0,00 INR

No products in the cart.

ஜப்பானில் ஒரு நாயர்

 ஒரு நிருபரின் டைரி – 5

 

– எஸ். சந்திரமெளலி

 

ழுத்தாளர் சுஜாதாவுக்குப் பல்வேறு துறைகளிலும் நெருக்கமான நண்பர்கள் நிறையப் பேர் உண்டு. அவர்களுள் ஒருவர் ஷங்கர் ரமணி. அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் பல எண்ணெய்க் கிணறுகளுக்குச் சொந்தக்காரர். அதைத் தவிர ஏகப்பட்ட பிசினஸ். அவர் 1985-ல், ஒருமுறை தன் மகன் அருணுக்கு உபநயனம் செய்விப்பதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அவரைப் பற்றி எதேச்சையாக எழுத்தாளர் சுஜாதா, கல்கி ராஜேந்திரனிடம் சொல்ல, உடனே சவேரா ஓட்டலில் தங்கி இருந்த ஷங்கர் ரமணியைச் சந்தித்து பேட்டி காணும்படி ஆசிரியர் கல்கி ராஜேந்திரனிடமிருந்து எனக்குத் தகவல் வந்தது.

சவேரா ஓட்டலுக்குப் போய் ஷங்கர் ரமணியைச் சந்தித்தேன். துளியும் பந்தா இல்லாமல், சாதாரணமான ஒரு பேண்ட், ஜிப்பா அணிந்துக்கொண்டிருந்த அவர், தன்னைப் பற்றிச் சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “இவ்வளவு பெரிய மனிதருக்கு முன்னால் சரிக்கு சரியாக சோபாவில் உட்கார்ந்து உரையாடிக்கொண்டிருக்கிறோமே” என்ற பிரமிப்புடனே அந்த உரையாடல் நிகழ்ந்தது.

நாமக்கல்லில் அந்தக் காலத்து மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர் ஷங்கர் ரமணி. அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், அதனைத் தொடர்ந்து சென்னை பிரசிடென்ஸி கல்லூரியிலும் அவர் எடுத்துப் படித்த சப்ஜெக்ட், ஜியாலஜி. படிப்பை முடித்துவிட்டு, இங்கேயே அடுத்த மூன்றாண்டுகளில் ஐந்தாறு கம்பெனிகளில் வேலை பார்த்தார். கடைசியாக வேலை பார்த்த கம்பெனிக்கு ஒரு கனடா நாட்டு கம்பெனியுடன் கொலாபரேஷன். கனடாவிலிருந்து தொழில் நிபுணர்கள் இங்கே வந்து போவார்கள். அவர்களுடன் ஷங்கர் ரமணிக்குத் தொடர்பு ஏற்பட, கனடாவுக்குப் போனால் பிரகாசமான எதிர்காலம் இருப்பதைப் புரிந்துக்கொண்டார். 1965-ல் கனடாவுக்குச் சென்றுவிட்டார்.

கனடாவிலும் சரி, அதன் பிறகு அமெரிக்காவிலும் சரி, வாழ்க்கையில் ஏகப்பட்ட மேடுபள்ளங்களைச் சந்தித்தார். 1970-களில் பிசினஸ் பார்ட்னர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகளால் பெரும் நஷ்டம். பெருத்த அடி வாங்கினாலும் மனுஷர் அசந்துபோகவில்லை. “பேசாமல் எங்கேயாவது மாதச் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்துவிடு” என்று இந்திய நண்பர்கள் சொன்ன ஆலோசனையைப் புறக்கணித்துவிட்டு, மறுபடி பிசினஸை ஆரம்பித்தார்.

விழுந்தபின் எழுந்த கதையைச் சொன்னார் ஷங்கர் ரமணி: “அமெரிக்காவைப் பொருத்தவரை கடுமையான உழைப்பு என்றைக்குமே வீண் போகாது; எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நான் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டேன் என்பதைவிட, நானே முயன்று ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அதைச் சாதித்தவுடன், ‘அப்பாடா!’ என்று ஓய்ந்துபோகவில்லை; எதையோ பெரிசாகச் சாதித்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்ளவில்லை; அடுத்த இலக்கு என்ன என்று நிர்ணயம் பண்ணிக்கொண்டு புறப்பட்டுவிடுவேன்.”

