0,00 INR

No products in the cart.

அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பட்டதா? இணைக்கப்பட்டதா?

– எஸ். சந்திர மௌலி

 

த்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருக்கும் விஷயம் டெல்லி ராஜ்பாத்தில் இருந்த ’அமர் ஜவான் ஜோதி’ என்ற அணையா ஜோதியை இடம்மாற்றியது. “சென்டிரல் விஸ்டா புராஜெக்ட்” என்ற பெயரில் மத்திய அரசு, பாராளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமானவைகளும் இருக்கும் ரைசினா ஹில்ஸ் பகுதியில் ஒரு புதிய கட்டிட நிர்மாணத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அங்கே புதிய பாராளுமன்றம், மத்திய அரசின் புதிய தலைமைச் செயலகம், துணை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இல்லங்கள்-அலுவலகங்கள் உள்ளிட்ட பல புதிய கட்டிடங்கள் கட்டப்பட இருக்கின்றன. இந்தத் திட்டத்தின்படி, ராஷ்டிரபதி பவனுக்கும் இந்தியா கேட்டுக்கும் இடையிலான சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள ’ராஜ்பாத்’ என்ற பிரதான சாலை பகுதியிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அங்கமாக, இந்தியா கேட்டில் அமைக்கப்பட்டிருந்த அமர் ஜவான் ஜோதி, அருகில் இருக்கும் தேசிய போர் நினைவுச் சின்ன வளாகத்தில் இருக்கும் அணையா ஜோதியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. அதன் விளைவாகவே சர்ச்சை கிளம்பியுள்ளது.
முதலில் இந்தியா கேட் மற்றும் அமர் ஜவான் ஜோதியின் கதையைத் தெரிந்துகொள்ளலாமா?

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள முக்கியமான நினைவுச் சின்னங்களில் இந்தியா கேட்டும் ஒன்று. இதன் முந்தைய பெயர் அனைத்திந்திய போர் நினைவுச் சின்னம். 1914 முதல் 21 வரை முதல் உலகப்போர் நடைபெற்றபோது, பிரான்ஸ், ஈரான், கிழக்கு ஆப்ரிக்கா, மெசபடோமியா போன்ற பகுதிகளுக்குச் சென்று போரில் பங்கேற்று, உயிர்த்தியாகம் செய்த பிரிட்டிஷ் இந்தியா ராணுவத்தினரது நினைவாக அமைக்கப்பட்டதுதான் இந்தியா கேட். பிப்ரவரி 1921ல் துவங்கி, இதனைக் கட்டி முடித்துத் திறந்து வைக்க 1931 ஆகிவிட்டது. போரில் உயிர்த்தியாகம் செய்த 13,300 ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்கள் இங்கே பொறிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சரித்திரப் பின்னணி கொண்ட இந்தியாகேட்டில் 1971ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடனான வங்காள தேச விடுதலைப் போரில் இந்தியா பெற்ற வெற்றியைக் குறிக்கும் வகையிலும், பல்வேறு போர்களிலும் நம் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த பாதுகாப்புப் படையினரது வீரத்தைப் போற்றும் வகையிலும் அங்கே ஒரு அணையா ஜோதி அமைக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இந்த அணையா ஜோதியைத் துவக்கி வைத்தார். இங்கு குத்திட்டு நிற்கும் ராணுவ வீரரது துப்பாக்கி, அதன் மீது ராணுவ வீரரது இரும்பு ஹெல்மெட் ஆகியவற்றை இந்திய ராணுவத்தின் குறியீடுகளாகக் காணலாம். இங்கே நான்கு ஜோதிகள் உண்டு. சாதாரண நாட்களில் ஏதாவது ஒன்று மட்டும் எரிந்துகொண்டிருக்கும். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களில் நான்கு ஜோதிகளும் சுடர் விட்டு எரியும். 1972ஆம் ஆண்டில் இந்திராகாந்தியால் துவக்கி வைக்கப்பட்ட தருணம் முதல் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த ஜோதிகள் தொடர்ந்து சுடர் விட்டுக் கொண்டிருக்கின்றன. 2006 ஆம் ஆண்டு வரை இந்த ஜோதிகள் எரிவதற்கு எல்.பி.ஜி. எரிவாயு பயன்படுத்தப்பட்டது. ஆனால், 2006ஆம் ஆண்டு முதல் குழாய் மூலமாக வரும் இயற்கை எரிவாயு கொண்டு ஜோதி ஒளிர்கிறது. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அங்கு சென்று மரியாதை செலுத்துவது மரபு.

