், ரஜினியினுடைய மாறுபட்ட பாத்திரப் படைப்பையும், நடிப்பையும் வெகுவாகப் பாராட்டி எழுதினார்கள். எங்களின் வித்தியாசமான முயற்சியைப் பாராட்டி எழுதியதன் மூலமாக, அது ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பையே மாற்றி, அவரது அமைதியான நடிப்பை ஏற்றுக்கொள்ளும்படி செய்துவிட்டார்கள்.

ரஜினியை முதிய வயதுடையவராகக் காட்டும்போது, மேக் அப் மிக இயல்பாக இருக்க வேண்டும் என்று சிரமம் எடுத்து மேக்-அப் செய்த
மேக்-அப் மேன் முத்தப்பா பாராட்டுக்குரியவர்.  ‘ஆறிலிருந்து அறுபது’ வரை படம் குறித்த இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அந்தப் படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது ரஜினிக்குக் கிடைத்தது. அதேபோல சிறந்த இயக்குனருக்கான விருது எனக்குக் கிடைத்தது.

“அது எப்படி சார் ரஜினி, கமல் என்ற தமிழ்த்திரைப் பட உலகின் இரண்டு ஜாம்பவான்களை ஒரே சமயத்தில் இயக்க உங்களால் முடிந்தது?” பத்திரிக்கை மற்றும் டி.வி. பேட்டிகளிலும் இந்தக் கேள்வியைத் தவறாமல் கேட்பார்கள். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுவதற்கு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த பதில் என்ன?

(தொடரும்)

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

சிவாஜி வீட்டுக்குப் பக்கத்தில்…

1
 ஒரு நிருபரின் டைரி - 26 - எஸ். சந்திரமெளலி   நான் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2021 வரை சென்னை தி. நகர் தெற்கு போக் ரோடில் வசித்து வந்தேன்.  சிவாஜிக்கு  ‘செவாலியே’ விருது...

நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி கதி கலங்க வைத்த நகரம்

0
 உலகக் குடிமகன் -  25   - நா.கண்ணன் ஜப்பான் குறைந்த காலத்தில் மிக உயர்ந்த நாடாக மாறியதற்குக் காரணங்கள் உள்ளன. முதலில் அவர்கள் ஐரோப்பிய வாழ்வியலைக் கடைப்பிடித்தனர். ஐரோப்பிய தரம் வாழ்வில் இருக்க வேண்டும் எனப்பாடுபட்டனர்....

பெயிண்டர் துரை

0
மனதில் நின்ற மனிதர்கள் - 1 மகேஷ் குமார்   நல்ல நெடு நெடுவென ஒடிசலான தேகம். சுமார் 40 வயது இருக்கலாம். சுருள் சுருளாக தலைமுடி. ஏதேதோ பெயிண்ட் துளிகள் தெளித்து, சரியாக சுத்தம் செய்யாமல்...

   குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்    நவம்பர் 1990 கொட்டும் மழையில் ஆட்டோ பிடித்து மைதிலி பேருந்து நிலையத்தில் நுழைந்தபோது பேருந்து ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. தன் சேலையைப் பற்றிக் கொண்டிருந்த மூன்று வயது மகள் மாயாவை...

சாத்தானின் வக்கீல்

0
ஒரு நிருபரின் டைரி - 25 - எஸ். சந்திரமெளலி   ஆங்கில நியூஸ் சேனல்களில் மூத்த பத்திரிகையாளர்கள் பிரபலங்களுடன் உட்கார்ந்துகொண்டும், நின்றுகொண்டும், நடந்துகொண்டும் உரையாடும் நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது கரன் தாபருடைய...