அமெரிக்காவில் பணத்தைவிட நேரத்துக்குத்தான் அதிக மதிப்பு. எனவே, தன் பிசினஸ் விஷயங்களைக் கவனிக்கத் தோதாக, அவர் சொந்தமாகவே ஒரு ஜெட் விமானம் வைத்திருந்தார். ‘இந்தியாவுக்குக் குடும்பத்துடன் வரும்போது சொந்த ஜெட் விமானத்தில்தான் வருவேன்’ என்று அவர் சொன்னபோது, அன்றைய தேதியில் சொந்தமாக ஒரு சைக்கிள் வைத்துக்கொண்டிருந்த நான், பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல அவரைப் பார்த்தேன்.

ஷங்கர் ரமணி ஒரு பரம கிரிக்கெட் ரசிகர். ஒருமுறை இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்குச் சென்றிருந்தபோது, மேட்ச் பார்க்க லண்டன் வந்திருந்தார் ஷங்கர் ரமணி. அங்கே சீரிஸ் முடிந்தவுடன், மொத்த கிரிக்கெட் டீமையும் தன் ஜெட் விமானத்தில் அமெரிக்காவுக்கு ஹைஜாக் செய்துகொண்டுபோய், மேட்ச் ஆட ஏற்பாடு செய்தார். “அமெரிக்காவில் யார் கிரிக்கெட் மேட்ச் பார்க்க வருவார்கள்?” என்று கேட்டபோது, “என் ரத்தத்தை எடுத்து டெஸ்ட் பண்ணிப் பார்த்தா, அது ஏ, பி, ஏபி, ஓ என்று எதுவுமாக இருக்காது. என் ரத்தப் பிரிவு ‘சி’ அதாவது கிரிக்கெட்” என்றார். “எனக்கு நம்ம கிரிக்கெட்டர்களை ஆடவைத்து ஒரு மேட்ச் பார்க்கணுமுன்னு தோணிச்சு! லண்டனிலிருந்து, அமெரிக்காவுக்கு ஒரு டூரை ஸ்பான்சர் பண்ணிவிட்டேன். இந்திய கிரிக்கெட் அணி, அமெரிக்காவில் உள்ள சில லோக்கல் கிரிக்கெட் அணிகளுடன் மேட்ச் ஆடியது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் திரளாக வந்திருந்து அந்த ஆட்டங்களைப் பார்த்து ரசித்தார்கள்” என்று சந்தோஷமாகச் சொன்னவரிடம், “இதற்கு எவ்வளவு செலவாகி இருக்கும்?” என்று கேட்டபோது, “நான் கணக்கு பார்க்கவில்லை” என்று சிம்பிளாகப் பதில் சொல்லிவிட்டார்.

ஷங்கர் ரமணி ஒரு தமிழ் சினிமா கூட எடுத்திருக்கிறார். “சினிமா எடுக்கும் ஆசை எப்படி வந்தது?” சிரித்துக்கொண்டே அவர் சொன்ன பதில்: “எனக்கு சினிமா பத்தி ஒண்ணும் தெரியாது. சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பிசினஸ் வென்ச்சர் மாதிரி டிரை பண்ணுகிறேன். ரைட்டர் சுஜாதா கதை, வசனம் எழுதறார். இன்ஃபாக்ட், அவரோட ரசிகையான என் மனைவி அபயத்தோட சாய்ஸ்தான் சுஜாதா. சினிமா எடுப்பது, இட்ஸ் ஜஸ்ட் அவுட் ஆஃப் கியூரியாசிடி.”