புதிய தேசிய போர் நினைவுச் சின்னம் எங்கே உள்ளது?
இந்தியா கேட்டுக்கு அருகிலேயே 40 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டு, 2019ல் பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டது புதிய தேசிய போர் நினைவுச் சின்னம். 2019ல், இங்கும் ஓர் அணையா ஜோதியை மோடி ஏற்றிவைத்தார். இங்கே ஒன்றுக்குள் ஒன்றாக நான்கு வட்டப்பகுதிகள் உள்ளன. “ரக்ஷா சக்ரா” என்ற முதல் வட்டப் பகுதியில் தேசத்தைக் காக்கும் ராணுவ வீரர்கள் போல மரங்கள் கம்பீரமாக நிற்கின்றன. “தியாக சக்ரா” என்ற இரண்டாவது வட்டப்பகுதியில் உள்ள சுவர்களில் பொன்னெழுத்தில் தியாகம் செய்த வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட சலவைக் கற்கள் பதிக்கப்பட்ட சுவர்கள் உள்ளன. இன்றைய தேதியில் இந்திய சுதந்திரத்துக்குப் பின் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த 26,466 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. “வீர சக்ரா” என்ற மூன்றாவது பகுதியில் இந்திய ராணுவத்தினர் பங்கேற்ற போர்க்காட்சிகள் மியுரல் ஓவியங்களாக இடம்பெற்றுள்ளன. அதன் உள்ளே இருக்கும் பகுதியில் அணையா ஜோதியும், இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான ‘பரம் வீர் சக்ரா’ வழங்கி கௌரவிக்கப்பட்ட 21 பேர்களின் மார்பளவு சிலைகள் இடம்பெற்றுள்ளன.

இங்கிருக்கும் அணையா ஜோதியுடன்தான் அமர் ஜவான் ஜோதி இணைக்கப்பட்டது. ராணுவ வீரர்களின் அணிவகுப்புக்குப் பின்னர் நீண்ட கழியின் நுனியில் அமர் ஜவான் ஜோதியிலிருக்கும் சுடர் கொளுத்தப்பட்டு அந்த சுடரை புதிய போர் சின்ன ஜோதிக்கு ராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஜோதியுடன் இணைக்கப்பட்டது.

சரி! அமர் ஜவான் ஜோதியை, தேசிய போர் நினைவுச் சின்ன வளாகத்தில் உள்ள ஜோதியுடன் இணைத்ததற்கு என்ன காரணம்?

2019ல் தேசிய போர் நினைவுச் சின்னம் , இந்தியா கேட்டில் இருந்து சிறிது தூரத்தில் அமைக்கப்பட்டது. அங்கேயும் ஒரு அணையா ஜோதி உள்ளது. முக்கிய தினங்களில் ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்கள் இங்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இப்போது அமர் ஜவான் ஜோதிக்கு வந்து மரியாதை செய்வதில்லை. எனவே, அமர் ஜவான் ஜோதியின் அணையா விளக்கினை, தேசிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள ஜோதியுடன் இணைத்துவிட்டது” என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

