பொலிடிகல் பீசா

பொலிடிகல் பீசா
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on: 

 பிரியங்காவின் ஆட்டம் ஆரம்பம்!

உத்தரப் பிரதேசம்:

பிரியங்கா காந்தி, உ.பி. சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரசை தூசி தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார். மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து, பா.ஜ.க.வுக்கு வலுவான எதிர்ப்பு கொடுத்து வீழ்த்துவதே அவர் திட்டம் என்கிறார்கள் காங்கிரஸார். அண்மையில், அவர் டெல்லியிலிருந்து, லக்னோவுக்கு விமானத்தில் சென்றபோது, அதே விமானத்தில் பயணம் செய்த சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.  அடுத்து, அவர் மீண்டும் டெல்லிக்கு தனி விமானத்தில் திரும்பியபோது, விமான நிலையத்தில் இருந்த ராஷ்டிரிய லோக் தள் கட்சியின் தலைவரான ஜெயந்த் சவுத்ரியை வற்புறுத்தி தன்னுடன் விமானத்தில் டெல்லி அழைத்துச் சென்றது, பலரது கவனத்தை ஈர்த்தது. ஆக, அம்மையார் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க!

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிராவில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரது உறவினரான  மகாராஷ்டிரா
நவ நிர்மாண் சேனா தலைவர்
ராஜ் தாக்கரேவின் அரசியல் வாழ்க்கை  இறங்குமுகமாகவே உள்ளது. 2009ல், மகாராஷ்டிர சட்டசபையின் மொத்தமுள்ள 288 இடங்களில் 13 இடங்களில் ஜெயித்த அவரது கட்சிக்கு, இப்போது சட்டசபையில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.தான். ராஜ் பற்றின லேட்டஸ்ட் நியூஸ் அவரது ஜாகை மாற்றம்தான். மும்பையின் சிவாஜி பார்க் ஏரியாவில்
"சிவ் தீர்த்" என்ற பெயர் கொண்ட புது ஆறு மாடி பங்களாவில் குடியேறி இருக்கிறார். வீட்டிலிருந்து பார்த்தால் சிவசேனாவின் தலைவர்
பால் தாக்கரே நினைவகம் தெரிகிறது. பக்காவாக வாஸ்து பார்த்து கட்டப்பட்டது சிவ் தீர்த். கடந்த 25 ஆண்டுகளில் ராஜ் தாக்கரேவுக்கு இது மூன்றாவது ஜாகை மாற்றம். ராஜ் தாக்கரேவின் அரசியல் மறுவாழ்வுக்கு இந்த இடமாற்றமும், வாஸ்துவும் கை கொடுக்கிறதா என்று பார்க்கலாம்!

ஜார்கண்ட்:

ஏற்கெனவே மூன்று கட்சி கூட்டணி ஆட்சியை நடத்துவதில் மிகுந்த  சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறார் ஜார்கண்ட் மாநில முதலமைச்சரான ஹேமந்த் சொரன். இப்போது, தலைவலியோடு திருகுவலியாக குடும்பத்துக்குள்ளே இருந்தே பிரச்னை. ஹேமந்த் சொரனின் அண்ணன் துர்கா சொரன். அவர் இறந்துவிட்டார். தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் துர்கா சொரனின் மனைவி  சீதா சொரன், தன் மகள்களோடு சேர்ந்து கணவர் பெயரில் "துர்கா சொரன் சேனா" என்ற  ஒரு அமைப்பினைத் துவக்கி, 'ஜார்கண்ட் தனி மாநிலம் உருவாகக் காரணமானவர்களை உரிய முறையில் கௌரவிக்க வேண்டும்' என போர்க்கொடி எழுப்பி உள்ளார்.  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், குடும்பத்தின் "தல"யுமான சிபு சொரன், எல்லாவற்றையும் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். தல என்ன செய்யப்போகுது என்பதே இப்போது ஜார்கண்டின் தலையாய கேள்வி!

மேற்கு வங்காளம்:

மேற்கு வங்காள முதல்வர் மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜிதான் கட்சியில் நெ.2 என்பது எல்லோரும் அறிந்ததுதான். வழக்கமாக  நவம்பரில் தன் பிறந்த நாளன்று, தன் வீட்டுக்கு அருகில் உள்ள மம்தாவின் வீட்டுக்கு பாரம்பரிய பெங்காலி உடையில், காரில் சென்று சந்தித்து, அவரிடம் ஆசிப் பெறுவது அவரது வழக்கம். ஆனால் இந்த வருடம், அபிஷேக் இளமை ததும்ப, ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்து, தன் வீட்டு வாயிலில் கூடி இருந்த தொண்டர்களுடன் உற்சாகமாக அளவளாவினார். அடுத்து, காரை விடுத்து, மம்தாவின் வீட்டுக்குத் தொண்டர்கள் படை சூழ நடந்தே சென்றார். ஏன் இந்த மாற்றம்? என கட்சி அளவிலும், மீடியாவிலும் கேள்வி எழுந்துள்ளது! வாரிசு அரசியல்?

பீகார்:

பீகார் முதலமைச்சர் நித்திஷ் குமார் 'விபாசனா தியானம்' பயின்று, தினமும் யோகா, தியானம் என்று  சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். விபாசனாவின் பயனை அனுபவபூர்வமாக உணர்ந்த நித்திஷ், இப்போது அதனை மாநில அரசின் அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் விரிவாக்க உத்தரவு இட்டிருக்கிறார். யோகா பயிற்சிக்காக அவர்களுக்கு 15 நாட்கள் லீவு கூட அனுமதிக்கப்பட்டுள்ளது. துருபிடித்த அரசு இயந்திரம் – 'யோகா, தியானம் என்ற எண்ணெய்களுக்கெல்லாம் மசியுமா' என்பதை பொருத்திருந்துதான் பார்க்கணும்!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com