அடுத்து, “உங்களைப் போல சினிமா அனுபவம் இல்லாதவர்கள் சினிமா எடுப்பது ரொம்ப ரிஸ்க் இல்லையா?” என்று கேட்டேன்.

“எதில்தான் ரிஸ்க் இல்லை? நான் லீசுக்கு எடுக்கிற நிலத்தைத் தோண்டிப் பார்க்கிறபோது, எண்ணெயோ, வாயுவோ கிடைக்காமல் போகிற ரிஸ்க் இல்லையா? அதுபோலத்தான். எடுக்கிற படத்துல லாபம் வந்தா, அதை வெச்சு இன்னொரு படம் எடுப்பேன்.” என்றார் ரொம்ப கூலாக.

ஷங்கர் ரமணி தயாரித்த படத்தின் டைட்டில்: உன்னிடத்தில் நான். சுஜாதாவின் மேடை நாடகங்களை டிவி சீரியலாக எடுத்த அருண் வீரப்பன்தான் டைரக்டர். இசை தாயன்பன். கேமரா: அஷோக் குமார். நேதாஜி, ஷியாம், நளினி, தேவி லலிதா என அன்றைய தினம் அத்தனை பிரபலமில்லாதவர்கள் நடித்தார்கள். கபில் தேவ், ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன் போன்ற கிரிக்கெட்டர்கள் ஷங்கர் ரமணியின் முகதாட்சணியத்துக்காக படத்தில் கௌரவத் தோற்றத்தில் வந்து போனார்கள். படம் பெரிசாய் வெற்றி பெறவில்லை; அவரும் அது பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

ஷங்கர் ரமணியைப் போல நான் சந்தித்த இன்னொரு மெகா பணக்கார நபர் ஒரு ஜப்பானியர். பெயர்: நாயர்சான். (நாயர்-சான் என்றால் மரியாதைக்குரிய நாயர் என்று அர்த்தமாம்) தன் இருபது வயதில் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குப் போன நாயர்சான், அங்கிருந்தபடியே இந்திய சுதந்தரத்துக்குப் போராடியவர். ஜப்பான் வாழ் இந்தியர்களில் முக்கியமானவர். அவரை ஜப்பானிய சக்ரவர்த்திகூட விருந்தளித்து கௌரவித்திருக்கிறார். அவர் சென்னை வந்திருந்தபோது, அன்றைய அமைச்சர் ராசாராம் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்.

அப்போதுதான் எனக்கு நாயர்சானைச் சந்தித்துப் பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது. சோழா ஷெராட்டனின் காபி ஷாப்பில் அவரைச் சந்தித்தேன். என் வாழ்க்கையில் அன்றைக்குத்தான் நான் முதல் தடவையாக சோழா ஹோட்டலில் காபி சாப்பிட்டேன். அந்த சந்தோஷம் எனக்கு அடுத்த சில நாட்கள்வரை நீடித்தது.

நாயர்சான் பேட்டியின்போது, “ஜப்பானியர்கள் அமெரிக்க ஆதரவாளர்களா? இல்லை ருஷ்யா ஆதரவாளர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன அழுத்தமான பதில்: “இரண்டுமில்லை; ஜப்பானிய ஆதரவாளர்கள்.”

ஐய்யப்பன் பிள்ளை மாதவன் நாயர் என்ற இயற்பெயர் கொண்ட நாயர்சான் கேரளாவில் பிறந்தவர். படிக்கிற காலத்திலேயே சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். நேதாஜியின் கம்பீரமான தலைமையால் ஈர்க்கப்பட்டு, அவருடன் தன்னை இணைத்துக்கொண்டவர். ஜப்பானுக்குப் போய், அங்கே க்யோட்டா பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் படித்தவர்.