“அமர் ஜவான் ஜோதி” என்பது இந்திய ராணுவத்தினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், வாரிசுகள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. என்னைப் பொறுத்தவரை, டெல்லி செல்லும்போது, இந்தியா கேட்டுக்குச் சென்று அமர் ஜவான் ஜோதி முன் நின்று உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களை நினைத்து, சில நிமிடங்கள் கண் மூடி அஞ்சலி செலுத்துவது எனது வழக்கம். இப்போது, அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவுச் சின்ன வளாக ஜோதியோடு இணைக்கப்பட்டுவிட்ட நிலையில், இனி நான் அங்கு சென்று அஞ்சலி செலுத்துவேன். ஆனாலும், இந்தியா கேட்டுக்கும், அமர் ஜவான் ஜோதிக்கும் என் இதயத்தில் என்றுமே தனி மதிப்பும், மரியாதையும், பெருமையும் உண்டு” என்கிறார் இந்திய ராணுவத்தின்
ஜாட் ரெஜிமெண்ட்டில் பணியாற்றிய மேஜர் நாராயணன். மேலும்,
“பங்களாதேஷ் போர், கார்கில் போர் உள்ளிட்ட அனைத்து இந்தோ-பாக் போர்களிலும் எங்களது ஜாட் ரெஜிமெண்ட்டின் பங்கு குறிப்பிடத்தக்கது” என்று பெருமையோடு கூறுகிறார் மேஜர் நாராயணன்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார். ‘‘ராணுவ வீரர்களுக்காக 50 ஆண்டாக தொடர்ந்து ஒளிர்ந்து வந்த அமர் ஜவான் ஜோதியை மீண்டும் ஒளிரவைப்போம். சிலரால் தேசபக்தியையும், தியாகத்தையும் புரிந்துகொள்ள முடியாது’’ என்று பதிவிட்டுள்ளார்.

அமர் ஜவான் ஜோதி விவகாரத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அமர்ஜவான் ஜோதியில் உள்ள விளக்கு அணைக்கப்படவில்லை. தேசிய போர் நினைவு சின்னத்தில் உள்ள விளக்குடன் இணைக்கப்படுகிறது. 1971ல் நடந்த போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் மட்டும் தான் அமர்ஜவான் ஜோதியில் உள்ளது. மற்ற போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர் அங்கு இல்லை.சுதந்திரத்திற்கு பிறகு நடந்த போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவு சின்னத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு அஞ்சலி செலுத்துவதே அனைத்து வீரர்களுக்கும் செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாகும். கடந்த 70 ஆண்டுகளாக தேசிய போர் நினைவு சின்னம் அமைக்காதவர்கள், வீரமரணம் அடைந்த வீரர்கள் அனைவருக்கும் உண்மையாக அஞ்சலி செலுத்தப்படுவதை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர் என்கிறது பா.ஜ.க. தரப்பு.

“மோடி அரசின் வரலாற்றை மடைமாற்றும், திரிக்கும் ஒரு முயற்சிதான் இந்த செயல்” என்று விமர்சனம் செய்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான கோபண்ணா. “தேசப்பிதாவான மகாத்மா காந்தியை ஒதுக்கி வைத்து, வல்லபாய் பட்டேலைக் கொண்டாடுகிறது பா.ஜ.க. நவ இந்தியாவின் சிற்பியான, நேருஜியின் பெருமைகளை, சாதனைகளை மறைத்து, நேதாஜிக்கு சிலை என்று அறிவிக்கிறார் பிரதமர் மோடி. பட்டேலும், நேதாஜியும் பெருமைக்குரியவர்கள்தான். அவர்களை பா.ஜ.க. கொண்டாடுவதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்திஜியின் பங்கையும், சுதந்திர இந்தியாவின் முன்னேற்றத்தில் நேருஜியின் பங்கையும் மறைத்து, சரித்திரத்தை திரித்து எழுத முயற்சி செய்யாதீர்கள் என்றுதான் சொல்கிறோம். பாகிஸ்தானுடன் போரிட்டு, சுதந்திர வங்கதேசம் உருவாக்கிய வீரப் பெண்மணி இந்திரா காந்தி. அந்த வெற்றியின் குறியீடாக அமைக்கப்பட்ட அமர் ஜவான் ஜோதியை, இவர்கள் உருவாக்கிய தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இருக்கும் ஜோதியோடு இணைத்து, சரித்திரத்தை மறைக்கப் பார்க்கிறது பா.ஜ.க.வும் அதை இயக்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்.சும்” என்கிறார் கோபண்ணா.

“அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பட்டுவிட்டது” என்கிறது காங்கிரஸும் எதிர்கட்சிகளும் . “இணைக்கபட்டுவிட்டது” என்கிறது ஆளும் கட்சி. இரண்டும் உண்மைதான். “அமர்ஜவான் ஜோதி இனி ஒளிராது என்பதால் அணைக்கப்பட்டுவிட்டது” என்பது உண்மை. தேசிய போர் நினைவுவச் சின்னத்தில் இருக்கும் ஜோதியுடன் அமர்ஜாவன் ஜோதியின் ஒரு பகுதி கலந்துவிட்டதால் இரண்டும் இணைக்கப்பட்டுவிட்டது என்பதும் உண்மைதானே.

1 COMMENT

  1. ஆயிரம் காரணங்கள் கூறினாலும் இந்த ஜோதி இடமாற்றம் பிரகாசிக்க வில்லை. ஏற்பதற்கில்லை!
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

தாய் தந்தை கூட மகன் …மகள் வீட்டுக்கு வரும்போது விருந்தாளிகள் ஆகி விடுகிறார்கள்

நியூக்ளியர் ஃபேமிலி செல்லம் சேகர்   சின்னஜ்சிறிய  குடும்பம் ... தற்காலத்தில் இதுதான் சாத்தியமான ஒன்று என்பது நிதர்சனம்.  “கூட்டு குடும்பம்” என்பது  ஒரு பெரிய தோட்டம் . அதில் பல மலர்கள். அனைத்தும் பூஜைக்கு உரியவை. ...

10 லட்சம் பேர் இவரிடம் ஆங்கிலம் கற்கிறார்கள்

- தனுஜா ஜெயராமன்   போட்டிகளும், சவால்களும் நிறைந்த உலகத்தில் ஒரு பெண் தனியாக நின்று ஒரு துறையில் சாதிப்பதென்பது மிகப்பெரிய விஷயம். அதுவும் சிறிய நகர்புற பிண்ணனியில், அதுவும்  நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த...

7 ஆண்டுகளில் சுமார் 65 ஆயிரம் மாணவ / மாணவியர்களிடம் பாரதியின் கருத்துக்கள்

உரத்த சிந்தனையின் பாரதி உலா தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்   பாரதியின் உயர்ந்த கருத்துக்களை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் உரத்த சிந்தனை அமைப்பின் பாரதி உலா இன்றைய இளைய தலைமுறைக்கு நவீன தொழில்நுட்பத்தில் ஆர்வம்...

ஒவ்வொருவருக்கும் தனிதனியான  ஒரு டியூன் 

2
- ஆதித்யா   இசையோடு பிறந்து இசையோடு  வாழும்  மக்கள்   மேகாலயா மாநிலத்தின்  கிழக்குப் பகுதி  காசி மலைகளுக்குள் ஒளிந்திருக்கும் அழகான கிராமம்  காங்தாங்குக்கு. மேகாலயாவில் உள்ள மூன்று பழங்குடியினத்தில் காசியும் ஒன்று. காங்தாங்கில் காசி இனத்தவர்கள்...

நண்டுகளுக்குத் தனியாக ஒரு மேம்பாலம்

- கிறிஸ்டி நல்லரெத்தினம்   அப்போதுதான் பேய் மழை பெய்து ஓய்ந்திருந்தது! அடர்ந்த காடு. கதிரவன் வெளியே வரட்டுமா வேண்டாமா என தயங்கும் அதிகாலை வேளை. ஏதோ 'சர, சர' என்ற சப்தம் அந்தக் காட்டின் நிசப்தத்தை மெதுவாய்...