இந்திய சுதந்தரத்துக்குப் பிறகு, ஜப்பானிய அரசியலில் நுழைந்ததுடன், தொழிலதிபராகவும் ஒளிர்ந்தவர். ஜப்பானில் டோக்கியோவில் அவர் ஆரம்பித்த நாயர் ரெஸ்டாரெண்ட் மிகவும் பிரபலமானது. அங்கே முதல் முறையாகச் செல்லும் எவருக்கும் உணவு இலவசம். அடுத்த முறையிலிருந்து காசு வாங்கிக்கொள்வார். ‘இந்திரா’ என்ற பெயரில் இவர் தயாரித்து விற்பனை செய்த மசாலா ரகங்கள் ஜப்பானில் வெகு பிரபலம்.

தான் ஒரு ஜப்பானியப் பெண்ணை மணந்தாலும், தன் இரண்டு மகன்களுக்கும் கேரளாவிலிருந்து பெண் எடுக்கவேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனாலும் அவருக்கு ஜப்பானியப் பெண்களே மருமகள்களாக அமைந்தார்கள்.

1990-ல் நாயர்சான் இறந்தார். ஆங்கிலத்தில் வெளியான அவரது வாழ்க்கை வரலாறை பத்திரிகையாளர் ராணிமைந்தன் மொழிபெயர்க்க, பத்திரிகையாசிரியர் சாவி புத்தகமாக வெளியிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னால் நாயர்சானின் வாழ்க்கையை ’நாயர்சான்’ என்ற பெயரிலேயே ஒரு சினிமாவாக எடுத்தார்கள். நாயர்சானாக நடித்தவர் மோகன்லால். அதில் ஜாக்கிசான்கூட நடித்ததாக நினைவு.

நாயர்சானை நான் சந்தித்துப் பல வருடங்கள் கழித்து, ’பணம்’ என்ற தலைப்பில் பிரபலங்கள் பலரும் சொன்ன விஷயங்களைக் கேட்டு கல்கியில் வாராவாரம் எழுதினேன். அந்த வரிசையில் பத்திரிகை ஆசிரியர் சாவியை சந்தித்தபோது, அவர் நாயர்சான் பற்றி நிறையப் பேசினார். அப்போது அவர் நாயர்சான் பற்றிச் சொன்ன ஒருவிஷயம் மிகவும் சுவாரசியமானது.

சாவி பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தபோது ஒருசமயம் திடீரென்று சாவிக்குப் பண நெருக்கடி. என்ன செய்வதென்று தடுமாறிப் போனார். திடீரென்று அவருக்கு ஒரு ஐடியா. ஜப்பானில் வசித்த நாயர்சான், சாவிக்கு மிகவும் நெருக்கம். நாயர்சான், ஜப்பானில் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, விமானம் ஏறி நேரே ஜப்பானுக்குப் போய்விட்டார் சாவி. நாயர்சானைச் சந்தித்து, தன் நிலைமையைச் சொன்னதும், மறுவினாடி அவர் சொன்னது, “உங்களுக்கு இப்போ எவ்வளவு பணம் வேணும்? இதுக்குப் போயி இவ்வளவு தூரம் நேரில் வரணுமா? ஒரு போன் செய்திருந்தால் போதுமே! நானே அனுப்பி வைத்திருப்பேனே!” என்பதுதான்.

இன்றக்கு இந்த கட்டுரையில் பேசப்பட்டவர்கள் மறைந்துவிட்டனர். ஆனால் பத்திரிகையாளனின்  நினைவுகள் மறையவதில்லை.

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

குருடர்களின் யானை

0
ஒரு நிருபரின் டைரி - 21 - எஸ். சந்திரமெளலி லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம், “லுக் அவுட்” என்ற லயோலா கல்லூரியின் மாணவர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். நாங்கள் அதன் தமிழ்ப்...

தேவ மனோகரி – 21

1
தொடர்கதை                                               ...

இது கடவுளின் ருசியுள்ள நாடு

0
ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 21 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா   கொச்சியிலிருந்து அதிரப்பள்ளிக்குப் போகும் வழியில்தான் அந்த டீக்கடை இருக்கிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகுமாரன் தம்பியின் ‘விளிச்சு விளி கேட்டு’ (அழைத்தாய் கேட்டேன்) என்ற...